முளைக்கட்டிய பச்சைப்பயறு வைத்து செய்யப்படும் பிசரட்டு தோசை ஆந்திராவில் மிகவும் பிரபலமான காலை உணவாகும். இதை இஞ்சி சட்னி மற்றும் உப்புமாவுடன் சேர்த்து சாப்பிடுவார்கள். பிசரட்டு இரண்டு வார்த்தைகளாக பிரித்தால் பிசரா மற்றும் அட்டு என்பதாகும். தெலுங்கில் ‘பிசரா’ என்றால் பச்சைப்பயறு என்று அர்த்தம். ‘அட்டு’ என்றால் தோசை என்று அர்த்தம். இன்றைக்கு இத்தகைய சத்தான உணவை வீட்டிலேயே சுலபமாக எப்படி செய்வது என்று பார்ப்போம்.
பிசரட்டு தோசை செய்ய தேவையான பொருட்கள்;
முளைக்கட்டிய பச்சைப்பயறு-2 கப்.
பச்சை மிளகாய்-2
இஞ்சி-1 துண்டு.
பாலக்கீரை-சிறிதளவு.
உப்பு- தேவையான அளவு.
எண்ணெய்- சிறிதளவு.
பிசரட் தோசை செய்முறை விளக்கம்;
முளைக்கட்டிய பச்சைப்பயறு 2கப், பச்சை மிளகாய் 2, இஞ்சி 1 துண்டு, பாலக்கீரை சிறிதளவு, தேவையான அளவு உப்பு ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு தோசைப் பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
இப்போது தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு தோசை ஊற்றி இரண்டு பக்கமும் நன்றாக வேகவிட்டு எடுக்கவும். அவ்வளவு தான். சுவையான மற்றும் ஆரோக்கியமான பிசரட்டு தோசை தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.
இஞ்சி சட்னி செய்ய தேவையான பொருட்கள்;
புளி- எழுமிச்சை அளவு.
எண்ணெய்- தேவையான அளவு.
கடுகு-1 தேக்கரண்டி.
உளுந்து-1 தேக்கரண்டி.
கருவேப்பிலை-10
பச்சை மிளகாய்-3
பெருங்காயத்தூள்-சிறிதளவு.
இஞ்சி-1/2 கப்.
மஞ்சள்தூள்-2 சிட்டிகை.
வெல்லம்-2 தேக்கரண்டி.
உப்பு- தேவையான அளவு.
தாளிப்பதற்கு,
எண்ணெய்-2 தேக்கரண்டி.
கடுகு-1/2 தேக்கரண்டி.
உளுந்து-1/2 தேக்கரண்டி.
கருவேப்பிலை-சிறிதளவு.
இஞ்சி சட்னி செய்முறை விளக்கம்;
முதலில் ஒரு எழுமிச்சை அளவு புளியை முக்கால் கப் சுடுத்தண்ணீர் விட்டு 30 நிமிடம் ஊறவைத்துக் கொள்ளவும்.
இப்போது ஃபேனில் சிறிதளவு எண்ணெய்விட்டு அதில் கடுகு 1 தேக்கரண்டி, உளுந்து 1 தேக்கரண்டி சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். இப்போது இதில் 3 பச்சை மிளகாய், பெருங்காயத்தூள் சிறிதளவு சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.
இப்போது இதில் 10 கருவேப்பிலை சேர்த்து நன்றாக வறுக்கவும். தோலுரித்து சிறிதாக வெட்டி வைத்திருக்கும் இஞ்சி ½ கப் சேர்த்துக் கொள்ளவும். இஞ்சியின் பச்சை வாடை போகும் வரை நன்றாக வதக்கிக் கொள்ளவும். மஞ்சள் தூள் 2 சிட்டிகை சேர்த்து வதக்கி அடுப்பிலிருந்து இறக்கிவிடவும். இப்போது இதை ஆறவிட்டு பின் மிக்ஸியில் மாற்றிக்கொள்ளவும். இதில் வெல்லம் 2 தேக்கரண்டி, உப்பு தேவையான அளவு சேர்த்துக்கொள்ளவும்.
கடைசியாக ஏற்கனவே எடுத்து வைத்திருக்கும் புளிக்கரைச்சலை இத்துடன் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும். இப்போது இதை ஒரு பவுலில் எடுத்து வைத்து விட்டு அடுப்பில் ஃபேனை வைத்து 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு அதில் ½ தேக்கரண்டி கடுகு, ½ தேக்கரண்டி உளுந்து, கருவேப்பிலை சிறிதளவு சேர்த்து தாளித்து எடுத்து இஞ்சி சட்னியில் சேர்த்து நன்றாக கலந்துவிடவும். அவ்வளவு தான். சுவையான இஞ்சி சட்னி தயார். நீங்களும் வீட்டிலே இந்த சிம்பிள் ரெசிபியை ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.