Kumbakonam Kadappa and Thenkuzhal Mittai Img Credit: Pinterest, மதுரைல எங்க சாப்டலாம்?
உணவு / சமையல்

கும்பகோண கடப்பா, தேன்குழல் மிட்டாய் செய்யலாமா?

ராதா ரமேஷ்

பொதுவாக இட்லி தோசை போன்றவற்றுக்கு சட்னி, சாம்பார் இவைகளையே வைத்து சாப்பிட்டு பழகி இருப்போம். தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் பகுதிகளில் இட்லி மற்றும் தோசைக்கு சைடிஸ் ஆக இந்த கடப்பாவை பரிமாறுவது வழக்கம். அந்தக் கடப்பா ரெசிபியை எப்படி செய்யலாம் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

கும்பகோணம் கடப்பா செய்வதற்கு தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு - அரை கப்

உருளைக்கிழங்கு - 3

மஞ்சள் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்

மசாலா தயாரிப்பதற்கு:

துருவிய தேங்காய் - 1கப்

உடைச்ச கடலை - 2 டேபிள்ஸ்பூன்

கசகசா - 1 டேபிள்ஸ்பூன்

இஞ்சி - 1 துண்டு

சோம்பு - 1/2 டேபிள் ஸ்பூன்

பூண்டு - 5 பல்

பச்சை மிளகாய் - 5

தாளிப்பதற்கு:

பிரியாணி இலை - 1

பட்டை - 2

கிராம்பு மற்றும் ஏலக்காய் - 4

அண்ணாச்சி பூ - 2

பெரிய வெங்காயம் - 2

தக்காளி - 2

கருவேப்பிலை - தேவையான அளவு

கொத்தமல்லி இலை - சிறிதளவு

உப்பு - தேவைக்கேற்ப

எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை:

முதலில் பாசிப்பருப்பு மற்றும் உருளைக்கிழங்கை நன்கு கழுவி ஒரு குக்கரில் போட்டு சிறிதளவு மஞ்சள் தூள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து ஐந்து விசில் விட்டு வேக வைத்து எடுக்கவும். சூடு ஆறியவுடன் குக்கரை திறந்து வேக வைத்த உருளைக்கிழங்குகளை தனியாக எடுத்து சிறு சிறு துண்டுகளாக மசித்துக் கொள்ளவும்.

ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், உடைச்ச கடலை, கசகசா, சோம்பு, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ளவும்.

பின் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் அதில் சோம்பு, பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய் அண்ணாச்சி பூ சேர்த்து நன்கு பொரிந்தவுடன் நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம், சிறிதளவு கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் நறுக்கி வைத்த தக்காளியையும் போட்டு சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

வெங்காயம் தக்காளி கலவை நன்கு வெந்தவுடன் அரைத்த மசாலாவை சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும். பின் சிறிதளவு தண்ணீர் ஊற்றி மிதமான சூட்டில் ஐந்து நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

கொதித்தவுடன் வேக வைத்த பருப்பை சேர்த்து இரண்டு கப் தண்ணீர் விட்டு நன்கு கலந்து சிறிது நேரம் கொதிக்க விட்டு, மசித்து வைத்த உருளைக்கிழங்கையும் சேர்த்து மிதமான சூட்டில் பத்து நிமிடம் கொதிக்க வைத்து எடுக்கவும். இதன் மேல் நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி நன்கு கலந்து விட்டால் சுவையான கும்பகோணம் ஸ்பெஷல் கடப்பா ரெடி!

இடியாப்பம், ஆப்பம், தோசை, இட்லி போன்ற அனைத்து வகைக்கும் இந்த ரெசிபி மிகவும் சுவையாக இருக்கும்! நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க!

சுவையான தேன்குழல் மிட்டாய்:

தேவையான பொருள்கள்:

பச்சரிசி - 1 கப்

உளுந்து - 2 டேபிள் ஸ்பூன்

ஏலக்காய் - 3

சர்க்கரை - 2

எண்ணெய் - தேவையான அளவு

இட்லி மாவு - 1/4 கப்

செய்முறை:

பச்சரிசி மற்றும் உளுந்தை நன்கு கழுவி 2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு மைய அரைத்துக் கொள்ளவும். இதனுடன் 1/4 கப் இட்லி மாவு சேர்த்து நன்கு கலந்து 5 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும்.

ஒரு வாணலியில் இரண்டு கப் சர்க்கரை மற்றும் 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து விடவும். இதனுடன் இடித்த 3 ஏலக்காய்களை சேர்த்து சர்க்கரை பாகு பதத்திற்கு (கம்பி பதம் வர வேண்டிய அவசியம் இல்லை) காய்ச்சி எடுத்துக் கொள்ளவும்.

மற்றொரு வானொலியில் எண்ணெய் ஊற்றி நன்கு சூடானவுடன், மாவை சுத்தமான ஒரு பாலிதீன் கவரில் போட்டு தேன் குழல் மிட்டாய் வடிவத்தில் ஊற்றி பொறித்து எடுக்கவும்.

இதனை வெதுவெதுப்பான சர்க்கரைப்பாகில் இரண்டு நிமிடம் போட்டு எடுத்தால் சுவையான தேன்குழல் மிட்டாய் ரெடி!

அனைத்து திருவிழாக்களிலும் கிடைக்கும் இந்த ரெசிபியை நீங்களும் வீட்டிலேயே சுலபமாக செய்து பார்க்கலாம்!

இயற்கையிடம் சுறுசுறுப்பை கற்றுக் கொள்ளுங்கள்!

தலைக்கு ஷாம்பு பயன்படுத்துவதற்கு முன் இத தெரிஞ்சுக்கோங்க!

வாழ்க்கை என்பது கொடுக்கல் வாங்கல் மட்டுமல்ல…

புடவைக் கட்டும் பொழுது பெண்கள் செய்யக்கூடாத 9 தவறுகள்!

நிமிர்ந்த நடைக்கு ஆதாரமான முதுகெலும்பை பராமரிக்க 10 எளிய வழிகள்!

SCROLL FOR NEXT