Mango Malai Roll 
உணவு / சமையல்

Mango Malai Roll: வேற லெவல் ஸ்வீட் ரெசிபி! 

கிரி கணபதி

இனிப்புகள் என்றால் யாருக்குதான் பிடிக்காது? அதுவும் பால் பயன்படுத்தி செய்யப்படும் இனிப்புகளுக்கு ரசிகர்கள் ஏராளம். இந்தப் பதிவில் பால், மாம்பழம் போன்றவற்றைப் பயன்படுத்தி செய்யப்படும் வேற லெவல் சுவையுடைய மேங்கோ மலாய் ரோல் ஸ்வீட் எப்படி செய்வது? எனப் பார்க்கலாம். இதை ஒரு முறை வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால், மீண்டும் மீண்டும் செய்து கொடுக்கச் சொல்லி உங்களை நச்சரித்துக் கொண்டே இருப்பார்கள். அந்த அளவுக்கு இதன் சுவை அட்டகாசமாக இருக்கும். 

தேவையான பொருட்கள்: 

  • நன்கு பழுத்த மாம்பழங்கள் 2 

  • பிரட் 8

  • பால் ½ கப்

  • மலாய் செய்வதற்கு பால் 1 கிளாஸ் 

  • பால் பவுடர் 1 கப் 

  • சர்க்கரை 1/2 கப் 

  • நெய் 1 ஸ்பூன்

  • லவங்கப்பட்டை தூள் ¼ ஸ்பூன்

செய்முறை: 

மலாய் செய்வதற்கு, முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஒரு கிளாஸ் பாலை ஊற்றி, மிதமாக சூடேற்றவும். பின்னர் அதில் பால் பவுடரை கொட்டி கட்டிகள் இல்லாமல் கலக்கிக் கொள்ளுங்கள். 

பால் பவுடர் மொத்தமாக கரைந்ததும், அதில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து கிளறிவிடவும். இப்போது, உங்களுக்கு தேவையான அளவு சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும். இந்தக் கலவையில் கால் ஸ்பூன் அளவுக்கு லவங்கப்பட்டை தூள் சேர்க்கவும். 

இவை அனைத்தையும் சேர்த்த பிறகு மிதமான தீயில், பால் கலவை கெட்டியான பதத்திற்கு வரும் வரை கிளறிக் கொண்டே இருங்கள். இதற்கு சுமார் 20 நிமிடங்கள் வரை ஆகலாம். 

அடுத்ததாக, ரொட்டித் துண்டுகளின் ஓரங்களை நீக்கிவிட்டு, சப்பாத்தி கட்டையை வைத்து நன்கு அழுத்திக் கொள்ளுங்கள். அதன் மேலே தயாரித்து வைத்துள்ள மலாய் கலவையைத் தடவவும். பின்னர் அதை ஒரு ரோல் போல உருட்டி தனியாக வைத்துக் கொள்ளுங்கள். இப்படியே எல்லா ரொட்டித் துண்டுகளையும் செய்யவும். 

பின்னர் மாம்பழங்களின் தோலை சீவி, அதன் சதைப்பற்றை தனியாக எடுத்து, மிக்ஸியில் போட்டு மைய அரைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு இனிப்பு தேவை என்றால், இதில் சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம். மாம்பழம் நன்கு அரைந்ததும் அதில் அரை கப் அளவுக்கு பால் ஊற்றிக் நன்றாக பிளண்ட் செய்து கொள்ளுங்கள். 

இப்போது ஒரு நீளமான பாத்திரத்தில், தயாரித்து வைத்துள்ள பிரட் ரோலை அடுக்கி, அதன் மேலே மாம்பழக் கூழை ஊற்றவும். பின்னர் அவற்றின் மேல் நட்ஸ், டிரை ஃப்ரூட்ஸ், மாம்பழத் துண்டுகளை போட்டு அலங்கரித்தால் மேங்கோ மலாய் ரோல் தயார். 

இந்த அட்டகாசமான ரெசிபியை இன்றே முயற்சித்துப் பார்த்து, எப்படி இருந்தது என உங்களது அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 

மிட் நைட் பிரியாணி ரசிகரா நீங்கள்? அப்போ, அவ்வளவுதான்! 

'கை தந்த பிரான்' என்று அழைக்கப்படும் சிவஸ்தலம் எங்குள்ளது தெரியுமா?

மாதவிடாய் நேரத்தில் முடி கொட்டுகிறதா? அப்ப இதுதான் காரணம்!

கண் பார்வை மேம்பாட்டிற்கு உதவும் 5 பயிற்சிகள்!

ஹனுமனை வெறுக்கும் துரோனகிரி கிராம மக்கள்… ஏன் தெரியுமா?

SCROLL FOR NEXT