Thirupagam sweet and appala kootu recipe Image Credits: Vidhya's Vegetarian Kitchen
உணவு / சமையல்

திருநெல்வேலி ஸ்பெஷல் திருபாகம் - அப்பளக்கூட்டு செய்யலாம் வாங்க!

நான்சி மலர்

திருபாகம் திருநெல்வேலியில் செய்யப்படும் பாரம்பரியமான இனிப்பு வகையாகும். சஷ்டி பண்டிகையின்போது முருகனுக்கு நெய்வேத்தியமாக செய்யப்படும். திருச்செந்தூர் முருகனின் பிரசாதம் இந்த திருபாகமாகும். அத்தகைய சிறப்பு மிக்க திருபாகத்தை எளிமையாக வீட்டில் எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.

திருபாகம் செய்ய தேவையான பொருட்கள்;

முந்திரி-1கப்.

கடலை மாவு-1/2 கப்.

நெய்-1 குழிக்கரண்டி.

பச்சை கற்பூரம்-1 சிட்டிகை.

குங்குமப்பூ-சிறிதளவு.

சக்கரை-1கப்.

பால்-1கப்.

திருபாகம் செய்முறை விளக்கம்;

முதலில் முந்திரி 1 கப்பை மிக்ஸியில் போட்டு பவுடராக அரைத்து கொள்ளவும். இப்போது அடுப்பில் ஃபேனை வைத்து அதில் கடலை மாவு ½ கப் சேர்த்து 5 நிமிடத்திற்கு வறுத்துவிட்டு  அதில் பால் 1 கப் விட்டு கட்டி இல்லாமல் கலக்கி எடுத்துக்கொள்ளவும்.  இப்போது குங்குமப்பூவை பாலில் சேர்த்து நன்றாக கலக்கிவிட்டு அதையும் இத்துடன் சேர்த்துக்கொள்ளவும்.

அடுப்பில் வைத்து கிண்டிவிட்டு 1 கப் சக்கரை, நெய்1 குழிக்கரண்டி சேர்த்து நன்றாக கிளறவும். இப்போது பார்ப்பதற்கு திரண்டு வரும் அந்த நேரத்தில் அரைத்து வைத்திருக்கும் முந்திரியை சேர்த்து கிண்டிவிடவும். அத்துடன் நெய் சேர்த்து நன்றாக கிண்டி கடைசியாக பச்சை கற்பூரம் 1 சிட்டிகை சேர்த்து இறக்கவும். அவ்வளவு தான் சுவையான திருபாகம் தயார். நீங்களும் வீட்டில் இந்த ரெசிபியை ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க.

அப்பளக்கூட்டு செய்ய தேவையான பொருட்கள்;

அப்பளம்-3

கடலைப்பருப்பு-1கப்.

தக்காளி-1

பூண்டு-4

வெங்காயம்-1

மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி.

துருவிய தேங்காய்-2 தேக்கரண்டி.

பச்சை மிளகாய்-1

இஞ்சி-1 துண்டு.

சாம்பார் பொடி-1 தேக்கரண்டி.

சோம்பு-1 தேக்கரண்டி.

ஜீரகம்-1 தேக்கரண்டி.

உப்பு-தேவையான அளவு.

கொத்தமல்லி-சிறிதளவு.

எண்ணெய்- சிறிதளைவு.

கடுகு-1/2 தேக்கரண்டி.

ஜீரகம்-1/2 தேக்கரண்டி.

பெருங்காயத்தூள்-சிறிதளவு.

அப்பளக்கூட்டு செய்முறை விளக்கம்;

முதலில் 1கப் கடலைப்பருப்பை தண்ணீர் ஊற்றி 1 மணி நேரம் ஊற வைக்கவும். இப்போது குக்கரில் தக்காளி 1கப், பூண்டு 4, வெங்காயம் 1கப், ஊறவைத்த கடலைப்பருப்பு 1கப், மஞ்சள் தூள் ¼ தேக்கரண்டி சேர்த்து தண்ணீர் விட்டு குக்கரில் நன்றாக வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். இப்போது துருவிய தேங்காய் 2 தேக்கரண்டி,   பச்சை மிளகாய் 1, இஞ்சி 1 துண்டு, சாம்பார் பொடி 1 தேக்கரண்டி. சோம்பு 1 தேக்கரண்டி, சீரகம் 1 தேக்கரண்டி கொஞ்சம் தண்ணீர்விட்டு இவை அனைத்தையும் மிக்ஸியில் அரைத்து பருப்புடன் சேர்த்துக்கொள்ளவும்.

இப்போது இதில் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு கொத்தமல்லி சிறிது சேர்த்துக்கொள்ளவும். இப்போது நன்றாக பொரித்த அப்பளத்தை 3 எடுத்து உடைத்து அதை இத்துடன் சேர்த்து கிண்டிக்கொள்ளவும். ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு அதில் கடுகு ½ தேக்கரண்டி,  ஜீரகம் ½ தேக்கரண்டி சேர்த்து பெருங்காயப்பொடி சிறிது சேர்த்து இந்த தாளிப்பை பருப்புடன் சேர்த்து விட்டு இறக்கி விடவும். அவ்வளவுதான் சுவையான அப்பளக்கூட்டு தயார். வீட்டில் காய்கறி இல்லாத சமயத்தில் இந்த சிம்பிள் ரெசிபியை செய்து பார்க்கலாம்.

தவறுகளை ஒப்புக்கொள்வது உங்களை அடுத்த உயரத்துக்கு எடுத்துச்செல்லும்!

தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதை நிரூபித்த முதல் இந்திய விஞ்ஞானி!

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

SCROLL FOR NEXT