நெல்லை மாவட்டதில் மண் மாறா பாரம்பரிய உணவுகள் இன்றும் சமைத்து சாப்பிடுபவர்கள் ஏராளம். திருநெல்வேலி என்றால் உடனே அல்வா மட்டுமல்ல, நிறைய உணவு வகைகள் உள்ளது. அதில் கூட்டாஞ்சோறு சோறு, உளுத்தம்பருப்பு சோறு, சொதி குழம்பு என நிறைய உள்ளது. அதில் புளி மிளகாய் கீரை கடைசல் பிரசித்தி பெற்றது. அதை செய்து பாருங்கள்.
புளி மிளகாய் கீரை கடைசல்
தேவை:
அரைக்கீரை ஆய்ந்தது - 1 கப்
புளி - நெல்லி அளவு.
மிளகாய் தூள்- 2 ஸ்பூன்
மிளகாய் வற்றல்-2
பெருங்காயம் - சிறிது
சின்ன வெங்காயம் - 5
கடுகு - 1 ஸ்பூன்
உடைத்த உளுத்தம் பருப்பு-1 ஸ்பூன்.
நல்லெண்ணெய் - 2 ஸ்பூன்.
உப்பு - தேவைக்கு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் 2 கப் நீரில்புளியை கரைத்து வடிகட்டி வைக்கவும். அதில் மிளகாய் தூள், உப்பு சேர்த்து பொடியாக நறுக்கிய அரைக் கீரையை போட்டு அடுப்பில் வைத்து மிதமான தீயில் வைத்து கொதிக்க விடவும். கீரை வெந்ததும் இறக்கி ஆற விடவும். ஆறிய கீரையை மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, நறுக்கிய உளுத்தம்பருப்பு, கிள்ளிய மிளகாய் வற்றல், நறுக்கிய வெங்காயம் சேர்த்து தாளித்து பெருங்காயம் சேர்த்து வதக்கி,
அதில் அரைத்த கீரை கரைசலை சேர்த்து கொதிக்க வைத்து இறக்கினால் புளி மிளகாய் கீரை கடைசல் தயார். சூடான சாதத்தில் நல்லெண்ணெய் விட்டு கீரை கடைசலை பிசைந்து சாப்பிட ருசியோ ருசி. பொறிகடலை துவையல்,அதனுடன் சுட்ட அப்பளம் தொட்டு சாப்பிட்டு பாருங்கள். இன்னும் வீட்டினர் நிறைய கேட்டு சாப்பிடுவார்கள்.
காரவடை
தேவை:
பட்டாணி பருப்பு-2 கப்
முழு உளுத்தம்பருப்பு-1/2 கப்
பெரிய வெங்காயம் - 3
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை, மல்லித்தழை - சிறிது
உப்பு - தேவைக்கு
கடலை எண்ணெய் - பொரிக்க
செய்முறை:
பருப்புகளை கருவி தண்ணீர் விட்டு மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய பின் கிரைண்டரில் சிறிது நீர் தெளித்து மையாக அரைக்கவும். அரைத்த விழுதில், பச்சரிசி மாவு, உப்பு , நறுக்கிய வெங்காயம்|நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்த மாவை உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். சூடான திருநெல்வேலி கார வடை ரெடி.
மாலை நேரத்தில் மொறு மொறுவென சூடாக சாப்பிட ருசியோ ருசிதான். செய்து சாப்பிட்டு பார்த்து கருத்து கூறுங்கள்.