Healthy foods Image credit - pixabay
உணவு / சமையல்

உணவியல் நிபுணர்கள் கூறிய உபயோகமான சமையல் குறிப்புகள்!

கோவீ.ராஜேந்திரன்

மையல் கலை நிபுணர்கள் சமையலறையில் நேரத்தையும் முயற்சியையும் மிச்சப்படுத்த உதவுவது மட்டுமல்லாமல், உங்கள் ஆரோக்கிய நலன்களை அடையவும், உங்கள் உணவை மேம்படுத்தவும் உதவுகிறார்கள்.

சமைக்கும்போது எந்தப்பொருளை எதற்காக சேர்க்கிறோம். அதன் தன்மை என்ன?. சுவை என்ன? என்பதை அறிந்து சமைக்க வேண்டும். சமையலில் திறமையும், அறிவும் சேரும்போது உணவு ருசியாக இருக்கும் என்கிறார் பிரபல சமையல் கலை நிபுணர் சஞ்சீவ் கபூர். அவர் கூறிய சில சமையல் குறிப்புகள்.

பச்சை காய்கறிகளை சீசனுக்கு ஏற்ப சாப்பிட வேண்டும். சீசனில் விளையும் காய்கறிகளில் ருசி அதிகமாக இருக்கும். விலையும் குறைவு. தேவையான சத்தும் கிடைக்கும். சீசன் முடிந்ததும் அவற்றின் சுவையும், சத்தும் குறைந்துவிடும். விலையும் கூடிவிடும்.

என்ன சமைக்கப்போகிறோம் என்பதை முதலில் தீர்மானித்துக்கொள்ள வேண்டும். சமைக்க ஆரம்பிக்கும் முன்பே சமையலுக்கு தேவையான மசாலக்களை அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். சரியாக திட்டமிட்டு செய்தால் எதையும் எளிதாக விரைவாக செய்து முடித்து விடலாம்.

வேண்டாத நேரத்தில் நாம் சாப்பிடும் அதிகப்படியான உணவுகளால்தான் உடல் எடை கூடுகிறது. எடையை குறைக்க அதிகப்படியான உணவு வகைகளை குறைத்தால் மட்டுமே போதும். பட்டினி கிடக்க தேவையில்லை. நார்ச்சத்து இல்லாத உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும். முக்கியமாக மைதா, இனிப்பு மற்றும் கொழுப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்.

வயதானவர்கள், உடல் நிலை சரியில்லாதவர்களை தவிர்த்து அனைவருக்கும் வீட்டில் ஒரே மாதிரியான உணவுகளை சமைக்க வேண்டும். வளரும் குழந்தைகளுக்கு எல்லா விதமான சத்துக்களும் தேவை. அதனால் பாரபட்சம் இல்லாமல் எல்லா வகையான உணவுகளையும் சாப்பிட பழக்க வேண்டும். அப்போதுதான் சரிவிகித உணவு கிடைக்கும். எதையும் ஒதுக்கக்கூடாது. நீங்கள் ஒதுக்கும் உணவை பிற்காலத்தில் சாப்பிட வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அப்போது ஒவ்வாமை ஏற்படும்.

பிரபல உணவியல் ஆலோசகர் தேவதாஸ் ரெட்டி கூறிய சில டிப்ஸ். மூளையின் வேகமான இயக்கத்திற்கு காலை உணவு மிக முக்கியம். அதனால் தினமும் சரியான நேரத்தில் காலை உணவை உட்கொள்ளுங்கள்.

தினமும் இரண்டு முறையாவது உணவில் பழம் சேருங்கள். ஆரோக்கியம் மற்றும் அழகிற்கும் அது ஏற்றது. இடைவேளை நேரங்களில் உணவு பதார்த்தங்களை பொரிப்பதற்கு பதிலாக உலர்ந்த முந்திரி, பாதாம் பருப்பு, அவல் சாப்பிடுங்கள்.

ஓட்டல்களில் எங்கேயாவது சாப்பிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால். சாப்பிட்டு முடிந்த பிறகு ஒரு கப் அன்னாசி பழ ஜூஸ் பருகுங்கள், வயிற்று தொந்தரவு ஏற்படாது. மைதா உணவுகளை சாப்பிட நேர்ந்தால், அதோடு பெருமளவு காய்கறிகளை சாப்பிடுங்கள், கூடவே நிறைய தண்ணீர் குடியுங்கள்.

பெருங்காயம், இந்திய சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான மசாலா ஆகும். இது செரிமான பண்புகளைக் கொண்டுள்ளது. பருப்பு, பீன்ஸ், காலிஃபிளவர், முட்டைக்கோஸ் போன்ற சில காய்கறிகளை உட்கொள்ளும்போது சில நேரங்களில் ஏற்படும் வாயு மற்றும் வீக்கத்தை குறைக்க உணவுகளில் சேர்க்கப் படுகிறது. அதன் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் காரணமாக, இது வயிற்று தொற்றுக்கான வாய்ப்பைக் குறைக்கிறது,

உப்பு உட்கொள்வதைப் பற்றி நீங்கள் கவலைப் படுகிறீர்கள் என்றால், ஆரம்பத்தில் இல்லாமல், சமையலின் முடிவில் உப்பு சேர்ப்பது பயனுள்ள நடைமுறையாக இருக்கும். இது உணவுகளில் அதிக உப்பைத் தடுக்க உதவுகிறது. அளவாக சமைக்கும்போது, அல்லது குழம்பு, சாஸ் போன்ற உப்புப் பொருட்களைப் பயன்படுத்தும்போது இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும், என்று கூறுகிறார் உணவியல் நிபுணர் குக்ரேஜா.

கிருஷ்ணர் லீலையில் அர்ச்சுனன் - சுபத்திராவின் திருமணம்!

தனித்துவம், அப்படி என்றால் என்ன தெரியுமா?

கல்லிலே கடவுளை காண முடியுமா? - விவேகானந்தரின் விளக்கம்!

முன்னேற்றம் காணாத இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!

தினமும் 600 ரயில்கள் வந்து செல்லும் பிசியான ரயில் நிலையத்திற்கு செல்வோமா?

SCROLL FOR NEXT