coriander rice recipe 
உணவு / சமையல்

நெய் மணக்கும் கொத்தமல்லி சாதம் செய்யலாம் வாங்க! 

கிரி கணபதி

உலகெங்கிலும் உள்ள பல பிரபலமான உணவு வகைகளில் கொத்தமல்லி சாதமும் ஒன்றாகும். இதை எளிதாகவும் மிக விரைவாகவும் செய்துவிடலாம். கொத்தமல்லி இலைகளின் தனித்துவமான சுவை சாப்பிடுவதற்கு அவ்வளவு நன்றாக இருக்கும். நீங்கள் ஒரு திருப்திகரமான உணவை சுவைக்க விரும்பினால் நிச்சயம் அதற்கு கொத்தமல்லி சாதத்தைத் தவிர வேறு மாற்று இல்லை. சரி வாருங்கள் இந்த பதிவில் எளிதாக எப்படி கொத்தமல்லி சாதம் செய்வது எனப் பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்: 

பாஸ்மதி அரிசி - 1 கப்

கொத்தமல்லித் தழை - 1 கொத்து

வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 2

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன் 

மஞ்சள் தூள் - ½ ஸ்பூன் 

சீரகம் - ½ ஸ்பூன்

கடுகு - ½ ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

நெய் - 3 ஸ்பூன்

செய்முறை:

முதலில் பாஸ்மதி அரிசியை நன்கு கழுவி சுமார் 30 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைக்கவும். பின்னர் தண்ணீரை வடிகட்டி அரிசியை தனியாக வைத்துக் கொள்ளுங்கள். 

பின்னர் கொத்தமல்லி இலைகளைக் கழுவி மிக்ஸியில் சேர்த்து பேஸ்ட் போல அரைத்துக் கொள்ளவும். 

ஒரு பாத்திரம் அல்லது பிரஷர் குக்கரில் எண்ணெய் அல்லது நெய் சேர்த்து சூடானதும், சீரகம் மற்றும் கடுகை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்குங்கள். 

வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்குங்கள். பின்னர் அதிலேயே கொத்தமல்லி விழுது மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து இரண்டு நிமிடம் வேக விடவும். 

அடுத்ததாக பாஸ்மதி அரிசியை அந்தக் கலவையில் சேர்த்து நன்றாக கிளறிவிட்டு இரண்டு நிமிடங்கள் அப்படியே விடுங்கள். நீங்கள் இதை குக்கரில் முயற்சிக்கிறீர்கள் என்றால், ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து, தேவைக்கேற்ப உப்பும் சேர்த்து,  குக்கரை மூடி, மிதமான தீயில், இரண்டு விசில் விட்டு வேக வைக்கவும். 

அல்லது பாத்திரத்தில் செய்கிறீர்கள் என்றால், ஒரு கப் அரிசிக்கு இரண்டு கப் தண்ணீர் சேர்த்து, 15 முதல் 20 நிமிடங்களுக்கு குறைந்த வெப்பத்தில் வேக விடுங்கள். அல்லது பாத்திரத்தில் உள்ள தண்ணீர் அனைத்தும் வற்றி அரிசி வேகும் வரை நன்றாக சமைக்கவும். 

அவ்வளவுதான் எளிதான கொத்தமல்லி சாதம் தயார். இதை செய்வது ரொம்ப ஈசி. 15 நிமிடங்களில் செய்து விடலாம். நிச்சயம் முயற்சித்துப் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT