10 Essential Tips for Parents of Stubborn Children 
வீடு / குடும்பம்

அடம் பிடிக்கும் குழந்தைகளின் பெற்றோருக்கு அவசியமான 10 ஆலோசனைகள்!

சேலம் சுபா

வ்வொரு குழந்தையும் அவர்களின் பெற்றோர்களுக்கு வரம்தான். தாங்கள் வரமாக நினைக்கும் பிள்ளைகளின் பிடிவாத குணம் கண்டு சில பெற்றோர் மனம் நொந்து போகிறார்கள். பிள்ளைகளின் இந்த பிடிவாதத்திற்குக் காரணமே தாங்கள்தான் என்பதை அறியாமலே இவர்கள் புலம்புவதுதான் வேடிக்கை.

ஆம்... குழந்தை பிறக்கும்போது அவர்களின் மனம் அல்லது செயல்கள் வெறும் வெற்று காகிதமாகவே உள்ளது. அதில் பதியப்படும் விஷயங்கள் நல்லதாக அமைவது பெற்றோர்களின் கடமையாகிறது. அந்த வெள்ளை காகிதத்தில் நாம் சொல்லும், செய்யும் விஷயங்கள் மட்டுமே பதிகின்றன என்பதை தெளிவாக ஒவ்வொரு பெற்றோரும் புரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகளின் இந்த பிடிவாத குணத்தைப் போக்குவதற்கு பெற்றோர்கள் அவசியம் கடைபிடிக்க வேண்டிய 10 ஆலோசனைகளை இந்தப் பதிவில் பார்ப்போம்.

1. குழந்தை சாப்பிடவும் நடக்கவும் நாம் கற்றுத் தருவதைப் போலவே தோல்விகளை சந்திக்கவும் கற்றுக் கொடுப்பது அவசியம். ‘தோல்வியும் கீழே விழுவது போல் சகஜமே. எழுவதுதான் வெற்றி’ என்று அடிக்கடி சொல்லி அவர்கள் மனதில் பதிய வையுங்கள். தோல்வியை ஏற்றுக்கொள்ளும் குழந்தைகளின் பிடிவாதம் குறையும்.

2. குழந்தை எதையாவது அடம் பிடித்துக் கேட்டால் அதற்கு வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் ஒரே பதிலை கூற கற்றுக்கொள்ள வேண்டும். தாய் ஒரு பதில், தந்தை ஒரு பதில் அல்லது பாட்டி தாத்தா செல்லமாக, ‘அவங்க கிடக்கிறாங்க. நான் வாங்கித் தரேன்’ என்று வெவ்வேறு பதில்  சொன்னால் குழந்தையின் பிடிவாதம் இன்னும் அதிகமாகும்.

3. குழந்தை ஒரு பொருளுக்கோ அல்லது ஒரு விஷயத்தில் அதிகமாக பிடிவாதம் பிடிக்கும்போது அது தேவையா? தேவையில்லையா என்பது குழந்தையை விட பெற்றோருக்கே தெரிய வேண்டும். தேவையற்ற எதையும் பெற்றோர் அனுமதிக்க மாட்டார்கள் என்பதை குழந்தை அறிந்திருப்பது அவசியம்.

4. ஒரு விஷயம் தேவையில்லை எனில் அதைப் பற்றிய விளக்கத்தை குழந்தைகளிடம் சொல்லி, நோ சொல்ல பழக வேண்டும். மீறி குழந்தை பிடிவாதம் பிடித்தால் அதை கண்டுகொள்ளாமல் விட்டால் அவர்களே அதை மறந்து விடுவார்கள்.

5. குழந்தை பிடிவாதம் பிடித்தால் அதை உங்கள் வீட்டுக் குழந்தையாக எண்ணாமல், பக்கத்து வீட்டுக் குழந்தையாக எண்ணிப் பாருங்கள். அப்போது அதில் உள்ள நியாயம் புரிந்து  ஒரு சரியான முடிவு எடுக்க முடியும்.

6. குழந்தைகளின் இயல்பான குணம்தானே பிடிவாதம் என்று நினைப்பதை விட்டு விடுங்கள். நாம் எதைக் கற்றுத் தருகிறோமோ அதைத்தான் குழந்தைகள் இறுகப் பிடித்துக் கொள்கிறார்கள். பிடிவாத குணத்தை முதலில் நாம் தவிர்க்க வேண்டும்.

7. முதலில் பெற்றோராகிய நாம் குழந்தைகள் எதிரில் ஒருவருக்கொருவர் தங்கள் கருத்துக்களை பிடிவாதமாக மற்றவர் மீது திணிப்பதைத் தவிர்க்க வேண்டும். இதை பார்க்கும் குழந்தைகள் பிடிவாதம் என்பது சரியே என்று தப்பாக அர்த்தம் கொள்ளக்கூடும்.

8. ‘நான்தான் கஷ்டப்பட்டேன். என் குழந்தை எந்தக் கஷ்டமும் இல்லாமல் வளர வேண்டும்’ என்று நினைப்பதை பெற்றோர் விட்டு விட வேண்டும். உங்கள் காலம் வேறு இந்தக் காலம் வேறு.

9. குழந்தை பிடிவாதம் செய்து ஏதேனும் ஒரு பொருளை கேட்டால் உடனடியாக வாங்கித் தராமல் சிறிது காலம் தள்ளிப்போடுவது நல்லது. கேட்டால் உடனே கிடைக்கும் என்று தெரிந்து கொள்ளும் குழந்தைகளே மனப்பக்குவமற்று வளர்கிறார்கள்.

10. நமது கஷ்டத்தை குழந்தைகளுக்கு அவசியம் புரிய வையுங்கள். பணம் சம்பாதிப்பதும், கேட்டதும் வாங்கித் தருவதும் பெற்றோரின் கடமை என்று பிள்ளைகள் நினைக்கும்படி இருந்து விடாதீர்கள். ஒரு பொருள் வாங்குவதற்கு பணம் எவ்வளவு அவசியம் என்றும், அதை எவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறோம் என்பதையும் ஒவ்வொரு குழந்தையும் புரிந்துகொள்ள வேண்டும்.

தவறுகளை ஒப்புக்கொள்வது உங்களை அடுத்த உயரத்துக்கு எடுத்துச்செல்லும்!

தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதை நிரூபித்த முதல் இந்திய விஞ்ஞானி!

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

SCROLL FOR NEXT