Healthy snacks Image credit - youtube.com
உணவு / சமையல்

திருநெல்வேலி ஸ்பெஷல் மனோகரம், தேங்காய்ப் பால் முறுக்கு!

கே.எஸ்.கிருஷ்ணவேனி

திருநெல்வேலி மனோகரம்:

கடலை மாவு1 கப்

அரிசி மாவு 1/2 கப்

உப்பு ஒரு சிட்டிகை 

வெல்லம் 3/4 கப்

வெண்ணெய் 1 ஸ்பூன்

ஏலக்காய் தூள் 1 ஸ்பூன்

எண்ணெய் பொரிக்க

கடலை மாவு, அரிசி மாவு, உப்பு ஒரு சிட்டிகை ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு வெண்ணெய் 1 ஸ்பூன் அல்லது சூடான எண்ணெய் ஒரு கரண்டி விட்டு கலந்து கொள்ளவும். தேவையான அளவு தண்ணீரை சிறிது சிறிதாக விட்டு மென்மையாக பிசைந்து கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய்விட்டு நன்கு காய்ந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொண்டு, பிசைந்த மாவை தடித்த தேன்குழல் அச்சில் (ஓட்டை பெரியதாக இருக்கும்) சேர்த்து முறுக்கு போல் பிழிந்து எடுக்கவும்.          

வெல்லம், ஏலக்காயை பொடித்துக் கொண்டு வாணலியில் கால் கப் தண்ணீர் விட்டு பொடித்த வெல்லத்தை சேர்த்து பாகு காய்ச்சவும். அதிரசத்திற்கு செய்வது போல் தக்காளி பதத்தில் பாகு காய்ச்சி அதில் ஏலப்பொடியை கலந்து விடவும்.

பொரித்த முறுக்குகளை கையால் உடைத்து வெல்லப்பாகில் போட்டு பிரட்டி எடுக்கவும். சூடு ஆறியதும் காற்று புகாத டப்பாவில் போட்டு பத்திரப்படுத்தவும். ருசியான திருநெல்வேலி ஸ்பெஷல் மனோகரம் தயார்.

தேங்காய்ப் பால் முறுக்கு:

அரிசி மாவு 5 கப் 

வறுத்தரைத்த உளுத்தம் மாவு 1 கப் உப்பு தேவையானது பெருங்காயத்தூள் 1 ஸ்பூன் 

சீரகம் அல்லது எள் 2 ஸ்பூன் 

தேங்காய் பால் 1 கப் 

வெண்ணெய் 2 ஸ்பூன் 

எண்ணெய் பொரிக்க

பதப்படுத்திய மாவு அல்லது கடைகளில் கிடைக்கும் ரெடிமேட் மாவிலும் பண்ணலாம். உளுத்தம் பருப்பை சிவக்க வறுத்து மிக்ஸியில் பொடித்து சலித்து எடுத்துக் கொள்ளவும். தேங்காயை உடைத்து, துருவி, வெது வெதுப்பான நீருடன் அரைத்து பிழிந்தெடுத்துக் கொள்ளவும்.

ஒரு அகலமான பாத்திரத்தில் அரிசி மாவு, உளுத்தம் மாவு, தேவையான அளவு உப்பு, பெருங்காயத்தூள், சீரகம் அல்லது எள், வெண்ணெய் ரெண்டு ஸ்பூன் சேர்த்து கலந்து கொள்ளவும். அதில் தேங்காய் பாலையும் தேவையான அளவு தண்ணீரையும் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் வைத்து நன்கு காய்ந்ததும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து தேன்குழல் அச்சில் மாவைப் போட்டு பிழிந்தெடுக்கவும். இருபுறமும் வெந்து பொன்னிறமாக வந்ததும் எடுத்துவிட கரகரப்பாக தேங்காய்ப்பால் மணத்துடன் ருசியான முறுக்கு தயார்

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT