உணவு / சமையல்

எலும்புகளுக்கு பலம் சேர்க்கும் அகத்திப்பூ கூட்டு!

எஸ்.விஜயலட்சுமி

கத்திக்கீரையைப் போலவே அகத்திப்பூவிலும் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. இது சிவப்பு, மற்றும் வெள்ளை நிறத்தில் கிடைத்தாலும், சிவப்பு அகத்திப்பூ  சுவையாகவும், சத்துகள் நிறைந்தும் உள்ளது. அகத்திப்பூவில் சுண்ணாம்புச் சத்து அதிகம் உள்ளதால், எலும்புகளுக்கும், பற்களுக்கும் அதிக பலத்தை தந்து, எலும்புகள் உறுதியோடு இருக்க உதவுகிறது.

தேவையான பொருட்கள்;

பாசிப்பருப்பு – 100 கிராம்

அகத்திப் பூ – 100 கிராம்

தேங்காய் துருவல் – 3 ஸ்பூன்

சீரகம், சோம்பு – தலா 1 ஒரு ஸ்பூன்

வரமிளகாய் - மூன்று

சிறிய வெங்காயம் - 6

தக்காளி – 1

மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்

பூண்டு – 4 பற்கள்

கருவேப்பிலை, மல்லித்தழை – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

எண்ணெய்- ஒரு ஸ்பூன்.

 செய்முறை;

வாழைப்பூவில் இருப்பது போல அகத்தி பூவின் நடுவில்  கெட்டியான நார் போன்ற நரம்பு இருக்கும். அதை எடுத்து விடவும். பூவின் கீழிருக்கும் காம்பையும் ஆய்ந்து விட்டு தண்ணீரில் நன்றாக அலசவும். பின்பு பூக்களை சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை தோல் உரித்து நறுக்கிகொள்ளவும்.

பூண்டை தோலுரித்து, சீரகம், சோம்பு, வரமிளகாய், தேங்காய்த் துருவல் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும். பாசிப்பருப்பை நீரில் அலசி விட்டு குக்கரில் போட்டு, மஞ்சள்தூள், அரைத்த விழுது, தக்காளித் துண்டுகள், அகத்திப்பூ, உப்பு, இரண்டு டம்ளர் நீர் விட்டு, இரண்டு விசில் விட்டு இறக்கவும்.

சிறிய வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து போட்டு பொரிந்ததும், அரிந்து  வைத்த சின்ன வெங்காயம், கருவேப்பிலை போட்டு தாளித்து, அதை பருப்புக்கலவையில் சேர்க்கவும். மல்லித்தழைகளை பொடியாக வெட்டி அதில் தூவவும் இப்போது சுவையான அகத்திப்பூ கூட்டு தயார்.

கொன்றை பூவின் ஆரோக்கிய மகத்துவம் தெரியுமா?

உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?

Remote Work: தொழில்நுட்பமும், தொலைதூர வேலைகளும்! இதுதான் எதிர்காலமா? 

18 முறை படையெடுத்தும் 6 முறை தரைமட்டமாகியும் மீண்டெழுந்த ஆலயம்!

Managing Debts: சாமானியர்களுக்கான கடன் நிர்வாக யுக்திகள்! 

SCROLL FOR NEXT