பொதுவாக ஆறுவிதமான சுவைகளில் கசப்புச் சுவை விரும்பி சாப்பிட முடியாததுதான். ஆனால் அந்த சுவைதான் பல உடல்நலக் கோளாறுகளை நீக்கும் ஆற்றல் பெற்றது. அஜீரணத்தால் ஏற்படும் குமட்டல், நாக்கில் ஏற்படும் சுவையின்மை ஆகிய வற்றை கசப்புச் சுவை போக்கிவிடும்.
மேலும் நாக்கு வறண்டு ஏற்படும் தண்ணீர் தாகம், குடலில் ஏற்படும் கிருமிகள் விஷம், தோல் நோய்கள், மயக்கம், கிறுகிறுப்பு, பித்த எரிச்சல்,கபம், கொழுப்பு சம்பந்தப்பட்ட நோய்கள், உடல் தாதுக்களில் ஏற்படும் கோளாறுகள், அழற்சி போன்றவற்றை சரிசெய்யும். இதோடு மலம் மற்றும் சிறுநீரின் அளவைச் சுருங்கக் செய்யும். கசப்பு சுவை கொணட உணவுகள் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவும். எளிதில் ஜீரணமாகும்.
சர்க்கரைநோய் தாக்கத்தால் ஏற்படும் நாவறட்சி, தண்ணீர் தாகம், கைகால் எரிச்சல், தாதுக்களின் அழற்சி மற்றும் அழுகல்,மாமிசக் கொழுப்பால் ஏற்படும் கட்டிகள் , சொறி சிரங்கு, மயக்கம் மற்றும் கிறுகிறுப்பு இவற்றை தடுப்பதில் கசப்பான உணவுகளே உதவுகிறது.
சப்பான உணவை , கசப்பான சுவை கொணட காய்கறிகளை தவிர்ப்பவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. அதாவது பாகற்காய் போன்ற கசப்பு சுவை கொணட உணவுகளில் புற்றுநோய் எதிர்ப்பு சக்திகள் பெருமளவில் உள்ளன. இந்த கசப்பான உணவை சாப்பிடாமல் இருப்போர் தங்கள் உடலில் உள்ள புற்றுநோய் எதிர்ப்பு காரணிகளை இழந்து விடுகின்றனர் என்கிறார்கள் அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள்.
பாகற்காய், சுண்டைக்காய், அதலைக் காய், அகத்திக்கீரை, வெந்தயம் மற்றும் வெந்தயக் கீரை, மணத்தக்காளிக் கீரை வகைகள் கசப்புச் சுவை கொணட உணவுகள். கொத்த மல்லி, தூதுவளை, முளைக் கீரை, அரைக் கீரை, முருங்கைக் கீரை சற்றே கசப்புச் சுவை குறைந்தது. இருப்பினும் சிறுநீரில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவும்.
கோரியோப்சிஸ் குடும்பத்தில் உள்ள ப்ரோக்கோலி, பிரஸ்ஸல் ஸ்ப்ரவுட், முட்டைக்கோஸ், காலே, முள்ளங்கி மற்றும் அருகுலா போன்ற காய்களில் கசப்பு ருசியே உள்ளது. இந்த காய்களில் குளுக்கோசினோலேட்டுகள் எனப்படும் சேர்மங்கள் உள்ளன. அவைதான் இந்தக் காய்களுக்கு கசப்பு சுவையையும், பல ஆரோக்கிய நன்மைகளையும் தருகின்றன. இதுகுறித்த ஆய்வில், குளுக்கோசினோலேட்டுகள் புற்றுநோயை உற்பத்தி செய்யும் உயிரணுக்களின் வளர்ச்சியையும், செயல்பாட்டையும் மெதுவாக்கும் என்கிறார்கள்.
கசப்பு நார்த்தங்காய், கடாரம் நார்த்தங்காய் சாறு புளிப்பு சுவை உள்ளது என்றாலும் அவையும் கசப்பான சுவை உடையதுதான். கரிசலங்கண்ணிக் கீரை, பொண்ணாங்கண்ணிக் கீரை, வல்லாரைக் கீரை போன்றவைகளும் சிறிது கசப்பு சுவையை கொண்ட உடலுக்கு நல்லது செய்யும் கற்பகதரு மூலிகைகள்தான்.
தானியங்களில் கசப்பான சுவை உள்ளது வெந்தயம். இதை இட்லி தோசை மாவுடன் சிறிதளவு கலந்து சமைக்கலாம். அதேபோல் சப்பாத்தி மாவுடன் கலந்து பயன்படுத்தி வர சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது.
நம்மில் பெரும்பாலானோருக்கு பிடிக்காத காய்களில் ஒன்று பாகற்காய். அந்த கசப்பான காய் பல அற்புதமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. கண்களுக்கும் தோலுக்கும் தேவையான பீட்டா கரோட்டின் ப்ரக்கோலியை விட இருமடங்கு அதிகமாக பாகற்காயில் உள்ளது. கீரைகளில் அதிக கால்சியம் சத்துக்களைக் கொண்டுள்ள பசலைக் கீரையை விட இரண்டு மடங்கு அதிகமான கால்சியத்தை பாகற்காய் கொண்டுள்ளது. கால்சியம் சத்து எலும்புகளின் வலிமைக்கு தேவையானது.