திருப்பதி லட்டு 
உணவு / சமையல்

நீங்களும் இனி உங்க வீட்டில் செய்யலாம் - திருப்பதி லட்டு!

இரவிசிவன்

தே அபாரமான சுவையில் திருப்பதி லட்டு வீட்டில் செய்ய முடியுமா? என்று கேட்டால்? முதல் தரமான கடலைமாவும், முதல் தரமான நெய்யும் உங்கள் கைவசமிருந்தால் நிச்சயமாக உங்களாலும் முடியும்! - என்பதுதான் பதில்!

திருப்பதி லட்டின் மிக முக்கியமான ரகசியமே நெய்யில்தான் உள்ளது. நெய்யானது மிகவும் தரமானதாக பாரம்பரிய முறைப்படி செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். பாரம்பரிய முறைப்படி தயாரிக்கப்பட்ட நெய்தான், திருப்பதி லட்டின் இயற்கையான மணத்திற்கும் சுவைக்கும் அடிப்படை  ஆகும்! (ஆனால் தற்போது சந்தையில் கிடைப்பதெல்லாம் அசல் நெய் அல்ல!).

அடுத்து… கடலைமாவினையும் முதல் தரமான பருப்பை அரைத்து பக்குவமாக உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு கடலை மாவை கரைத்து செய்கின்ற பூந்தியை நெய்யில் மட்டுமே பொரிக்க வேண்டும்.

கடலைமாவு கரைக்கும் பதம் இங்கு மிக முக்கியம். சாதாரண லட்டிற்கு மாவை கரைப்பதைப் போல தளர்வாக இல்லாமல் நன்கு கெட்டியாகக் கரைக்க வேண்டும். பூந்தி போடும் கரண்டியில் மாவை அள்ளி ஊற்றி ஒரு குழிக் கரண்டியால் அதை தோசைமாவு தேய்ப்பது போல தேய்த்தால் மட்டுமே பூந்தி துளைகளின் வழியே மாவு விழவேண்டும்! அதுவே சரியான பதம்!

அடுத்து, கடலைமாவின் அளவு எவ்வளவோ அப்படியே ஒரு மடங்கு அதிகம் சர்க்கரை சேர்ப்பதே அளவு! சர்க்கரைக்கு பாகுபதம் தேவையில்லை! ஒரு கம்பி பதம் வைத்து காய்ச்சினாலும் போதும்.

பாகு கொதிக்கும்போது இடையிடையே தேவையான நெய் சேர்ப்பது திருப்பதி லட்டின் தனித்துவமான ருசிக்கு மேலும் ஒரு காரணம். எனவே மறக்காமல் சேர்த்து விடுங்கள் - கொஞ்சம் தாராளமாகவே!

ஏலக்காய், பச்சைக் கற்பூரம் & கல்கண்டு மிக மிக முக்கியம்! இவற்றை மிகவும் பொடியாக அரைக்காமல் ஒன்றிரண்டாக இடித்துச் சேர்ப்பது அவசியம்.

அடுத்து, முந்திரி, உலர்திராட்சைகளையும் நெய்யில் பொரிப்பது முக்கியம்! இதில் கூடுதலாக பாதாம் பருப்பு, பேரீட்சை சேர்ப்பது உங்கள் விருப்பம் !

பெரிய துளை உள்ள கரண்டியில் பூந்தி செய்தால் திருப்பதி லட்டு போலவே லட்டுகள் பிடிக்கலாம்.. புரிந்ததா?

இனி  லட்டின் செய்முறையைப் பார்ப்போம். இந்த செய்முறை அளவில் கையளவு உருண்டை அளவில் 25 - 30 லட்டுகள்  செய்யமுடியும்!

தேவையான பொருட்கள்:

கடலை மாவு - 250 கிராம்.
சர்க்கரை - 500 கிராம்.
உலர் திராட்சை & முந்திரி-  தலா 50 கிராம். கற்கண்டு - 2  தேக்கரண்டி.
பச்சைக்கற்பூரம் - கால் டீஸ்பூன்.
ஏலக்காய் - 12.
கிராம்பு - 5.
நெய் - பொரிக்கவும் இதர தேவைகளுக்கும்.

செய்முறை:

டலைமாவை நீர் விட்டு கெட்டியாகக் கரைக்கவும். அடிகனமான வாணலியில் நெய்யை ஊற்றி, அது சூடானதும் அடுப்பை மிதமாக எரியவிட்டு தேவையான மாவை பூந்திக்கரண்டியின் மேல் ஊற்றி அதை குழிக்கரண்டியால் தேய்த்து  - பூந்திகள் நெய்யில் வெந்ததும் மெதுவாக திருப்பவும்.

இரு பக்கமும் வெந்ததும் அதை தனியே நெய்யை வடித்து எடுத்துவிட்டு அதே நெய்யில் முந்திரி & திராட்சையை பொரித்து எடுத்து வைக்கவும்.

திருப்பதி லட்டு

பிறகு ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மூழ்கும் அளவு நீர் விட்டு ஒரு கம்பி பதத்துக்கு பாகு காய்ச்சவும். சர்க்கரை, பாகு கொதிக்கும்போதே 4 தேக்கரண்டி நெய்யை இடை இடையே அதில் சேர்த்து... இடித்த கிராம்பு, ஏலக்காய், பச்சைக் கற்பூரம் சேர்த்து கிளறி பின்னர் பொரித்த பூந்தி, கல்கண்டு இவற்றைச் சேர்த்து நன்கு கிளறி இறக்கிவிடவும்.

கைகளில் சிறிது நெய்யை தடவிக்கொண்டு கைபொறுக்கும் சூட்டிலேயே லட்டுகளாகப் பிடிக்கவும். இவ்வாறு செய்தால் லட்டுகள் பல நாட்கள் கெடாது.

தனித்தன்மை சுவை கொண்ட திருப்பதி லட்டு பிரசாதம் இந்த முறையில்தான் தயாராகிறது. செய்து, உண்டு மகிழுங்கள்.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT