கேரளாவின் பிரபலமான ஓணம் பண்டிகையின் போது வீடுகளில் நறுமணம் கமழும் பாயாசங்கள் தவறாமல் இடம்பெறும். அத்தகைய சிறப்பு வாய்ந்த பாயசங்களில் ஒன்றுதான் அடை பிரதமன். அரிசி மாவு கொண்டு தயாரிக்கப்படும் அடைகளை, தேங்காய் பால் மற்றும் வெல்லத்தில் வேக வைத்து, நறுமணப் பொருட்களால் அலங்கரித்து செய்யப்படும் இந்த பாயசம், ஓணத்தின் சுவையான நினைவுகளைத் தூண்டும். இந்தப் பதிவில் சுவையான அடை பிரதமன் பாயாசம் எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
அடை - 200 கிராம்
தேங்காய்ப்பால் (முதல் பால்) - 2 கப்
தேங்காய்ப்பால் (இரண்டாம் பால்) - 1 கப்
வெல்லம் - 350 கிராம்
ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
சுக்கு தூள் - 1/4 டீஸ்பூன்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
முந்திரி - 10 (பொடியாக நறுக்கியது)
உலர்ந்த திராட்சை - 10
தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
அடை என்பது பாலை நன்றாக காய்ச்சி, அதில் அரிசியை அரைத்து சேர்த்து, மெல்லிய வடகம் போல காய வைத்து தயாரிப்பார்கள். இது சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கும். அடை பிரதமன் செய்வதற்கு முதலில் இந்த அடைகளை நன்கு கழுவி 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.
பின்னர், ஒரு பாத்திரத்தில் தேங்காய் பால் மற்றும் வெல்லத்தை சேர்த்து அடுப்பில் வைத்து காய்ச்சவும். வெல்லம் கரைந்து பால் கொதிக்க ஆரம்பிக்கும் வரை நன்கு காய்ச்ச வேண்டும்.
பால் கொதித்ததும் ஊற வைத்த அடைகளை சேர்த்து நன்கு கிளறி விடுங்கள். பின்னர், அடைகளை மென்மையாக வேக வைக்கவும்.
மற்றொரு பாத்திரத்தில் தேங்காய்ப்பால் சேர்த்து அடுப்பில் வைத்து காய்ச்சவும். இந்த பால் நன்றாக சுண்டி கெட்டியானதும், வேகவைத்த அடைகளில் இந்த தேங்காய் பாலை சேர்த்து நன்கு கலக்கவும்.
இறுதியாக, இந்த பாயாசத்தில் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய் தூள் மற்றும் சுக்குத்தூள் சேர்த்து கிளறினால், சூப்பரான சுவையில் அடை பிரதமன் பாயாசம் தயார்.
நீங்கள் ஓர் இனிப்பு விரும்பி என்றால் நிச்சயம் இதை ஒருமுறையாவது செய்து சாப்பிட வேண்டும். அந்த அளவுக்கு இதன் சுவை அட்டகாசமாக இருக்கும். மேலே குறிப்பிட்ட செயமுறையைப் பின்பற்றி உங்கள் வீட்டிலும் இந்த அற்புதமான பாயசத்தை செய்து ருசித்து மகிழுங்கள்.