சுவையான வித்தியாசமான இரண்டு பூரி வகைகள்
செய்து அசத்துங்கள்!
1. ஃப்ரூட்ஸ் பூரி.
கோதுமை மாவுடன் நெய், உப்பு சேர்த்துத் தண்ணீர் தெளித்து நன்கு பிசைந்து சிறு பூரிகளாகத் திரட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
பாலை சுண்டக் காய்ச்சி, சர்க்கரை சேர்த்து கரைந்ததும் இறக்கி ஆறவைத்து ,அதில் பொடியாக நறுக்கிய பழங்கள் (வாழைப்பழம், ஆப்பிள், ஆரஞ்சு திராட்சை ) பொடியாக நறுக்கிய முந்திரி சேர்த்து பூரி மீது ஊற்றி பரிமாறவும். சுவையை மேலும் கூட்ட சிறிதளவு வெனிலா கஸ்டர்ட் பவுடரை அரை கப் பாலில் கரைத்து கொதிக்கும் பாலில் சேர்க்கலாம். மிகவும் சுவையாக இருக்கும்.
2. ஸ்டஃப்டு பூரி
ஸ்டப்பிங் செய்ய...
உருளைக்கிழங்கு 2
கேரட் 1, பீன்ஸ் 8 ,பச்சைப்பட்டாணி கைப்பிடி அளவு பெரிய வெங்காயம் ஒன்று
இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் 2 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் ஒரு டீஸ்பூன் சீரகம் அரை டீஸ்பூன்
உப்பு எண்ணெய் தேவையான அளவு.
கோதுமை மாவுடன் பால், உப்பு தேவையான தண்ணீர் சேர்த்து பூரி மாவு பதத்திற்கு பிசைந்து வைக்கவும்.
உருளைக்கிழங்கை வேகவைத்து தோலை நீக்கி மசிக்கவும் .கேரட் பீன்ஸ் வெங்காயத்தை சுத்தம் செய்து மிகவும் பொடியாக நறுக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம் தாளித்து, வெங்காயம், கேரட், பீன்ஸ் பச்சைப் பட்டாணி சேர்த்து நன்கு வேகும் வரை வதக்கி, பிறகு இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாடை நீங்க நன்கு வதக்கவும். கடைசியில் மசித்த உருளைக்கிழங்கு ,கரம் மசாலா தேவையான உப்பு சேர்த்து நன்கு சுருண்டு வரும் வரை கிளறி இறக்கவும். மாவில் சிறு உருண்டை எடுத்து சிறிய கிண்ணம் போல் செய்து அதனுள் சிறிதளவு கிழங்குக் கலவையை வைத்து மூடி உருட்டி சிறிய பூரியாக அழுத்தாமல் தேய்க்கவும்.
வாணலியில் எண்ணெயை காயவிட்டு தேய்த்து வைத்துள்ள பூரிகளைப் பொரித்து எடுக்கவும்.
(நாம நார்மலாபூரிக்கு உருளைக்கிழங்கு மசாலாவை தொட்டுக்கொண்டு சாப்பிடுவோம். ஆனா இந்த பூரி குள்ளேயே மசாலா இருப்பதால் தொட்டுக்கொள்ள நீங்கள் எந்த சைட் டிஷ்ஷையும் செய்யத் தேவையில்லை)
கண்டிப்பாக இந்த இரண்டு பூரி வகைகளையும் விடுமுறை தினத்தன்று செய்து சபாஷ்களை அள்ளுங்கள்.
பி.கு. பூரிக்கு மாவு பிசைந்தவுடன் திரட்டி சுட்டு விட வேண்டும் அப்போதுதான் பூரி உப்பலாகவே இருக்கும் எண்ணெய்கோர்க்காது.
மாவில் ஒரு டேபிள் ஸ்பூன் ரவையை கலந்து பிசைந்து பூரி திரட்ட பூரி மொறு மொறு என்று இருக்கும்.
பூரி மாவில் சிட்டிகை ஓமத்தை கலந்து மாவு பிசைய உடலுக்கு நல்லது.