Different Plants  
பசுமை / சுற்றுச்சூழல்

நெருப்பின்றி முளைக்காத செடி பற்றி தெரியுமா? வித்தியாசமான 5 செடிகளைத் தெரிந்து கொள்ளலாம்!

தேனி மு.சுப்பிரமணி

செடிகளில், முட்டை இலைச் செடி, நெருப்பை விரும்பும் செடி, உயிர்த்தெழும் செடி, மெதுவாகப் பூக்கும் செடி, பூனைக்குப் பிடித்தமான செடி என்று சில வித்தியாசமான செடிகளும் இருக்கின்றன. இந்த வித்தியாசமான செடிகளைப் பற்றித் தெரிந்து  கொள்ளலாமா?

முட்டை இலைச் செடி!

Conophyttum Calculus

செடிகளில் கோனோபைட்டம் கால்குலஸ் (Conophyttum Calculus) எனும் தாவரவியல் பெயர் கொண்ட செடி ஒன்று இருக்கிறது. தரையில் ஒட்டி வரும் சிறிய செடியான இது ஒரு பாலைவனச் செடியாகும். மேற்கு ஆஸ்திரேலியாப் பகுதியில் வளரும் இச்செடியினுடைய இலைகள் மிகவும் சதைப்பற்று கொண்டவை. சூரியனை மிகவும் விரும்பி வளரும் இச்செடியின் இலைகள் மிகவும் ஆச்சரியமாகவும், அதிசயமாகவும் இருக்கின்றன. இச்செடியின் இலைகள் 2 செ.மீ விட்டம் உடைய முட்டை போல இருக்கின்றன. முட்டைகளை அடுக்கி வைத்தது போல் ஒன்றையொன்று இடித்துக் கொண்டு இருக்கும் இவ்விலைகள் கரும் பச்சை நிறத்துடனும், மேலே வெள்ளை பொடியுடனும் இருக்கின்றன. இவற்றிலிருந்து மிகச்சிறிய 12 மி.மீ அளவுள்ள மஞ்சள் நிறப்பூக்கள் மலர்கின்றன. இப்பூவின் நுனிப்பகுதி பழுப்பு நிறத்தில் இருக்கும். இச்செடிக்கு முட்டையிலிருந்து உயிர்த்தெழும் பூ (Flowering Easter - Egg) என்று இன்னொரு பெயரும் இருக்கிறது.

நெருப்பை விரும்பும் செடி!

Banksia Grandis

செடிகளில் பாங்க்சியா கிராண்டிஸ் (Banksia Grandis) எனும் தாவரவியல் பெயர் கொண்ட செடி ஒன்று இருக்கிறது. ஆஸ்திரேலியாவைத் தாயகமாகக் கொண்ட இச்செடிக்கு சர் ஜோசப் பாங்க்ஸ் என்கிற ஆங்கில அறிவியலாளரின் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இச்செடியினை புல் பாங்சியாஸ் (Bull Banksias) என்ற பெயரிலும் அழைக்கின்றனர்.

இச்செடி 10 முதல் 30 அடி வரையிலான உயரம் வளரக்கூடியது என்பதால், இச்செடியினை மரம் என்று சொல்பவர்களும் உண்டு. இச்செடியில் நெருக்கமாகப் பல கிளைகள் உண்டு. இதனுடைய இலைகள் மிகவும் விசித்திரமானவை. ஒரு அடி நீளம் மட்டுமே இருக்கிறது. இதனுடைய விளிம்பு, பற்கள் போன்று இருக்கும். இலை பச்சை முதல் சாம்பல் பச்சை நிறத்தில் இருக்கும். இதனுடைய பூ மிகவும் அழகாக இருக்கும். பூவைச் சுற்றி பூ வடிச் செதில் அதிகமாக இருக்கும். பூக்கள் பாளை (தூகை) போல் இருக்கும். 

பொதுவாக, தாவரங்களுக்கு நெருப்பு என்றால் மிகவும் ஆபத்தானது. ஆனால், இச்செடிக்கு நெருப்பு தேவையாக இருக்கிறது. இச்செடியின் விதைகள் வெடித்துச் சிதறுவதற்கு நெருப்பு மிகவும் அவசியமாகும். சிறு புதர்கள் நெருப்பு பிடித்து எரியும் போது, ஏற்படும் வெப்பத்தால் இச்செடியின் கனியிலிருக்கும் ஓடு வெடித்து, விதையை வெளியேக் கொட்டுகிறது. வெடித்துச் சிதறினால் மட்டுமே இவ்விதைகள் முளைக்கும். நெருப்பு ஏற்படவில்லை என்றால், இச்செடிகள் முளைப்பது கிடையாது. 

உயிர்த்தெழும் செடி!

Anastatica Hierochuntica, Rose of Jericho

செடிகளில் அனஸ்டாட்டிக்கா கைரோசன்டினா (Anastatica Hierochuntina) எனும் தாவரவியல் பெயர் கொண்ட செடி ஒன்று இருக்கிறது. ஜெரிக்கோ உரோசு (Rose of Jericho) என்ற பெயரிலும் இச்செடி அழைக்கப்படுகிறது.

இது தவிர, மரியம் மலர், தூயமேரி மலர், மேரி மல்லர், வெண்கடுகு மலர் எனும் வேறு சில பொதுப் பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. இச்செடி அரேபியா, சிரியா, பாலத்தீனம், மற்றும் அல்ஜீரியா பாலைவனப் பகுதிகளில் வளர்கிறது. 

இது ஒரு பருவச் செடி, 12 செ.மீ. உயரம் வரை வளரும். இச்செடியில், வெள்ளை நிறத்திலான சிறிய பூக்கள் விரைவில் வந்தவுடன் இலைகள் உதிரந்து விடும். அதன் பிறகு, இச்செடியுனுடைய கிளைகள் சுருண்டு, பந்து போன்று உருண்டையாகிக் கூடை போலத் தோன்றும். இதனைச் சுற்றியுள்ள கிளைகள் பாதுகாக்கின்றன. பாலைவனக் காற்றின் மூலம் இதன் வேர்கள் பிடுங்கப்பட்டால் இது உருண்டு கொண்டே செல்லும். இந்தப் பந்து போன்ற அமைப்பு பார்ப்பதற்கு வெடிக்காத ரோஜாப் பூ போல் இருக்கும். மழை வந்தவுடன் இதன் கிளைகள் திரும்பவும் திறக்கின்றன. இதனால், இதன் உள்ளே உள்ள கனி வெடித்து விதைகள் வெளியே வருகின்றன. விதைகள் கிளையின் உள்ளேயே முளைக்கின்றன. இச்செடி இறப்பதில்லை. மீண்டும் உயிர் பெற்று விடுகிறது. எனவே இச்செடியினை உயிர்த்தெழும் செடி, புத்துயிர்ப்புச் செடி என்றும் சொல்கின்றனர்.  

மெதுவாகப் பூக்கும் செடி!

Puya raimondii

செடிகளில், பூயா ரெய்மொண்டிய் (Puya raimondii) எனும் தாவரவியல் பெயர் கொண்ட செடி ஒன்று இருக்கிறது. இச்செடியினை பொலிவியன் செடி (Bolivian Plant) என்றும் சொல்கின்றனர். தென் ஆப்பிரிக்கா, தென்னமெரிக்கா மற்றும் பெரு நாட்டில் வளரும் இச்செடி ஒரு பாலைவனச் செடியாகும். ஒற்றை விதையிலைத் தாவரத்தில் மிகப் பெரியதாக வளரும் இச்செடி 40 அடி உயரம் வரை வளரக் கூடியது. இதன் இலைகள் வட்ட வடிவில் ரோஜாப்பூ போல் அமைந்துள்ளன. இச்செடி 150 ஆண்டுகள் ஆன பிறகேப் பூக்கும். இதனுடைய மலர் கொத்து 34 அடி நீளத்திற்கு வளருகிறது. இதில் 8000-க்கும் அதிகமான வெள்ளை நிறப் பூக்கள் மலர்கின்றன. பூ முடிந்து விதை வந்தவுடன் இச்செடி இறந்து விடுகிறது. மலர்க்கொத்தில் மிகப் பெரியது இதுவே ஆகும். மேலும், உலகில் மிக மெதுவாகப் பூக்கும் தாவரமும் இதுவே ஆகும்.  

பூனையைக் கவரும் செடி!

Nepeta Cataria

செடிகளில், நெபெட்டா கேடாரியா (Nepeta Cataria) எனும் தாவரவியல் பெயர் கொண்ட செடி ஒன்று இருக்கிறது. இது கேட்னிப், கேட்ஸ்வார்ட், கேட்வர்ட் மற்றும் கேட்மின்ட் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தாவரம் தெற்கு மற்றும் கிழக்கு ஐரோப்பா, மத்தியக் கிழக்கு, மத்திய ஆசியா மற்றும் சீனாவின் சில பகுதிகளைப் பூர்விகமாகக் கொண்டாலும் வடக்கு ஐரோப்பா, நியூசிலாந்து மற்றும் வட அமெரிக்காவில் பரவலாக காணப்படுகிறது. இத்தாவரத்திற்கு கேட்னிப் மற்றும் கேட்மின்ட் என்ற பெயர்கள் மூன்றில் இரண்டு பங்கு பூனைகள் அதன் மீது கொண்டிருக்கும் தீவிர ஈர்ப்பு மற்றும் தாவரத்திற்கு ஆற்றும் எதிர்வினை போன்றவற்றால் பெயரிடப்பட்டுள்ளது. 

இச்செடி 2 முதல் 3 அடி உயரம் வரை வளரக்கூடியதாகும். இதய வடிவத்தில் இருக்கும் இதனுடைய இலையும், தண்டும் வாசனை உடையது. இந்த வாசனை பூனைகளுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கிறது. குறிப்பாக, இதன் காய்ந்து போன இலையின் வாசனையால் பூனைகள் கவர்ந்திழுக்கப்படுகின்றன. மேலும், இதனுடைய வாசனையை வைத்து சிறுத்தை, புலி போன்ற பூனை வகையைச் சேர்ந்த விலங்குகள் அனைத்தையும் பிடிக்க முடியும். இந்த செடியின் வாசனை பூனைகளை கவர்ந்திழுப்பதால் இதனை, ‘பூனையைக் கவரும் செடி’ என்றும் அழைக்கிறார்கள். 

மலர்தோட்டங்களில் பயன்படுத்த, ஒரு அலங்காரத் தாவரமாக பெரும்பாலும் பயிரிடப்படுகிறது. இச்செடியின் மலர்கள் மிகுந்த மணம் கொண்டவை; மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தில் அல்லது வெளிர் ஊதா நிறத்தின் மெல்லிய புள்ளிகளுடன் வெள்ளை நிறத்தில் இருக்கும். மேலும், பூனைகள் மற்றும் பட்டாம்பூச்சிகளை வளர்ப்பவர்கள், இதன் ஈர்க்கும் குணங்களுக்காக இச்செடியினை வளர்க்கின்றனர்.

இச்செடி சில மூலிகைத் தேநீர் தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருளாகவும் உள்ளது. இதனுடைய காய்ந்த இலையை மூலிகை தேநீர் தயாரிக்கப் பயன்படுத்துகின்றனர். காரத்தன்மை உடைய இந்த தேநீர் சுறுசுறுப்பை ஏற்படுத்துகிறது. கொதி நீராவி முறைக் காய்ச்சி வடிப்பு மூலம் இத்தாவரத்திலிருந்து பிரித்தெடுக்கப்படும் நெபெட்டலாக்டோன் கொசு மற்றும் ஈ போன்றவைகளை விரட்டியடிக்கும் இயற்கை விரட்டியாக இருக்கிறது. இந்த எண்ணெய் பூச்சிகளுக்கு, குறிப்பாக கொசுக்கள், கரப்பான் பூச்சிகள் மற்றும் கரையான்கள் ஆகியவற்றிற்கு எதிராக மிகவும் பயனுள்ள இடஞ் சார்ந்த விரட்டியாக இருக்கிறது.

சென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசு!

மைக்ரோ கீரைகள் பற்றி தெரியுமா உங்களுக்கு? சாகுபடி முறை இதோ!

Buddha Quotes: புத்தரின் 15 வாழ்வியல் கருத்துக்கள்!

இரவில் தாமதமாக சாப்பிடுபவரா நீங்க? அச்சச்சோ, அது ரொம்ப தப்பாச்சே!

காலம் காலமாக நின்று பேசும் மாமல்லபுரமும் மறக்கப்பட்ட மாமல்லனும்!

SCROLL FOR NEXT