Brinjal Peanut Curry 
உணவு / சமையல்

கத்தரிக்காய்க்கு உண்டு அம்புட்டு ருசியும் சத்தும்! கத்தரிக்காய் கடலை கறி செய்வோமா?

பிரபு சங்கர்

கத்தரிக்காய், பாரம்பரியமான, எளிதில் கிடைக்கக் கூடிய, பொதுவாக அடிக்கடி சமைத்து உண்ணும் நாட்டுக் காய். இந்த சாதாரண கத்தரிக்காயில் எத்தனை அசாதாரண சத்துகள் இருக்கு தெரியுமா? பலரும் இதெல்லாம் தெரியாமலேயே கத்தரிக்காயை சாப்பிட்டு வருகிறோம்.

கத்தரிக்காயில் நீர்ச்சத்து மற்றும் பொட்டசியம் இருப்பதால் ரத்தத்தில் சேரும் கொழுப்பைக் குறைக்க உதவும். இது இதயத்தை பலப்படுத்துகிறது, சர்க்கரை நோய் அதிகரிக்காமல் காக்கிறது. இதிலுள்ள நார்ச்சத்து பசியைக் குறைப்பதால், உடல் எடை கூடாதபடி பாதுகாக்கும். எதனாலாவது காலில் வீக்கம் ஏற்பட்டால், கத்தரிக்காயை அரைத்து அந்த விழுதை வீக்கத்தின் மீது தடவி வந்தால் விரைவில் வீக்கம் வடியும். கத்தரிக்காயில் மாங்கனீஸ், தாமிரம், இரும்பு ஆகிய தாது உப்புகளும், வைட்டமின்கள் ஏ, ஸி, பி-1, பி-2 ஆகியவையும் பொக்கிஷமாக உள்ளன. 

சரி, இனி கத்தரிக்காயில் ஒரு ரெஸிபியைப் பார்க்கலாமா?  

கத்தரிக்காய் கடலைக் கறி: 

இந்த ரெஸிபி ஆந்திராவில் மிகவும் பிரபலம். நாமும் தயாரிக்கலாமே!

என்னென்ன தேவை: 

கத்தரிக்காய் – 6

பெரிய வெங்காயம் – 1

தேங்காய்த் துருவல் – கால் கப்

தக்காளி – 1

வறுத்த வேர்க்கடலை – 25 கிராம்

தனியா தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்

மிளகாய்த் தூள் – அரை டேபிள் ஸ்பூன்

எள் – 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

கொத்துமல்லி – சிறிதளவு

மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்

இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்

புளி – நெல்லிக்காய் அளவு

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் (எந்த சமையல் எண்ணெயானாலும் சரி) – கால் கப்

எப்படித் தயாரிப்பது?

சிறிய அளவிலான, உருண்டையான கத்தரிக்காய் கிடைத்தால் சுவை அலாதியாக இருக்கும். இந்தக் கத்தரிக்காயின் மேல் காம்பை மட்டும் நீக்கிவிட்டு நான்காகக் கீறி வைத்துக் கொள்ளுங்கள் – தனித்தனியே துண்டங்களாக்கிவிட வேண்டாம். வெட்டுபட்டதாக, ஆனால் முழுசாக இருக்கட்டும் கத்தரிக்காய்.

வெங்காயம், தக்காளியைப் பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இஞ்சி-பூண்டை அரைத்து விழுதாக்கி ஒரு டேபிள் ஸ்பூன் அளவுக்கு எடுத்துக் கொள்ளுங்கள். 

வாணலியில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கீறி வைத்திருக்கும் கத்தரிக்காயைப் போட்டு, மூடி வைத்து வேக வையுங்கள். மிதமான சூட்டில் இப்படி வதக்கிவிட்டு, பிறகு மூடியை நீக்கி கொஞ்சம் கிளறி மறுபடி ஓரிரு நிமிடத்துக்கு வேக விடுங்கள். காய் நன்கு வெந்ததும் அதை எடுத்துத் தனியே வைத்து விடுங்கள்.

இப்போது வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி-பூண்டு விழுது போட்டு வதக்குங்கள். இப்போது இத்துடன் வறுத்த வேர்க்கடலை, தனியாத் தூள், மஞ்சள் தூள் கலந்து மீண்டும் ஒரு நிமிடத்துக்கு, கிளறி வதக்குங்கள்.

பிறகு வெறும் வாணலியில் எள்ளு போட்டு வறுத்துக் கொள்ளுங்கள். இந்த எள்ளுடன், வதக்கி வைத்திருந்தவற்றைச் சேர்த்து அரை கப் தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள். 

வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகாய் தூள் போடவும், இதனால் நல்ல கலர் கிடைக்கும். அதில், அரைத்து வைத்துள்ள விழுதைப் போட்டு ஒரு நிமிடம் கிளறுங்கள், பிறகு நன்கு கொதிக்க விடுங்கள்.

கால் கப் தண்ணீரில் புளி போட்டு திடமாகக் கரைத்து, இந்தக் கரைசலை குழம்பில் ஊற்றுங்கள். உப்பு தேவையான அளவு சேர்த்து மூடி போட்டு வேக விடுங்கள். 

ஒரு நிமிடம் கழித்து திறந்து, ஏற்கெனவே வேக வைத்துள்ள கத்தரிக்காய்களைப் போட்டு அவை விண்டுவிடாதபடி மெல்ல கிளறி, ஒரு நிமிடம் கழித்து இறக்கி விடுங்கள். 

இதன்மேல் கொத்தமல்லி தூவி அலங்கரிக்கலாம். 

அவ்ளோதான், கத்தரிக்காய் கடலைக் கறி ரெடி. கத்தரிக்காயை அப்படியே முழுசு, முழுசாக சாப்பிடலாம்!

நிமிர்ந்த நடைக்கு ஆதாரமான முதுகெலும்பை பராமரிக்க 10 எளிய வழிகள்!

புதுமைக்கொரு எடுத்துக்காட்டு; துணிச்சலுக்கு ஓர் அடையாளம் - HBD பார்த்திபன் Sir!

நிக்ரஹம் செய்யத் தெரியாதவள்!

இரை தந்த இறைவனுக்கு இரையாலேயே அபிஷேகம்!

கடலை மாவை முகத்தில் பயன்படுத்துவதற்கு முன் இத தெரிஞ்சுக்கோங்க! 

SCROLL FOR NEXT