healthy recipes... 
உணவு / சமையல்

உடல் வலி போக்கும் உளுந்து சாதம், உளுத்தம் கஞ்சி செய்யலாம் வாங்க!

சேலம் சுபா

ந்தக் காலத்தில் பெண்கள் பருவமடையும் நேரத்தில் பாட்டி வீட்டில் இருந்து முதலில் தின்பண்டமாக வருவது உளுந்துக்களியும் உளுந்து உருண்டையாகத்தான் இருக்கும். காரணம் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் சிரமம் நீங்கவும், இடுப்பு எலும்பு, கர்ப்பப்பை வலுவுக்கும் உளுந்தில் உள்ள மருத்துவ குணங்கள் உதவும் என்பதால்தான். குறிப்பாக பெண்களுக்கு உளுந்து இயற்கை வரம் என்றே சொல்லலாம்.

பெண்கள் மட்டுமில்லாமல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஆரோக்கியத்தை அள்ளித்தரும் உணவாக உளுந்து அமைகிறது. இதில் எளிதாக செய்யும் ரெசிபியாக வலம் வருகிறது உளுத்தங்கஞ்சி.

இடுப்பு வலி, முதுகு வலி, கை கால் வலி, மூட்டு வலி போன்றவற்றில் இருந்து விடுபடவும் உடல் எடை கூடவும், சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளை அகற்றவும், எலும்புகளின் பலத்திற்கும் உளுந்தங்கஞ்சி பெரிதும் உதவுகிறது. உடல் நலனுக்கு உகந்த உளுந்தில் கஞ்சியும் சாதமும் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

உளுத்தங்கஞ்சி
தேவை:

உளுந்து - 1 கப் ( கறுப்பு உளுந்து சிறப்பு)
தேங்காய் பால் - 1 கப்
சுக்கு பொடி - 1/2 டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த்துருவல்  - ஒரு சிறிய கப்
வெல்லம் - 1 கப்
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
அரிசி மாவு - 2 டீஸ்பூன் (தேவைப்பட்டால்)

செய்முறை:

உளுந்தை நன்கு கழுவி சுத்தம் செய்து வெந்தயம் சேர்த்து 3 முதல் 4 மணி நேரம் ஊறவிட வேண்டும். நன்கு ஊறியதும மிக்ஸியில் போட்டு நீர் விட்டு மைய அரைத்து எடுத்துக்கொள்ளவும். இப்போது அடிகனமான கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி, அரைத்து வைத்த உளுந்து மற்றும் வெந்தய கலவையை சேர்த்து மிதமான தீயில் வைத்து  நன்கு கிளறவும். சற்று வெந்து வாசம் வந்ததும் கெட்டித் தேங்காய்ப்பால் சேர்த்து நன்கு கலக்கவும். இதில் பொடித்த வெல்லம், ஏலக்காய்த்தூள், சுக்கு பொடி  ஆகியவற்றை கலக்கவும். இதனுடன் அரிசி மாவை நீரில் கரைத்து சேர்த்து சில நிமிடங்களுக்கு கொதிக்க விடவும். அடிபிடிக்கும்  என்பதால் கிளறுவதில் கவனம் தேவை. தயாரான உளுத்தங்கஞ்சியை சூடாகத் தந்தால் மணம் வீசி நாவை சுண்டி வயிறு நிறைக்கும். காலை நேரத்தில் குழந்தைகளுக்கு ஏற்ற இயற்கை பானம் இது.

உளுந்து சாதம்:

தேவை:

சம்பா பச்சரிசி - 2 கப்  (இளம் வறுப்பாக நிறம் மாறாமல் வறுத்தது)
உளுத்தம் பருப்பு - ஒரு கப்
உப்பு - தேவைக்கு
கருவேப்பிலை - சிறிது
சீரகம் - 1 டீஸ்பூன்
நெய் - 1 ஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன் பூண்டு-  10 பல்
பெருங்காயம் - தேவைக்கு.

செய்முறை;

அரிசியையும் உளுந்தையும் நன்கு கழுவி வடிக்கவும். தேவையான  தண்ணீரை ஒரு அடிகனமான குக்கர் அல்லது பாத்திரத்தில் கொதிக்கவிட்டு அதனுடன் அரிசியும் உளுந்தையும் போட்டு நன்றாக வேகவைக்கவும். வெந்ததும் இதனுடன் தட்டிய பூண்டு, பெருங்காயம், சீரகம் சேர்த்து மேலும் வேகவைத்து அதனுடன் தேங்காய்த்துருவல் உப்பு சேர்த்துக் கிளறி மேலே நெய் ஊற்றி, கறிவேப்பிலை போட்டு இறக்கலாம். இந்த உளுந்து சாதம் வெண்பொங்கல் போல சூப்பர் டேஸ்ட்டில்  இருக்கும். தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி இருந்தால் இன்னும் சூப்பர்.

மிட் நைட் பிரியாணி ரசிகரா நீங்கள்? அப்போ, அவ்வளவுதான்! 

'கை தந்த பிரான்' என்று அழைக்கப்படும் சிவஸ்தலம் எங்குள்ளது தெரியுமா?

மாதவிடாய் நேரத்தில் முடி கொட்டுகிறதா? அப்ப இதுதான் காரணம்!

கண் பார்வை மேம்பாட்டிற்கு உதவும் 5 பயிற்சிகள்!

ஹனுமனை வெறுக்கும் துரோனகிரி கிராம மக்கள்… ஏன் தெரியுமா?

SCROLL FOR NEXT