தேவையான சாமான்கள்: 2 கப்புகள் கோதுமை மாவு, ½ கப் அரிசி மாவு, 1½ முதல் 2 கப்புகள் வரை (அவரவர் தேவைக்குத் தக்கபடி) வெல்லம், தேங்காய் மூடி 1, ஏலக்காய் 7 அல்லது 8, (வேகவிடுவதற்கு) நெய் சுமார் 1½ கப்புகள்.
சிறிதளவு ஜலத்தை விட்டு, வெல்லத்தைப் பொடிசெய்து போட்டு, நன்றாகக் கரைத்து, மாவுகளையும், துருவிய தேங்காயையும், ஏலப்பொடியையும் போட்டு, நன்றாகக் கரைத்துக்கொள்ளவும்.
(அல்லது, மாவைப் போட்டு, கட்டி இல்லாமல் கரைத்துவிட்டு, பிறகு தேங்காய்த் துருவலையும், ஏலப் பொடியையும் போட்டுக் கலக்கலாம்.)
குற்றி வேகவிடுவது முதலியன முன் கூறியபடியேதான். கோதுமை மாவிற்குப் பதில் மைதா மாவையும் போடலாம்.
குறிப்பு: இந்த அப்பங்களையெல்லாம், குழி அப்பச் சட்டியில் குழிகளை மூடி, நெய்யை வைத்து, அந்தக் குழிகளுக்குள் மாவை ஊற்றியும், அடிப்பாகம் வெந்தபின், திருப்பி விட்டு… இரண்டு அல்லது மூன்று தரங்கள் குச்சியால் குத்திவிட்டும் வார்த்து எடுக்கலாம். இது அதிகமாக நெய்யைக் குடிக்காமலும் உருண்டையாகவும் இருக்கும்.
மலையாள தேசத்தவர், கல்யாண அப்பங்களைக் கூட, இந்தக் குழி அப்பச் சட்டியில் (அப்பக் காரலில்)தான் வார்ப்பார்கள். அப்பம், அதிரஸம் இவைகளுக்குப்
போக்கு வெல்லம், உருண்டை வெல்லம் இவைதான் நல்லது. அச்சு வெல்லம் போட்டால், சில சமயங்களில் உதிர்ந்து போய்விடும். இந்த அப்பங்களுக்கு, ½ கப் அரிசி மாவைப் போட்டால் சற்று மொறு மொறுப்பாக இருக்கும். மிருதுவாக இருக்க வேண்டுமானால், ¼ கப்பே போதும்..
(நன்றி: சமைத்துப் பார் வெளியீடு: எஸ். மீனாட்சி அம்மன் பப்ளிகேஷன்ஸ்)