உடல் உரமேற கோதுமைப் பண்டங்கள் சாப்பிடுவது நல்லது. சப்பாத்தியில் பல வகைகள் பலருக்கும் தெரிந்திருக்கும். இருந்தாலும் சப்பாத்தி செய்வதில் பல நுணுக்கங்கள் உண்டு. அவற்றை ஸ்டெப் பை ஸ்டெப் பார்ப்போமா?
மசாலாவில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று டிரை மசாலா. மற்றது வெட் மசாலா.
டிரை மசாலா சப்பாத்தி:
உப்பு, பெருங்காயப் பொடி, மிளகாய்ப் பொடி, மஞ்சள் பொடி, ஜீரகப் பொடி. இவற்றை கோதுமை மாவுடன் சேர்த்து, எண்ணெய் + இளஞ்சூடான நீர் + 1 சின்ன குழிக்கரண்டி அளவு தயிர் சேர்த்துப் பிசைந்து 'சுக்கா'வாக இல்லாமல் எண்ணெய் விட்டு சப்பாத்தியை ரோஸ்ட் செய்ய வேண்டும். இந்த மாவுடன் வெள்ளை எள், ஓமம் இவற்றைப் பொடிக்காமல் முழுதாய் போட்டு சப்பாத்தி செய்ய நல்ல சுவை கொடுக்கும். பிடிக்காதவர்கள் தவிர்த்து விடலாம்.
வெட் மசாலா சப்பாத்தி:
பூண்டு, இஞ்சி, ப. மிளகாய், உப்பு, மஞ்சள் பொடி ஆகியவற்றை மாவில் சோத்து, எண்ணெய் அல்லது தயிர் (அ) மோர் ஒரு சிறிய குழிக்கரண்டி அளவு + இளஞ்சூடு நீர் சேர்த்து நன்றாகப் பிசைந்து எண்ணெய் விட்டு 'ரோஸ்ட' செய்ய பட்டான சப்பாத்தி கிடைக்கும். வெட் மசாலா போட்டுச் செய்யும் போது ஓமம் + வெள்ளை எள் சேர்த்துச் செய்தால் சூப்பர் குசியாக இருக்கும்.
சில நேரங்களில் நம் வீட்டில் மாங்காய் (அ) எலுமிச்சை ஊறுகாயில், காய் தீர்ந்து விழுது மிஞ்சிவிடும். அந்த மசாலா விழுதை கோதுமை மாவுடன் சேர்த்துப் பிசைந்து எண்ணெய் விட்டு ரோஸ்ட் செய்து சப்பாத்தி செய்தால் தொட்டுக் கொள்ளக் கூட எதுவும் வேண்டாம். அப்படியே சாப்பிடலாம்.
நாம் சமைத்த கூட்டு, பொரியல் இவைகள் மீந்து போனால் கவலைப்படாமல், எல்லாவற்றையும் ஒன்றாக மிக்ஸியில் அரைத்துத் தேவையான உப்பு, காரம், எண்ணெய் சேர்த்துச் சிறிதளவு நீர் தெளித்து மாவு பிசைந்து சப்பாத்தி செய்யலாம். நமக்குப் பொருட்கள் வீணாகாமல் புதுமையான பண்டமாக மாறி குழந்தைகளை மகிழ்விக்கும். உடம்புக்கும் நல்லது.
சுரைக்காயைத் தோல் நீக்கி நன்றாகத் துருவி ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துப் பிசிறி வைத்தால் சிறிது நேரத்தில் அதிலிருந்து நீர் பிரியும். சுரைக்காய் துருவலை நன்றாகப் பிழிந்து மாவில் வெட் மசாலாவுடன், ஓமம், வெள்ளை எள். சேர்த்துப் பிசைந்து தேவைப்பட்டால் பிழிந்த நீரிலிருந்து கொஞ்சம் ஊற்றி கெட்டியாகப் பிசைந்து ஊறவைத்து சப்பாத்தி செய்யலாம். ஓமம் வாசனை பிடிக்காதவர்கள் சீரகம் சேர்க்கலாம்
இதே போல் வெள்ளை பூசணிக்காய் பரங்கிக்காய் பப்பாளிக்காய், தர்பூசணிப் பழத்தின வெள்ளை சதைப் பகுதி ஆகியவற்றையும் போட்டு சப்பாத்தி செய்யலாம்
துருவிய கேரட்டும் வடிகட்டிய தக்காளி சாறும் டிரை) வெட் மசாலாவுடன் மாவு சேர்த்து சப்பாத்தி செய்யலாம்.
வாழைப் பழத்தைப் பிசைந்து சர்க்கரை (அ) வெல்லம் + ஒரு டேபிள் ஸ்பூன் நெய் + ஏலப்பொடி ஆகியவற்றைப் பிசைந்து பஞ்சாமிர்தமாக்கி மாவில் சேர்த்து இனிப்பு சப்பாத்தி செய்துகொடுக்கலாம். பழங்கள் அதிகம் விரும்பாத குழந்தைகள், ஏலக்காய் வாசனையினால் சப்பாத்தி உருவில் பழங்களை சாப்பிடுவர். இம் முறையில் சுடும் சப்பாத்தியை நெய் விட்டு ரோஸ்ட் செய்ய வேண்டும். இதேபோல் எல்லாப் பழங்களையும் கூழாக்கி இனிப்பு சப்பாத்தி செய்யலாம்.
உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து இரு பங்கு மாவிற்கு ஒரு பங்கு மசித்த கிழங்கு சேர்த்து டிரை (அ) வெட் மசாலா தயிர் + எண்ணெய் + உப்பு + நீர் +ஓமம் (அ) சீரகம் +வெ. எள் இதனுடன் கரம் மசாலா பவுடரும் சோ்த்து மாவைப் பிசைந்து எண்ணெய் விட்டு சப்பாத்தி செய்யலாம்.
தினமும் சப்பாத்தி சாப்பிடுபவர்களுக்கு விதவிதமாக சாப்பிட கொடுத்தால் அலுப்பு வராது. குழந்தைகளுக்கும் ஃபுட்கலர் சோ்க்காமல், இயற்கையான கலர் சப்பாத்திகளை, பீட்ரூட். கேரட் எல்லாவிதமான கீரைகள், தக்காளி. மஞ்சள் பொடி ஆகியவற்றைக் கொண்டும் தேங்காய்ப் பால் சோ்த்துப் பிசைந்தும் சப்பாத்திகளைச் செய்யலாம்.
தேங்காய்ப் பால் சேர்த்துச் செய்யும்போது, இனிப்பு சப்பாத்தியும், கார சப்பாத்தியும் செய்யலாம். காரம் செய்யும்போது இஞ்சிச் சாறு பிழிந்தும். இனிப்பு செய்யும் போது சுக்கை பட்டாகப் பொடி செய்து கலந்தும் சப்பாத்தி செய்யலாம்.