கோகுலாஷ்டமி என்றாலே உப்புச் சீடை, வெல்லச்சீடை தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். செய்ய ஆசைதான் ஆனால் அவை வெடித்து விடுமோ என்ற பயத்தில் நிறைய பேர் செய்ய தயங்குவார்கள்.
கடையில் வாங்கும் சீடை கரகரவென்று இருந்தாலும் எண்ணெய் கோர்த்து இருக்கும். வீட்டில் செய்யும் சீடையின் வாசனையே வேறு. உளுந்து வாசனையுடன் மிகவும் நன்றாக இருக்கும்.
சீடை வெடிக்காமல் இருக்க என்ன செய்யலாம்?
அரிசிமாவை நன்கு சூடு வரும்வரை வறுக்கவேண்டும். மாவை கையால் எடுத்துக் கொடு போட்டால் கோடு உடையாமல் வரவேண்டும். அதற்காக அரிசி மாவை ரொம்பவும் வறுத்து விடக்கூடாது. நிறம் மாறி சுவையும் மாறிவிடும். அடுப்பை மிதமான தீயில் வைத்து மாவு கருகாமல் ஒரே சீராக வறுக்க வேண்டும்.
சீடைக்கு சேர்க்கும் எள் மற்றும் தேங்காய்த் துருவலை வறுத்தே சேர்க்க வேண்டும். அப்பொழுதுதான் வெடிக்காது. எள்ளில் கல் மண் இல்லாமல் இருப்பதுடன், தேங்காய் துருவலிலும் நார், சிறு துரும்பு போன்றவை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
டால்டா, எண்ணெய் போன்றவற்றை சேர்க்காமல் வெண்ணெய் சேர்த்து செய்தால் சிவக்காமலும், கரகரவென்றும் வரும்.
உளுத்தம் பருப்பை நன்கு சிவக்க வறுத்து 5:1 என்ற விகிதத்தில் அரிசியையும் உளுந்தையும் சேர்த்து மிஷினில் அரைத்து வரலாம்.
அல்லது உளுத்தம் பருப்பை வீட்டிலேயே மிக்ஸியில் அரைத்து சலித்து எடுத்துக் கொள்ளவும். அரிசி மாவு, உளுத்த மாவு இரண்டையும் சலிக்கவில்லை என்றால் வெடிக்க வாய்ப்பு அதிகம்.
கடையில் மாவு அரிசி என்றே கிடைக்கும். அதை வாங்கி பட்சணம் செய்தால் நல்ல கலர் கிடைப்பதுடன் கணிசமும் ஜாஸ்தி இருக்கும்.
சீடை வெடிக்காமல் இருக்க அழுத்தி உருட்டக்கூடாது. உருட்டிய சீடைகளை காற்றாட சில நிமிடங்கள் காட்டன் துணியில் போட்டு வைத்து பின்பு பொரிக்க வெடிக்கவே வெடிக்காது.
இப்பொழுதுதான் முதல் முறையாக செய்கிறீர்கள் என்றால் (beginners) ஒவ்வொன்றையும் மெல்லிய ஊசி அல்லது குச்சி கொண்டு 2 துளையிட்டு பொரிக்க பயமில்லாமல் பொரிக்கலாம்.
உப்பு சீடைகளை ஒன்றிரண்டாக போட்டு பொரிக்காமல் தட்டு நிறைய எடுத்து எண்ணெய் நன்கு காய்ந்ததும் சூடான எண்ணெயில் போட்டு பொரிப்பதுதான் நல்லது.
முதல் ஈடு போட்டதும் எட்டி நிற்ப்பது நல்லது. சீடைகள் போட்டவுடன் வெடிக்காது. அதில் தூசு கல் மண் போன்றவை இருந்தால் சிறிது நேரம் கழித்துதான் வெடிக்க ஆரம்பிக்கும். அதனால் கிட்டே சென்று எட்டிப் பார்க்காமல் இருப்பது நல்லது.
சீடைகள் செய்ய பதப்படுத்தப்பட்ட அரிசி மாவை பயன்படுத்த ஜோராக இருக்கும். மிஷினுக்கு செல்ல நேரமில்லை என்று நினைப்பவர்கள் ரெடிமேட் மாவையும் வாங்கி பயன்படுத்தலாம்.
வெல்லச்சீடை வெடிக்காமல் இருக்க வெல்லத்தை கல் மண் போக வடிகட்டி பயன்படுத்தவேண்டும்.
ரொம்ப மென்மையாக உருட்டாமல் லேசாக அதிக ஷேப் இல்லாமல் உருட்டினால் வெடிக்காது.
வெல்லம் அதிகமானால் சீடை எண்ணெயில் போட்டதும் கரைந்து விடும். தேங்காய்த் துருவல் சேர்ப்பது சுவையைக் கூட்டுவதுடன், மேலாக கரகர வென்றும் உள்ளே மிருதுவாக இருப்பதற்கும் உதவும்.