சோறு வடித்த கஞ்சி... Image credit - herzindagi.com
உணவு / சமையல்

வடிகஞ்சியின் ஆரோக்கிய பலன்கள்!

மகாலெட்சுமி சுப்ரமணியன்

சோறு வடித்த கஞ்சி எளிதாக எல்லோர் வீட்டிலும் செய்யக்கூடியது. அதன் பலன்கள் பலவித உடல் உபாதைகளை போக்கி நலம் தர வல்லது. சோறு வடித்த கஞ்சியை பருகிட பித்தம், கபம், வாதம் மூன்றும் ‌சீராக இயங்கும்.

கோடைகாலத்தில் ஏற்படும் வயிறு எரிச்சல், வாந்தி, வயிற்று போக்கு, சன் ஸ்ட்ரோக், நீர் இழப்பு, மலச்சிக்கல், போன்ற பிரச்சனைகளுக்கு வடிகஞ்சி நல்ல நிவாரணம் தரும். உடலுக்கு உடனடி சக்தி தரக்கூடியது. உடல் குளிர்ச்சி அடைந்து வெப்பத்தால் வரும் நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது.

வடிகஞ்சியில் சிறிதளவு வெண்ணெய் சேர்த்து பெண்கள் சாப்பிட வெள்ளைப்படுதல் ‌நோய் குணமாகும்.

ஆறிய கஞ்சி தண்ணீரை முகத்தில் தேய்த்து பின் கழுவிட முக சதைகள் இறுக்கமடைந்து சருமத்திற்கு பொலிவைத் தருகிறது.

முகப்பருவை வராமல் தடுக்கிறது. ஆறிய வடிகஞ்சியில் சீயக்காய் தூள் சேர்த்து கலந்து தலைக்கு தேய்த்து குளித்து வர உடல் குளிர்ச்சி அடைவதோடு முடி பிளவு, வறட்சியை தடுத்து முடியை பளபளப்பாக்குகிறது. முடி உதிர்வது நின்று முடியை வலுவாக்கும்.

மனச்சோர்வையும், உடல் சோர்வையும் போக்கி மூளைக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் பருக ஏற்றது. நோய்வாய்ப்பட்டவர்களும், முதியவர்களும், உணவை உட்கொள்ள சிரமப்படுபவர்களும் எளிதாக அருந்தலாம்.

நீர்ச்சத்து, கார்போஹைட்ரேட், வைட்டமின் சி,பி, மேலும் நம்மை வெயிலிருந்து பாதுகாக்கத் கூடிய oryzanol இதில் காணப்படுகிறது. உடல் எடையை குறைக்க, உணவுக்கு முன் சாப்பிட எடை அதிகரிக்கவும் உதவும்.

வடிகஞ்சியுடன் சீரகப் பொடியை கலந்து குடிக்க வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் வராது. இருமல் உள்ளவர்கள் வடிகஞ்சியுடன் பனங்கற்கண்டு சேர்த்து அருந்தலாம். வடிகஞ்சியின் முழுபயனை பெற கைக்குத்தல் அரிசியை பயன்படுத்த முழுமையான சத்துக்கள் கிடைக்கும்.

நீரிழிவு நோயாளிகள் வடிகஞ்சியை தவிர்க்கலாம். உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு உப்பு இல்லாமல் பருக கொடுக்கலாம். குழந்தைகளுக்கு கஞ்சி வடித்த நீரை பருக கொடுக்க எளிதில் ஜீரணம் ஆகும். உடல் ஊட்டம் பெறும்.

பல நன்மைகள் தரும் வடிகஞ்சியை அருந்தி ஆரோக்கியம் காப்போம்.

Buddha Quotes: புத்தரின் 15 வாழ்வியல் கருத்துக்கள்!

இரவில் தாமதமாக சாப்பிடுபவரா நீங்க? அச்சச்சோ, அது ரொம்ப தப்பாச்சே!

காலம் காலமாக நின்று பேசும் மாமல்லபுரமும் மறக்கப்பட்ட மாமல்லனும்!

அந்தப் படத்தில் ரஜினியுடன் நடித்திருக்க கூடாது! – குஷ்பு வருத்தம்!

எலான் மஸ்க் தொழில்நுட்பத்திற்கு பச்சைக்கொடி… அடேங்கப்பா! 

SCROLL FOR NEXT