தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நம்மால் இட்லி, தோசை போன்ற உணவுகளை ஒருபோதும் தவிர்க்க முடியாது. அதிலும் தோசை மெல்லிதாக பேப்பர் போல இருந்தால்தான் பலருக்கு பிடிக்கும்.
மேலும், கேரட் தோசை, வெங்காய தோசை, மல்லி தோசை, புதினா தோசை என விதவிதமான தோசைகளை செய்து சாப்பிடும் பழக்கம் நமக்கு உள்ளது. இப்படி நீங்களும் ஒரு தோசை விரும்பியாக இருந்தால், உடலுக்கு ஆரோக்கியம் தரும் முடக்கத்தான் தோசை ஒருமுறை செய்து பாருங்கள். இது சாப்பிட சுவையாகவும் ஆரோக்கியம் தரும் ஒன்றாகவும் இருக்கும்.
தேவையான பொருட்கள்:
தோசை மாவு - 1 கப்
வெங்காயம் - 1
கேரட் - 1
தயிர் - 3 ஸ்பூன்
ரவை - 2 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
வர மிளகாய் - 3
பூண்டு - 5 பல்
முடக்கத்தான் கீரை - 1 கப்
உப்பு - தேவையான அளவு
கருவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
மஞ்சள் தூள் - ½ ஸ்பூன்
எண்ணெய் - சிறிதளவு
செய்முறை:
முதலில் வெங்காயத்தையும் கேரட்டையும் நன்றாக கழுவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக தோசை மாவில் தயிர், ரவை, சேர்த்து கலக்கி வைத்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் முடக்கத்தான் கீரை, கருவேப்பிலை, பூண்டு, வர மிளகாய், சீரகம் போன்றவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு இந்த கலவையை தோசை மாவுடன் சேர்த்து கலக்கவும். தண்ணீர் தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளவும்.
அடுத்ததாக தோசை மாவில் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து, கொஞ்ச நேரம் அப்படியே விட்டு விடுங்கள். பிறகு தோசை கல்லை அடுப்பில் வைத்து அது நன்றாக சூடானதும், கலக்கி வைத்துள்ள மாவை தோசை போல ஊற்ற வேண்டும். அவற்றின் மேல் நறுக்கிய கேரட், வெங்காயம், கொத்தமல்லி தூவி இருபுறமும் திருப்பிப் போட்டு நன்கு வேகவைத்து எடுத்தால், சுவையான முடக்கத்தான் தோசை தயார்.