சமச்சீர் உணவு ... 
உணவு / சமையல்

‘உணவே மருந்து’ – எப்படி தெரியுமா?

இரவிசிவன்

‘உணவே மருந்து’ என்பதே நம் வாழ்வியல் முறை!
நம் உடல் ஆரோக்கியமாக இருக்க நமக்குத் தேவை  நல்லுணவு. அன்றாடம் நாம் உட்கொள்ளும் உணவில் நம் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் இருக்க வேண்டும். நம் முன்னோர்கள் சுவையின் அடிப்படையில் உணவுகளை ஆறு வகையாகப் பிரித்து உண்ணும் பழக்கத்தைக் கடைபிடித்தனர்.  இவ்வாறு சமச்சீராக அறுசுவைகளும் நிரம்பி முழுமை பெற்றதுதான்  நல்லுணவு.
ஒரு சுவை அதிகமாகவும் இன்னொரு சுவை குறைந்தும் இருந்தால் சமன் தன்மை குறைந்து உடலுக்கு சத்துக் குறைபாடு ஏற்படுகிறது அல்லது அதிகப்படியான ஒரு சுவையால் அதிக சத்துக்கள் உடலுக்குக் கிடைத்துவிடுகிறது.


சமச்சீர் உணவு இல்லையெனில் வாதம், பித்தம், கபம் போன்ற பிரச்னைகளை விளைவித்துவிடும். நாள்பட அதுவே நோய்களுக்கான மூல காரணமாகிவிடுகிறது. அந்தக் கால மருத்துவங்களும், உணவு முறைகளும் இதனை அடிப்படையாகக் கொண்டே இருந்தது.  உடல் தாதுவைப் பெருக்க, சமன் செய்ய அதற்கு ஏற்றவாறு உணவு வகைகளைத் தயாரித்து வந்தனர்.
இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கசப்பு, கார்ப்பு, துவர்ப்பு இவையே அந்த ஆறு சுவைகள். இந்த 6 சுவைகளை உள்ளடக்கி சமைக்கப்படும் உணவுகளை அறுசுவை உணவு, நல்லுணவு என்றழைத்தனர்.

இனிப்பு - தசையை வளர்க்கின்றது.
புளிப்பு - கொழுப்பினை வழங்குகின்றது.
உவர்ப்பு - உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது.
கசப்பு - நரம்புகளை பலப்படுத்துகின்றது.
கார்ப்பு - எலும்புகளை வளர்க்கின்றது.
துவர்ப்பு - ரத்தத்தைப் பெருக்குகின்றது.

சமச்சீர் உணவு


* இனிப்பு: மனிதர்களால் அதிகம் விரும்பப்படும் சுவை இதுதான். மனதிற்கு மட்டுமல்லாமல் உடலுக்கும் உடனடி உற்சாகத்தைத் தரக்கூடிய சுவையிது. குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் உதவுகின்றது. இது அதிகமாயின் உடல் தளர்வு, சோர்வு, அதிகத் தூக்கம், இருமல், உடல் எடைக் கூடுதல் போன்ற சிக்கல்கள் பலவும் தோன்ற வாய்ப்பு உள்ளது.

கிடைக்கும் உணவுப் பொருட்கள்:- பழவகைகள், உருளை, காரட் , அரிசி, கோதுமை, கரும்பு.

* புளிப்பு: உணவிற்கு மேலும் ருசி சேர்க்கும் ஒரு சுவையிது. பசியுணர்வைத் தூண்டும். உணர்வு நரம்புகளை வலுப்பெறச் செய்கின்றது. இதயத்திற்கும், செரிமானத்திற்கும் மிகவும் நல்லது. இது அதிகமாயின், தாக உணர்வினை அதிகரிக்கும். பற்களைப் பாதிக்கும். நெஞ்செரிச்சல், இரத்தக் கொதிப்பு, அரிப்பு போன்ற தொந்திரவுகளை உண்டுவிக்கும். உடல் தளரச் செய்யும்.

கிடைக்கும் உணவுப் பொருட்கள்:- எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, அரிசி, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய்.


* உவர்ப்பு: தவிர்க்க இயலாத சுவை இது. அளவோடு இருக்கும்பட்சத்தில் அனைவராலும் விரும்பப்படும் ஒன்று. உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது. மற்றச் சுவைகளைச் சமன்செய்ய உதவுகின்றது. உணவுச் செரிமானத்திலும் பங்கு வகிக்கின்றது.

கிடைக்கும் உணவுப் பொருட்கள்:- கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் அதிகமாய் இருக்கின்றது.

காய்கறிகள், பழங்கள்...

* கசப்பு: அதிகம் வெறுக்கப்படும் சுவையாக இருந்தாலும், அதிகம் நன்மைப் பயக்கும் சுவை இது ஒன்றே. மற்றச் சுவைகளை அறிய இது பெரிதும் உதவுகின்றது. சிறந்த நோய் எதிர்ப்புச் சக்தியாக செயல்படுகின்றது. தாக உணர்வைக் கட்டுப்படுத்துகின்றது. உடல் எரிச்சல், அரிப்புகளில் இருந்து நிவாரணம் தருகின்றது. காய்ச்சலைத் தணிக்கின்றது. ரத்தச் சுத்திகரிப்புச் செய்கின்றது.
கிடைக்கும் உணவுப் பொருட்கள்:- பாகற்காய், சுண்டக்காய், கத்தரிக்காய், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம்பூ, ஓமம் .

காரம்: பசியுணர்வைத் தோற்றுவிப்பதோடு அல்லாமல், செரிமானத்திற்கும் பெரிதும் உதவுகின்றது. உடல் இளைக்கவும், உடலில் உள்ள அதிகப்படியான நீரை வெளியேற்றவும் செய்கின்றது. ரத்தச் சுத்திகரிப்புச் செய்கின்றது. சரும நோய்களுக்கு நல்லதொரு பலனைத் தருகின்றது. அதிகப்படியான காரம், உடல் எரிச்சலை உண்டுவிக்கும். உடல் சூட்டை அதிகரித்து, வியர்வையை அதிகம் சுரக்கச் செய்யும். குடல் புண்கள் தோன்ற அதிக வாய்ப்பு அளிக்கும்.
கிடைக்கும் உணவுப் பொருட்கள்:- வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவற்றில் அதிகப்படியான காரச்சுவை அடங்கியுள்ளது.


* துவர்ப்பு: இது அதிகம் விருப்பு, வெறுப்பு காட்டப்படாத சுவை. உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்த சுவை. அதிக வியர்வையைக் கட்டுப்படுத்துகின்றது. ரத்தப்போக்கினைக் குறைக்க வல்லது. வயிற்றுப்போக்கினை சரி செய்யவல்லது.
கிடைக்கும் உணவுப் பொருட்கள்: வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை,அத்திக்காய்.
நம் ஒவ்வொரு மனித உடலும் தனித்தன்மை வாய்ந்தது. சரியான நேரத்தில், சரியான சத்துள்ள சமச்சீர் உணவுகளை மிகச் சரியான அளவு சாப்பிட்டு, சரியான நேரத்துக்கு உறங்கி மீண்டும் காலை சரியான நேரத்துக்கு விழித்து எழுந்து இன்னொரு நாளை மற்றொரு நாளை மீண்டும் மீண்டும் வரும் வாழ்நாளின் மொத்த நாட்களையும் இம்முறையில் எதிர்கொண்டால் நீங்கள் மிகச் சரியாக வாழ்ந்துள்ளீர்கள் என்று அர்த்தம்.

சுவாமி ஐயப்பன் அரக்கி மகிஷியை வதம் செய்த வாள் எங்குள்ளது தெரியுமா?

தோரின் பிரபலமான 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்! 

சிறுதானிய உணவுகள் உடலில் ஏற்படுத்தும் ஆரோக்கிய மாற்றங்கள்!

கேட்ட வரத்தைக் கொடுக்கும் கார்த்திகை சோமவார விரதம்!

SIP திட்டத்தின் மாதத்தவனையை தவறவிட்டால் என்ன ஆகும் தெரியுமா? 

SCROLL FOR NEXT