உணவு / சமையல்

ஜலதோஷ நிவாரண உணவுகள்

சாத வகைகள்

மங்கையர் மலர்

ம. இந்திராணி, கோவை

இஞ்சி புலாவ்

தேவையான பொருள்கள்: வடித்த சாதம் – 1 கப், துருவிய இஞ்சி – 4 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, வெங்காயம் நறுக்கியது – 4 டீஸ்பூன், மஞ்சள் பொடி – அரை டீஸ்பூஜ், உப்பு – தேவையான அளவு- எண்ணெய் – 4 ஸ்பூன், கடுகு, கறிவேப்பிலை – கொஞ்சம்

செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து, பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி, மஞ்சள் பொடி ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு, உப்பு போட்டு சாதத்தைக் கொட்டி, கிளறி இறக்கவும். (தொண்டை கரகரப்பு ஏற்ற உணவு)

தூதுவளை சாதம்

தேவையான பொருள்கள்: வடித்த சாதம் – 1கப், முள் நீக்கி சுத்தம் செய்த தூதுவளை இலை – 10, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு – இரண்டு ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, நெய் – 4 ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் அரை ஸ்பூன் நெய்விட்டு பருப்புவகை, மிளகாய், கல் உப்பு போட்டு வறுத்து எடுக்கவும். பிறகு தனியாக இலையையும் வதக்கி எடுத்துக்கொள்ளவும். மிக்ஸியில் முதலில் பருப்பு, மிளகாயைப் பொடி செய்து, பிறகு இலையையும் போட்டு அரைக்கவும். மீதமுள்ள நெய்யில் சாதத்தைப் போட்டு பொடியையும் போட்டு, கிளறி எடுக்கவும்.

புதினாப் பொடி சாதம்

தேவையான பொருள்கள்: வடித்த சாதம் – 1 கப், தேங்காயத்துருவல் – 4 ஸ்பூன், உ.பருப்பு – 4 ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 5, புதினா ஒரு சிறிய கட்டு, நல்லெண்ணெய், நெய் – 2 ஸ்பூன், புளி – 10 கிராம், கல் உப்பு – தேவையான அளவு.

செய்முறை: புதினாவை அரை ஸ்பூன் நெய்யில் வதக்கி எடுத்துக்கொண்டு, பின் அனைத்து சாமான்களையும் வறுத்துப் பொடி செய்து, புதினாவையும் சேர்த்து, நீர் விடாமல் அரைக்கவும். நெய், எண்ணெய் சூடு செய்து அதில் புதினா பேஸ்டைப் போட்டு சாதத்தை போட்டுக் கிளறி எடுக்கவும்.

பூண்டுப் பொடி சாதம்

தேவையான பொருள்கள்: வடித்த சாதம் – 1 கப், பூண்டு – 10 பல், உ.பருப்பு, து.பருப்பு =- 2 ஸ்பூன், மிளகாய் வற்றல் – 2, நல்லெண்ணெய், கல் உப்பு.

செய்முறை: பருப்புகள், மிளகாய், கல் உப்பு ஆகியவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து அதன் பிறகு பூண்டையும் இலேசாக வதக்கவும். முதலில் பருப்புகளை மிக்ஸியில் நைசாகப் பொடித்து அத்துடன் பூண்டையும் சேர்த்து அரைத்ததும், நல்லெண்ணெய் சூடு செய்து, பொடி போட்டு சாதத்தினைப் போட்டுக் கிளறவும்.

பூண்டு சட்னி சாதம்

தேவையான பொருள்கள்: அரிசி – 1 ஆழாக்கு, பூண்டு – ஒரு கட்டி, புளி – சிறிய எலுமிச்சை அளவு / காய்ந்த மிளகாய் – 4, கறிவேப்பிலை, கடுகு – தாளிக்க, எண்ணெய் – 50 கிராம், மஞ்சள் பொடி – அரை ஸ்பூன்.

செய்முறை: பூண்டு, புளி, உப்பு, மிளகாய், பச்சை மிக்ஸியில் நீர் விட்டு நைசாக அரைக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து அரைத்த விழுதைச் சேர்த்து நன்கு கிளறி அரிசியைப் போடவும். அரிசிக்கு ஏற்ப நீர்விட்டு, மூன்று விசில் வந்ததும் இறக்கவும்.

கொள்ளு சாதம்

தேவையான பொருள்கள்: அரிசி – 1 ஆழாக்கு, கொள்ளு – கால் ஆழாக்க, இஞ்சிப் பூண்டு விழுது – 2  ஸ்பூன், பச்சை மிளகாய் – 4, சின்ன வெங்காயம் – 10, தக்காளி – 1, பட்டை, கிராம்பு – 2, ஏலம் – 1, தேங்காய்த் துருவல் – 4 ஸ்பூன், எண்ணெய் – 50 மில்லி.

செய்முறை: கொள்ளைக் கழுவி இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பின் அரிசியையும், கொள்ளையும் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். பட்டை, கிராம்பு, ஏலம் தவிர மற்றவற்றை மிக்ஸியில் நீர்விட்டு நைசாக அரைத்துக்கொள்ளவும். குக்கரில் எண்ணெய் விட்டு, பட்டை, கிராம்பு, ஏலம், தாளித்து ப.மிளகாய், சின்ன வெங்காயம், தக்காளி, தேங்காய் அரைத்த விழுது சேர்த்து வதக்கி, அரிசி, கொள்ளு போட்டு உப்பு போடவும். தேவையான நீர் விட்டு, மூன்று விசில் வந்தபின் இறக்கவும்.

மிளகு, கறிவேப்பிலைப் பொடி சாதம்

தேவையான பொருள்கள்: வடித்த சாதம் – 1 கப், மிளகு – 4 டீஸ்பூஜ், கறிவேப்பிலை – 4 ஈர்க்கு, நெய் – 50 கிராம், கல் உப்டுபு – தேவையான அளவு.

செய்முறை: மிளகை வெறும் வாணலியில் கருகாமல் வறுத்து எடுக்கவும். உப்பையும் வறுக்கவும். சூடான வாணலியில் கறிவேப்பிலையும் பொரித்து பொடி செய்துகொள்ளவும். வாணலியில் நெய்விட்டு உருகியதும், சாதம் பொடி போட்டுக் கிளறவும்.

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

நுண்கலை போற்றிய நல்லவர்!

“அற்ப மானிடனே, செத்துப் போ” -  பயனரை மோசமாகத் திட்டியதா Gemini AI?

என்னை துறந்து சென்றவனும் என்னால் துறக்கப்பட்டவனும்!

SCROLL FOR NEXT