ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் திருமணம் என்பது முக்கிய நிகழ்வு. ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தனக்கு வரும் துணையைத் தேர்ந்தெடுக்கும்போது செய்யக்கூடாத 5 தவறுகள் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
1. குடும்ப அழுத்தம்: நம் சமூகத்தில் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் பெரும்பாலும் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் உதவி செய்யும்போது, பல நேரங்களில் ஒரு பையனோ அல்லது பெண்ணோ பெற்றோரின் அழுத்தம் காரணமாக தனது விருப்பத்தை வெளிப்படுத்துவதில்லை. இதன் காரணமாக அவர்கள் தன்னைப் பிடிக்காத அல்லது முன்பின் தெரியாத நபரை திருமணம் செய்துகொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படும்போது, அங்கிருந்தே அவர்களின் வாழ்க்கை பிரச்னையில் தொடங்குகிறது.
2. அவசரம்: வாழ்க்கை துணையை தேர்வு செய்வதில் எப்போதும் அவசரம் காட்டவே கூடாது. ஏனென்றால் எந்த ஒரு நபரையும் ஒரு சந்திப்பிலேயே அவர்களது குண நலன்களை தெரிந்துகொள்ள வாய்ப்பில்லை. ஆகவே, பொதுவான ஒரு நண்பரின் உதவியை நாடி அந்த நபரை பற்றி அறிந்துகொள்ள முயற்சி செய்து தேர்வில் பொறுமையை கடைபிடியுங்கள்.
3. முற்றிலும் மாறுபட்ட கலாசாரம்: ஆண், பெண் கலாசாரம் முற்றிலும் வேறுபட்டு இருந்தால், திருமணத்திற்குப் பிறகு எந்த பிரச்னையும் இல்லாமல் வாழ முடியும் என்று முழுமையாக நம்பிக்கை இருந்தால் மட்டும் மாறுபட்ட கலாசாரம் உடையவரை வாழ்க்கைத் துணையாக தேர்ந்தெடுக்கலாம். இல்லையென்றால் பின்னாளில் உங்களுக்கு வருத்தமே மிஞ்சும்.
4. ஈர்ப்பு இல்லாமை: நாம் திருமணம் செய்யப்போகும் நபரிடம் உங்களுக்கு ஈர்ப்பு இருக்கிறதா என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். வாழ்க்கையில் உடல் நெருக்கம் மிகவும் முக்கியமானது, இல்லையெனில் வாழ்க்கை சலிப்பாக மாறக்கூடும். ஆதலால் எந்த ஈர்ப்பும் இல்லை என்று தெரிந்தால் யாருடைய அழுத்தத்திற்கும் உட்படாமல் மறுத்து விடுங்கள்.
5. நம்பிக்கையின்மை: திருமணத்திற்கு முன் யாரையாவது தெரிந்திருந்தாலும், அவர்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால், அவர்களுடன் திருமண வாழ்க்கையை நோக்கி செல்ல நினைக்கவே வேண்டாம். ஏனெனில், திருமண பந்தம் நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்தது, அது இல்லாவிட்டால் உறவு வலுவிழந்துவிடும்.
மேற்கூறிய ஐந்து விஷயங்களை மனதில் நிறுத்தி வாழ்க்கைத் துணையை தேர்வு செய்தோமானால் பின்னாளில் கோர்ட் படி ஏற வாய்ப்பு இல்லை.