பணியிட அடக்குமுறை https://youthincmag.com
வீடு / குடும்பம்

பணியிடத்தில் அடக்குமுறையை எதிர்கொள்ள உதவும் 7 உத்திகள்!

எஸ்.விஜயலட்சுமி

ணிபுரியும் இடம் மனதிற்கு அமைதியாகவும்,  உடன் பணிபுரிவோர் நட்புடனும் பழகினால்தான் பணிச்சூழல் சிறப்பாக இருக்கும். பணியிட அடக்குமுறைகளைக் கையாள்வது சவாலான வேலையாகும். இந்த சூழ்நிலைகளை திறம்பட கையாள்வதற்கான 7 உத்திகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

சில இடங்களில் மேலதிகாரிகள் மற்றும் உடன் பணிபுரிவோர், உள்ளம் நோக பேசுவது, அதிகப்படியான வேலைகளைத் தருவது, நியாயமான காரணங்களுக்காக லீவு எடுப்பதைக் கூட தடுப்பது, மறைமுகமாக கிண்டல் செய்வது போன்றவற்றில் ஈடுபடுவர்.

அடக்குமுறையை எதிர்கொள்ள உதவும் 7 உத்திகள்:

1. அமைதியான பதில்: பணியிடத்தில் அடக்குமுறையை சந்திக்க நேரும்போது பதற்றமோ எரிச்சலோ அடையாமல் அந்த சூழலை மிகவும் அமைதியாகக் கையாள வேண்டும். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு தெளிவான அமைதியான பதில் தர வேண்டும். பேசும் தொனியும் நடத்தையும் உறுதியாக, அமைதியாக இருக்கும்போது எதிராளி சற்றே திணறுவார்.

2. உணர்ச்சி வசப்படாமை: அவர்கள் வார்த்தைகளைக் கொட்டினாலும் அவற்றைப் பொறுமையாக உள்வாங்கிக் கொண்டு உணர்ச்சிவசப்படாமல் பதிலளிக்க வேண்டும். ஏனென்றால், உணர்ச்சிவசப்பட்டு பேசும்போதுதான் இன்னது பேசுகிறோம் என்கிற நிதானம் இன்றி வார்த்தைகள் வரக்கூடும். அது சம்பந்தப்பட்ட நபருக்கு பாதகமாய் முடியக் கூடும். நன்றாக சிந்தித்து உணர்ச்சி வசப்படாமல் உறுதியான குரலில் பேச வேண்டும்.

3. எல்லைகளை அமைத்தல்: மேலதிகாரியோ அல்லது உடன் பணிபுரிவோரோ அடக்குமுறையை கையாளும்போது கண்ணியமாக அதேசமயம் உறுதியாக தனது எல்லைகளை தெரிவிக்க வேண்டும். இடையூறு விளைவிக்கும் நபர்களுக்கு, ‘உங்கள் எல்லை இதுதான். இதைத் தாண்டி உள்ளே வரக்கூடாது’ என்பதைத் தெளிவாக சொல்ல வேண்டும்.

4. ஆவணப்படுத்துதல்: எல்லாவற்றையும் ஆவணப்படுத்துதல் முக்கியம். தேதிகள், நேரங்கள் செய்த பணிகள் போன்றவற்றை ஆவணப்படுத்தி வைத்திருக்க வேண்டும். தொந்தரவு தரும் நபர்களின் இடையூறுகளையும் ஆவணப்படுத்தி வைத்திருத்தல் நல்லது. மோசமான அடக்குமுறை வார்த்தைகளை வாட்ஸ் அப்பிலோ ஈமெயிலிலோ அவர்கள் அனுப்பும்போது அவற்றை பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் மேலிடத்தில் அவற்றை சமர்ப்பித்து நியாயம் கேட்க வசதியாக இருக்கும்.

5. சுய பாதுகாப்பு: கடினமான  பணிச்சூழலில் இயங்கும்போது கடுமையான மன அழுத்தம் ஏற்படும். இதை சமாளிக்க உடலையும் உள்ளத்தையும் உறுதியாக வைத்துக்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி, பொழுதுபோக்குகள், அன்பானவர்களுடன் நேரம் செலவழித்தல் போன்ற மன அழுத்தத்தை குறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும். தன்னைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

6. கூட்டணிகளை உருவாக்குதல்: தன்னைப் போன்றே சக பணியாளரும் இது போன்ற பிரச்னைகளுக்கு ஆளாகும்போது அவர்களை இணைத்து பணியிடத்தில் ஒரு கூட்டணியை உருவாக்கலாம். ஒரு ஆதரவு நெட்வொர்க்கிங் ஏற்படுத்திக் கொள்ளும்போது பணியிட இடர்களை, சவால்களை சமாளிக்க உதவும். பிரச்னைகளை மேலிடத்தில் தைரியமாக எடுத்துச் சொல்லி அதற்கான தீர்வுகளைக் காண வேண்டும்.

7. இதுவும் கடந்து போகும்: வேண்டுமென்றே தன்னைச் சீண்டி சிறப்பாக பணியாற்ற விடாமல் செய்பவரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தன்னுடைய வாழ்வில் தான் அடையப்போகும் இலக்குகளை நினைத்து அதில் கவனம் செலுத்த வேண்டும். தேவையில்லாமல் பிறர் அடிக்கும் கமெண்ட்களை காதில் வாங்காமல் அல்லது அவர்களுக்கு அதற்கு நேரடியாகவோ மறைமுகமாக பதில் அளித்துவிட்டு தனது வேலையைத் தொடர வேண்டும். இத்தகைய பிரச்னைகள் கடந்துபோகும் என்கிற தைரியத்துடன் பணியைத் தொடர வேண்டும். அதேசமயம் அவற்றை சகித்துப் போவது என்பது அர்த்தமல்ல. தனக்கு நேரும் இடையூறுகளை மேலிடத்திற்கு எடுத்துச் சொல்லி தீர்வுகள் காண வேண்டும்.

இரவில் பூத்து, காலையில் உதிரும் தெய்வீக நறுமணம் கொண்ட பிரம்ம கமலம்!

கணவன் மனைவி இந்த 7 விஷயங்களில் வெளிப்படையாக இருக்க வேண்டும்! 

ஆந்திரப் பிரதேசத்தின் புவிசார் குறியீடு பெற்ற பாரம்பரிய இனிப்பு ஆத்ரேயபுரம் பூதரெகுலு!

இந்த கண்ணாடி உங்களை தூங்க விடாது!

மஸ்குலர் டிஸ்டிராபியின் காரணமும் தீர்வும்!

SCROLL FOR NEXT