Schezwan Noodles Recipe 
உணவு / சமையல்

Wow… Wow… செஸ்வான் நூடுல்ஸ் ரெசிபி! 

கிரி கணபதி

சீனாவின் செஸ்வான் மாகாணத்தில் தோன்றிய செஸ்வான் நூடுல்ஸ், தற்போது உலகெங்கிலும் உள்ள உணவுப் பிரியர்களின் இதயத்தை கவர்ந்துள்ளது. அதன் மசாலா நிறைந்த சுவை, வண்ணமயமான காய்கறிகள் மற்றும் நூடுல்ஸின் மென்மையான தன்மை இணைந்து ஒரு அற்புதமான சுவை அனுபவத்தை வழங்குகிறது. இந்தப் பதிவில் வீட்டிலேயே எளிதான முறையில் செஸ்வான் நூடுல்ஸ் செய்வது எப்படி என்பதை விரிவாகப் பார்க்கலாம்.‌

தேவையான பொருட்கள்:

  • நூடுல்ஸ்: 200 கிராம் (அல்லது ஒரு சிறிய பாக்கெட்)

  • வெங்காயம்: 1 பெரியது (நறுக்கியது)

  • பூண்டு: 3-4 பற்கள் (நறுக்கியது)

  • இஞ்சி: ஒரு சிறு துண்டு (நறுக்கியது)

  • கேரட்: 1/2 கப் (நறுக்கியது)

  • பச்சை மிளகாய்: 2-3 (நறுக்கியது)

  • சிவப்பு மிளகாய்: 1 (நறுக்கியது) (காரம் அதிகமாக வேண்டுமென்றால் கூடுதலாக சேர்க்கலாம்)

  • காளான்: 1/2 கப் (நறுக்கியது)

  • கோஸ்: 1/4 கப் (நறுக்கியது)

  • சோயா சாஸ்: 2 டேபிள்ஸ்பூன்

  • செஸ்வான் சாஸ்: 2 டேபிள்ஸ்பூன்

  • உப்பு: தேவையான அளவு

  • மிளகு தூள்: 1/4 டீஸ்பூன்

  • எண்ணெய்: 2 டேபிள்ஸ்பூன்

  • கொத்தமல்லி இலை: அலங்கரிக்க

செய்முறை: 

முதலில் ஒரு பாத்திரத்தில் நிறைய தண்ணீர் கொதிக்க வைத்து அதில் நூடுல்ஸ் போட்டு சரியான முறையில் வேக வைத்து, தண்ணீரை வடிகட்டி, தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். 

வெங்காயம், பூண்டு, இஞ்சி ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கேரட், பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய், காளான், கோஸ் ஆகியவற்றை நீளவாக்கில் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். 

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். பின்னர், அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். அடுத்ததாக நறுக்கி வைத்துள்ள கேரட், பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய், காளான், கோஸ் ஆகியவற்றை சேர்த்து லேசான தீயில் 5 நிமிடங்கள் வதக்கவும். 

வதக்கிய காய்கறிகளில் சோயா சாஸ், செஷ்வான் சாஸ், உப்பு, மிளகு ஆகியவற்றை சேர்த்து நன்றாகக் கலக்கவும். இப்போது வேகவைத்த நூடுல்ஸை காய்கறி கலவையில் சேர்த்து மிதமான தீயில் 3 நிமிடங்கள் கிளறி விடவும். இறுதியாக, அதில் கொத்தமல்லி தழை தூவி கிளறினால், வேற லெவல் சுவையில் செஸ்வான் நூடுல்ஸ் தயார். 

வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய இந்த செஸ்வான் நூடுல்ஸ் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். நீங்கள் விரும்பினால் இந்த ரெசிபியில், நீங்கள் விரும்பும் காய்கறிகளை சேர்த்து உங்களது சொந்த ருசிக்கு ஏற்ப மாற்றங்களைச் செய்யலாம். 

பணப்பயிர் சணலின் பயன்பாடுகள் தெரியுமா?

உடலில் மாயாஜாலம் செய்யும் வெண்டைக்காய் நீரின் 5 பலன்கள்!

விவாகரத்து பெற்ற பின்னர் அதை வாபஸ் பெறலாமா? சட்டம் என்ன சொல்கிறது? 

Trisha's Beauty secrets: நடிகை த்ரிஷா அழகின் ரகசியம்!

எமதர்மராஜா நசிகேதனுக்கு அளித்த மூன்று வரங்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT