பொதுவாகவே நமது வீடுகளில் விடுமுறை அல்லது விசேஷ நாட்களில் வித்தியாசமாக ஏதேனும் செய்ய வேண்டும் என்று நினைப்போம். அன்று ஒரு குழம்பு ரசம் மோர் என்று பாரம்பரிய உணவுகள் இருந்த இடத்தில் காலப்போக்கில் பிரியாணி வகைகள் இடம் பிடித்து தற்போது வெளிநாட்டு சைனீஸ் ஃப்ரைட் ரைஸ்கள் இடம் பிடிக்கத் துவங்கிவிட்டன. குறிப்பாக குழந்தைகள் இது போன்ற ஃப்ரைட் ரைஸுகளை விரும்பி சாப்பிடுவதை காண்கிறோம்.
இந்த சைனீஸ் ஃபிரைட் ரைஸ் வகைகளில் காய்கறிகள் வதக்கி பாதி வெந்து இருப்பதால் ருசியும் மணமும் கூடுதலாக இருக்கிறது. அதேசமயம் நாவின் சுவை மொட்டுகளைத் தூண்டிவிடும் வண்ணம் அமையும் சாஸ் வகைகள் இந்த ஃபிரைட் ரைஸுக்கு கூடுதல் சுவை தருகிறது எனலாம். வாரம் ஒருமுறை இதுபோன்ற பிரைட் ரைஸ்களை செய்து நமது குழந்தைகளுக்கு தரலாம்.
சைனீஸ் ஃப்ரைட் ரைஸ்
தேவையான பொருட்கள்:
பிரியாணி அரிசி - ஒரு கப் ( பச்சரிசியும் இருக்கலாம்)
உரித்த பச்சை பட்டாணி - அரை கப் வெங்காயத்தாள் - இரண்டு
புதிய கேரட் - 1
குடமிளகாய் (வண்ணங்களில்) - 2
முளை விட்ட பீன்ஸ் வகை- சிறிய கப்
முட்டைக்கோஸ் - சிறிது
பெரிய வெங்காயம் - 1
சில்லி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
நெய் அல்லது டால்டா அல்லது எண்ணெய்- 1/4 கப்
சோயா சாஸ் - 1 டேபிள்ஸ்பூன்
தக்காளி சாஸ் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு -தேவைக்கு
செய்முறை:
கேரட், குடைமிளகாய், முட்டைக்கோஸ் இவற்றை சுண்டு விரலில் பாதி அளவு நீளமாகவும் சற்று மெலிதாகவும் வெட்டிக் கொள்ளவும். இதே போல் வெங்காயத்தையும் நீளமாகவும் சன்னமாகவும் வெட்டிக் கொள்ளவும். வெங்காயத்தாளையும் நறுக்கவும். ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் அரிந்த வெங்காயம், மற்றும் காய்களை ஒவ்வொன்றாக போட்டு வதக்கி வெங்காயத்தாளை சேர்த்து வதக்கவும்.
அதன்பின் இதில் தேவையான உப்புடன் சோயா சாஸ், சில்லி சாஸ் சேர்த்து நன்கு வதக்கி தனியே வைக்கவும். காய்கள் அரைவேக்காடல் வெந்திருக்க வேண்டும். அரசியை நன்றாக கழுவி நீரை வடித்து வைக்கவும். மீதியுள்ள எண்ணெய் அல்லது நெய்யை வேறு வாணலியில் ஊற்றி காய்ந்ததும், அரிசியை அதில் இட்டு நன்கு நீரில்லாதபடி வறுத்து அதை குக்கரில் ஒன்றுக்கு ஒன்றரை கப் நீர் வைத்து உதிரியாக பதமாக வேகவைத்து எடுக்கவும். இந்த அரிசியுடன் வதக்கின காய்களையும் தக்காளி சாஸையும் சேர்த்து நன்றாக கிளறவும். சூப்பரான ஃப்ரைட் ரைஸ் ரெடி. இதை அப்படியே சூடாக பரிமாறலாம்.