இன்றைக்கு தீபாவளி ஸ்பெஷலாக இனிப்பான மைசூர் பாக் மற்றும் ரஸ்க் அல்வா ரெசிபிஸை வீட்டிலேயே சுலபமாக எப்படி செய்வது என்று பார்ப்போம்.
மைசூர் பாக் செய்ய தேவையான பொருட்கள்.
கடலை மாவு-1 கப்.
நெய்-1கப்.
சர்க்கரை-1 கப்.
தண்ணீர்-1/4 கப்.
மைசூர் பாக் செய்முறை விளக்கம்.
முதலில் ஃபேனில் 1 கப் கடலை மாவை பத்து நிமிடம் குறைந்த தீயில் வறுக்கவும். அடுத்து வறுத்த மாவை நன்றாக சலித்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
இப்போது எந்த கப்பில் மாவை அளந்தோமோ அதே கப்பில் நெய்யை அளந்து உருக்கி வைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மாவை எடுத்துக்கொண்டு அதில் நெய்யை ஊற்றி நன்றாக கட்டியில்லாமல் கலக்கி வைத்துக்கொள்ளுங்கள்.
இப்போது ஃபேனில் 1 கப் சர்க்கரை ¼ கப் தண்ணீர் ஊற்றி ஒரு கம்பி பதம் வந்ததும் உடனே கரைத்து வைத்திருக்கும் மாவை இத்துடன் சேர்த்து தொடர்ந்து கைவிடாமல் கிண்ட வேண்டும். 5 நிமிடம் கழித்து நெய் கொஞ்சம் சேர்த்து கிண்டவும். மைசூர் பாக்கின் ஓரத்தில் நுரைத்துக் கொண்டு வரும் இப்போது இதை ஏற்கனவே நெய் தடவி வைத்திருக்கும் பாத்திரத்தில் ஊற்றிவிடவும். அரை மணி நேரம் கழித்து அழகாக கட்டியாகியிருக்கும். இப்போது வேண்டிய அளவில் துண்டுகள் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். சுவையான நெய் மைசூர் பாக் தயார். இந்த தீபாவளிக்கு நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பாருங்கள்.
ரஸ்க் அல்வா செய்ய தேவையான பொருட்கள்.
நெய்- தேவையான அளவு.
பாதாம்-10
பிஸ்தா-10
முந்திரி-10
சக்கரை-1/2 கப்.
குங்குமப்பூ-1 சிட்டிகை.
ஏலக்காய்-4
ரஸ்க்-1 பாக்கெட்.
ரஸ்க் அல்வா செய்முறை விளக்கம்.
முதலில் கடாயில் 2 தேக்கரண்டி நெய்விட்டு பொடியாக நறுக்கிய பாதாம் 10, பிஸ்தா 10, முந்திரி 10 ஆகியவற்றை பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அடுத்து மிக்ஸியில் 1 ரஸ்க் பாக்கெட்டில் உள்ள ரஸ்க் அனைத்தையும் அரைத்து எடுத்துக்கொள்ளவும். அரைக்கும் பொழுது ரஸ்க்குடன் ஏலக்காய் 4 சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
இப்போது கடாயில் இருக்கும் நெய்யில் அரைத்த ரஸ்க்கை சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்துக்கொள்ளவும். இதில் கொதிக்கும் தண்ணீர் 2 ½ கப் ஊற்றிக்கொள்ளவும். இத்துடன் ½ கப் சர்க்கரையை பவுடர் செய்து சேர்த்துக் கொள்ளவும். நன்றாக கட்டியில்லாமல் கிளறிய பிறகு 1 தேக்கரண்டி நெய் சேர்த்து கிண்டவும். இப்போது 1 சிட்டிகை குங்குமப்பூ, வறுத்து வைத்திருக்கும் பாதாம், பிஸ்தா, முந்திரி சேர்த்து நன்றாக கிளறி இறக்கினால் டேஸ்டியான ரஸ்க் அல்வா தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலேயே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.