வடு மாங்காய்... 
உணவு / சமையல்

வடு மாங்காய் ஊறுதுங்கோ தயிர் சாதம் சாப்பிடுங்கோ! – (வடு மாங்காய் ரெசிபீஸ்)

கே.எஸ்.கிருஷ்ணவேனி

மாவடு என்பது பிஞ்சு மாங்காய் கொண்டு தயாரிக்கப்படும் ஒருவகையான ஊறுகாய். இது தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் மிகவும் பிரபலமான ஒன்று.

மாதா ஊட்டாத சோறை மாங்காய் ஊட்டும் என்பார்கள். என்னை பொறுத்தவரை மாதா ஊட்டாத சோறை மாவடு ஊட்டி விடும் என்பது தான் உண்மை.

வடு மாங்காயில் நிறைய வகைகள் உள்ளது. நீட்ட வடு, திருச்சி வடு, ருமானி வடு, கோயம்புத்தூர் திருமூர்த்தி வடு என்று வடுமாங்காய்கள் நிறைய  கிடைக்கிறது.

பச்சை மாவடுக்களை நாங்கள் சிறுவயதில் கதவிடுக்கில் நசுக்கி பகிர்ந்து கொண்டது ஞாபகம் வருகிறது. பல் கூசும் புளிப்புடன் இருக்கும் அதனை சிறிது கல் உப்பு தொட்டு சாப்பிடுவோம்.

மாசியில் மாவடு சீசன் ஆரம்பித்துவிடும். "மாசி வடுவே வைகாசி மாம்பழமே" என்று ஒரு தாலாட்டு பாடல் கூட குழந்தையை தூங்க வைக்கும் போது பாடப்படும்.

வெம்பிய வடு, கீழே விழுந்த வடுக்களை உபயோகிக்காமல் பறித்த காம்புடன் உள்ள வடுக்களைக் கொண்டு ஊறுகாய் போடுவது மிகுந்த ருசியை கொடுக்கும்.

சென்னை மயிலாப்பூரில் நிறைய வடுக்கள் கொட்டி கிடக்கின்றன. விலையும் எக்கச்சக்கம். ஆனால் இந்த சீசனில் மட்டுமே கிடைக்கும் வடு மாங்காயை போடாமல் இருக்க முடியுமா? இல்லை சாப்பிடாமல் தான் இருக்க முடியுமா?

வடு மாங்காய் ரெசிபி

1.    கடுகு வடுமாங்காய்:

தேவையான பொருட்கள்:

  • வடு மாங்காய் ஒரு கிலோ

  • கடுகு 50 கிராம்

  • மிளகாய்த்தூள்

  • மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் ஒரு ஸ்பூன்

  • கல் உப்பு

செய்முறை:

உப்பு,காரம், கடுகு எல்லாம் 8:1 என்ற அளவில் சேர்க்க வேண்டும். மாவடு வாங்கியதும் தண்ணீரில் போட்டு நன்கு அலம்பி ஒரு துணியில் பரப்பி போட்டு ஈரம் போக துடைத்து ஒரு கப் அல்லது டம்ளர் கொண்டு எவ்வளவு இருக்கிறது என்று அளந்து கொள்ளவும். பிறகு அதில் விளக்கெண்ணெய் ஒரு ஸ்பூன் விட்டு கையால் நன்கு எல்லா வடுக்களிலும் படுமாறு கலந்து விடவும்.8:1 என்ற அளவில் 8 பங்கு வடுமாங்காய்க்கு ஒரு பங்கு உப்பு, காரம், கடுகுப் பொடி சேர்க்க சரியாக இருக்கும். கடுகை வெறும் வாணலியில் சூடு வர வறுத்து (வெடிக்க விட வேண்டாம்) மிக்ஸியில் பொடி செய்ய கடுகுப் பொடி தயார். கடுகு பொடி ரெடிமேடாக கடைகளிலும் கிடைக்கிறது.

இப்பொழுது ஜாடியில் வடுமாங்காய், மஞ்சள் பொடி, கல் உப்பு, கார பொடி, கடுகுப் பொடி ஆகியவற்றை அளந்து போட்டு நன்கு குலுக்கி விடவும். நான்கு நாட்களுக்கு தொடர்ந்து கை படாமல் குலுக்கி விட மாவடு நன்கு நீர் விட்டுக் கொண்டு சாப்பிட தயாராகி விடும். தினமும் எடுக்கும்போது ஈரம் இல்லாத மரக் கரண்டியால் ஒரு முறை கிளறிவிட்டு எடுக்க ஒரு வருடம் ஆனாலும் கெடாது இருக்கும்.

வடு மாங்காய் வெரைட்டீஸ்

1.    கோயம்புத்தூர் வடு:

இதன் தோல் சிறிது தடிமனாக இருக்கும். ருமானி வடு போல் மெல்லிய தோல் கிடையாது. ஊறுவதற்கு கூட ரெண்டு நாட்கள் பிடிக்கும். ஆனால் ருசி சூப்பர். வெடுக்கென்று கடித்து சாம்பார் சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும். கிலோ 500 ரூபாய் வரை பேரம் பேசி 450 க்கு வாங்கலாம்.

2.    ருமானி வடு:

மாவடுக்களை அலம்பி ஈரம் போக துடைத்து விளக்கெண்ணெய் விட்டு பிசிறி உப்பு, காரம் போட்டு 4 நாட்கள் ஊற விட்டு சாப்பிட அருமையாக இருக்கும். இதன் தோல் மெல்லியதாக இருப்பதால் சீக்கிரம் ஊறி விடும்.

3.     கிளி மூக்கு வடு:

இதையும் அதேபோல் தான் போட வேண்டும்.உப்பு, புளிப்பு, காரம், துவர்ப்பு என அம்சமாக இருக்கும்.

4.    திருச்சி வடு:

இது ரொம்ப ஃபேமஸ் வடு. சத்திரம் பேருந்து நிலையத்திற்கு பின்புறம் உள்ள மார்க்கெட்டில் கிடைக்கும். இதன் ருசியை சொல்லி மாளாது. ஸ்ரீரங்கம் வடக்கு வாசலில் சுண்டைக்காயோடு போட்டி போடும் மலைவடு அருமை.

5.    பெரியகுளம், அழகர் கோவில் வடுக்கள்:

இவையும் மாவடுக்கு பிரபலமானவை. மாசி வடு பாசி போல் இருக்கும் என்பார்கள். அதாவது பாசிப் பச்சை நிறத்தில் இருக்கும் என்பதை குறிக்கிறது.

இத தெரிஞ்சுகிட்டா உங்க வீட்டு டைல்ஸ் கறையை இருக்கும் இடம் தெரியாமல் நீக்கிவிடலாம்! 

உணவுச் சேர்மானங்களின் குணநலன்கள் என்னவென்று தெரியுமா?

வெளியே செல்லும்போது கருப்புப் பூனை குறுக்கே போய்விட்டதா? போச்சு! 

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் அந்த நபர் யார்?

நவகிரகங்கள் நல்கும் நன்மைகளும்; வித்தியாசமான கோல நவகிரகங்களும்!

SCROLL FOR NEXT