Detox Water என்பது உடல் எடையைக் குறைத்து, உடலில் உள்ள கழிவுகளை நீக்கி, சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும். அதேநேரம் நம்முடைய முடி மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவும். இப்படி பல வகையில் நமக்கு பலன்களைத் தரக்கூடிய இந்த அற்புத பானத்தை வீட்டிலேயே எப்படி எளிதாக தயாரிக்கலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
இஞ்சி - சிறிய துண்டு
நெல்லிக்காய் - ஒரு முழு பெரிய நெல்லிக்காய்
தேன் - 2 ஸ்பூன்
புதினா - சிறிதளவு
எலுமிச்சை - 1
செய்முறை
முதலில் இஞ்சியை நன்கு கழுவி, அதன் தோலை சீவி சிறு சிறு அளவில் நறுக்கிக் கொள்ளவும். அதேபோல புதினா நெல்லிக்காயையும் பொடியாக நறுக்கிக் கொண்டு, அனைத்தையும் ஒன்றாக சேர்த்து இடித்துக் கொள்ளுங்கள். ஒருபோதும் இவற்றை மிக்ஸியில் சேர்த்து அரைக்கக் கூடாது. ஏனெனில், மிக்சியில் அரைக்கும்போது இவை சூடாகி அதன் உண்மையான தன்மை மாறிவிடும் என்பதால் கையிலேயே இடிப்பது நல்லது.
பின்னர் இடித்து வைத்த கலவையை வெதுவெதுப்பாக உள்ள நீரில் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் பாதி எலுமிச்சை சாறு சேர்த்து சுமார் அரை மணி நேரம் மூடி வையுங்கள். அரை மணி நேரம் கழித்து நாம் கலந்த கலவையின் அனைத்து சுவையும் நீரில் கலந்திருக்கும்.
அடுத்ததாக மேலும் பாதி எலுமிச்சை சாறை அதில் கலந்து இரண்டு ஸ்பூன் தேன் சேர்த்து ஐந்து நிமிடம் அப்படியே வைத்தால், சூப்பரான உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும் அற்புத Detox Water தயார்.
10 வயதிற்கு மேற்பட்ட யார் வேண்டுமானாலும் இந்த Detox Water குடிக்கலாம். காலையில் உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு பருகினால் நல்ல ஆற்றலைக் கொடுத்து சுறுசுறுப்பாக இருக்க உதவும். நீங்கள் விரும்பினால் பகலிலும் இந்த பானத்தை செய்து குடிக்கலாம்.