அந்தக் காலத்தைப் போன்று இல்லாமல் தற்போது குடும்பத்துக்கு ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளே என்றாகிவிட்டதால், அவர்கள் கேட்பதை எல்லாம் கடன் வாங்கியாவது பெற்றோர்கள் செய்வதற்குத் தயாராக உள்ளனர். இதனால் குழந்தைகளும் அழுது அடம்பிடித்து தாங்கள் நினைத்ததை சாதித்துக் கொள்கிறார்கள். இது அவசியம்தானா என்பதை இந்தப் பதிவில் காண்போம்.
குழந்தைகளுக்கு கேட்டவுடன் எல்லாவற்றையும் கொடுத்துப் பழக்காதீர்கள். எல்லாமே எளிதில் கிடைத்து விட்டால் கிடைக்காதபொழுது அதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியாமல் தவிப்பார்கள். இதனால் மன உறுதியின்றி வளர்வார்கள்.
சாப்பாட்டை தட்டில் வைத்துக்கொண்டு சாப்பிடு என்று அரற்றாதீர்கள். கொஞ்சம் விட்டுத்தான் பிடிக்க வேண்டும். அளவுக்கு அதிகமாக அவர்களுக்குப் பசி வந்துவிட்டால் எந்தக் குழந்தையும் கிடைப்பதை சாப்பிடுவதற்குத் தயாராகி விடுவார்கள். அப்பொழுது பொறுப்புடன் தட்டை எடுத்து வந்து சாதம், சாப்பாடு கேட்டால் போட்டுக் கொடுங்கள்.
தனது வசதிக்கு மீறிய பொருட்களை குழந்தைகள் பிடிவாதமாகக் கேட்டால் நீங்களும் பிடிவாதமாக இப்பொழுது இதை வாங்கித் தர முடியாது என்று அழுத்தம் திருத்தமாக சொல்லி விடுங்கள். பெற்றோரின் சிரமங்கள் குழந்தைகளுக்கு தெரிந்தால்தான் குடும்ப சூழலை அனுசரித்து நடக்கும் தன்மையோடு அவர்கள் வளர்வார்கள். ஆதலால் வளரும் சூழ்நிலைக்கு ஏற்ப காசு, பணம் விஷயத்தில் வசதி வாய்ப்பை அத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதை அறியவும் கற்றுக் கொடுத்து விடுங்கள்.
பெரும்பாலான குழந்தைகள் எலக்ட்ரானிக் திரைகளை உற்றுப் பார்த்தபடியே இருப்பது அவர்களுக்கு ஆரோக்கியப் பிரச்னையை ஏற்படுத்துகிறது. அதற்கு சின்ன வயதில் இருந்தே குழந்தைகளை வெளியில் மற்ற குழந்தைகளோடு விளையாட அனுமதியுங்கள். கலைப் பொருட்களை செய்ய, புத்தகங்களை வாசிக்க, நூலகம் அழைத்துச் செல்ல, தோட்ட வேலைகளை செய்ய, கடை தெருவுக்குச் சென்று பொருட்களை வாங்கி வர, வீட்டு வேலைகளில் ஈடுபட என்று கற்றுக் கொடுங்கள். இதனால் எல்லா சூழ்நிலைகளிலும் பின் நாட்களில் குடும்பத்தை திறம்பட அவர்கள் நடத்துவார்கள். அதோடு, பல்வேறு கலைகளையும் கற்றுக் கொள்வார்கள்.
குழந்தைகள் எப்பொழுதும் அடம்பிடித்தது சாக்லேட், ஐஸ்கிரீம், பீட்சா, பர்கர் என்று கேட்டால் அதன் சாதக, பாதகங்களைச் சொல்லி எப்பொழுதாவது ஒருமுறை வாங்கிக் கொடுத்துப் பழக்குங்கள். அடிக்கடி பழக்காதீர்கள். பெற்றோர் ஒரு பொருளை வேண்டாம் என்று சொன்னால், வீட்டில் உள்ள முதியவர்கள் நான் வாங்கித் தருகிறேன் என்று கூறக் கூடாது. எல்லோரும் ஒரே மாதிரியாக நடந்துகொள்ள வேண்டியது அவசியம். அப்பொழுதுதான் பெற்றோரிடம் கேட்டால் கிடைக்காததை வீட்டுப் பெரியவர்களிடம் கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம் என்ற எண்ணம் ஏற்படாமல் இருக்கும். இதனால் எடுத்ததற்கெல்லாம் அடம் பிடிப்பதை அடியோடு நிறுத்துவார்கள்.
சில குழந்தைகள் அவர்கள் வீட்டில் பர்த்டே பார்ட்டியை இப்படிக் கொண்டாடினார்கள். அதேபோல் எனக்கும் கொண்டாட வேண்டும் என்று அடம் பிடிப்பார்கள். அதற்கு விலை உயர்ந்த துணிமணி, ஆபரணங்களையும் கேட்க தயங்குவதில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் குழந்தை உங்களிடம் கேட்கின்ற பொருள் அதற்குத் தேவையா இல்லையா என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். ஆடம்பரத்துக்கும் தேவைக்குமான எல்லைக்கோட்டை அவர்களுக்கு உணர்த்துங்கள். குழந்தை கேட்கும் விஷயம் நியாயமானதாகவும் உங்களால் நிறைவேற்ற முடிவதாகவும் இருந்தால் அதை ஏற்று நிறைவேற்றுங்கள்.