தற்போது சோயாசங்ஸ் எனப்படும் சோயா உருண்டைகள் சேர்த்த உணவுகள் பெருமளவு வரவேற்பு பெறுகின்றன. கோலா உருண்டை, குருமா, கிரேவி, போன்ற பல சோயா ரெசிபிகள் உலா வருகிறது. குறிப்பாக இறைச்சியின் அத்தனை சத்துக்களும் அடங்கிய தாவர அடிப்படையிலான உணவு மற்றும் அதிக புரதம் இருப்பதால் அசைவ உணவு உண்பவர்களிடமும் பிரபலமாக இருப்பதால் இதற்கு சைவ இறைச்சி எனும் பெயரே உள்ளது.
சோயா துண்டுகள் டெக்ஸ்சர்டு வெஜிடபிள் புரோட்டீன் (டிவிபி) அல்லது டெக்ஸ்சர்டு சோயா புரோட்டீன் (டிஎஸ்பி) ஆகும். பீன்ஸ் பிரித்தெடுத்தல் சோயாபீன் எண்ணெய் கிடைக்கும். எண்ணெய் அனைத்தும் நீக்கப்பட்டதால் சோயா துண்டுகள் கொழுப்பு இல்லாதவையும் இதன் நன்மை. கூடவே நீரிழப்பு இழந்து கெட்டியாக வரும் சோயா துண்டுகளை தண்ணீரில் ஊறவைத்து எடுத்ததும் மென்மையாகவும், நார்ச்சத்துடனும், பஞ்சு போன்றதாகவும் மாறி சமைக்க எளிதாகிறது.
சரி இனி முந்திரி சேர்த்து செய்யும் சோயாசங்ஸ் குருமா செய்முறையைக் காண்போம்..
தேவையான பொருட்கள்:
சோயா உருண்டைகள் - 1/4 கிலோ
வெங்காயம் -4
தக்காளி -4
இஞ்சி , பூண்டு விழுது -1டீஸ்பூன்
தேங்காய் துருவல் -1கப்
முந்திரிப்பருப்பு -25 கிராம்
எலுமிச்சம்பழம் -அரை மூடிச் சாறு
தனியாத்தூள் -2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் -1 ஸ்பூன்
மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன்
கடுகு உளுந்து - தாளிக்க
பட்டை -1 துண்டு
லவங்கம்- 3
ஏலக்காய் -4
சோம்பு - சிறிது
கறிவேப்பிலை கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
புதியதாக வாங்கிய சோயா உருண்டைகளை சுடுநீரில் போட்டு அலசி பிழிந்து எடுத்துக் கொள்ளுங்கள். தேங்காய் துருவலுடன், முந்திரி, சோம்பு, பட்டை, லவங்கம் போட்டு மிக்சியில் அரைத்து எடுக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு கறிவேப்பிலை போட்டு பொரிந்ததும் ஏலக்காய் போட்டு அதனுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி கூடவே நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுதைப் போட்டு வாசம் போக வதக்கி அதனுடன் சோயா உருண்டைகள் சேர்த்து மல்லித்தூள் மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும். இதனுடன் அரைத்த தேங்காய் விழுது ,முந்திரி விழுது சேர்த்து நன்கு வதக்கி உப்பு போட்டு தேவையான நீரூற்றி இரண்டு விசில் விட்டு இறக்கி எலுமிச்சைசாறு ஊற்றிக் கிளறி மிதமான தீயில் வைத்து கெட்டியானதும் கொத்துமல்லித்தழை தூவி பரிமாறலாம். இது பரோட்டா சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள ஏற்ற குருமா.