சற்றே சிந்தித்துப் பார்த்தால், நம்மை அதிகமாகக் கஷ்டப்படுத்துவது, நம்மை அதிகமாகத் திட்டுவது, நம்மை அதிகமாகத் தண்டிப்பது, நமக்கு அதிகமான பிரச்னைகளை இழுத்துக்கொண்டு வருவது பல நேரங்களில் நாமாகவே தான் இருக்கிறோம். நாமே நமக்கு விஷமாக இருக்கிறோமா, நாம் நம்மோடு நச்சுத்தன்மையுடன் உறவாடுகிறோமா என்று கண்டுபிடிக்க இந்த ஏழையும் படித்து டிக்கடித்துக்கொள்ளுங்கள்.
அதிகமாக மன்னிப்புக் கேட்கிறீர்களா?
உங்கள் மீது தவறில்லை என்றாலும் பிரச்னையைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காகவோ, ஒருவரையும் இழந்துவிடக் கூடாது என்பதற்காகவோ வலியச் சென்று முதல் ஆளாக மன்னிப்புக் கோரிடும் பழக்கம் உங்களுக்கு இருந்தால் அது உங்களின் மனநலத்துக்கு நல்லதன்று. நீங்களே உங்களுக்கு விஷம் கொடுத்துக்கொள்வது போலத்தான்.
உங்களை உரிய முறையில் நடத்தாதவரோடு தொடர்கிறீர்களா?
உங்களை உரிய மரியாதையோடு நடத்தாத, உங்களின் மதிப்பை உணராத, உங்களை முன்னிலைப்படுத்தாத, உங்களை ஒரு பொருட்டாகவே நினைக்காத எவருடனும் உறவினைத் தொடர்வது உங்களுக்கு மனக்கஷ்டத்தை மட்டும் தான் தரும்.
விமர்சனங்களைப் பர்சனலாக எடுத்துக்கொள்கிறீர்களா?
என்ன செய்தாலும் நம்மைப் பற்றிச் சொல்ல நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு ஏதேனும் கிடைக்கத்தான் செய்யும். அனைவரையும் திருப்திப்படுத்த ஆண்டவனால் கூட முடியவில்லையே. அப்படியிருக்க உங்களை நோக்கி வீசப்படும் விமர்சனங்களையெல்லாம் பெரிய விஷயமாக எடுத்துக்கொண்டு வருத்தப்பட்டால் அதற்கு ஒரு எண்டே கிடையாது. உண்மையாக உங்கள் நலனில் அக்கறை கொண்டு வழங்கப்படும் விமர்சனங்களை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு மற்றவற்றைக் கடந்துவிடுவது தான் உங்களுக்கு நல்லது.
மற்றவரோடு ஒப்பிட்டுப் பார்த்துத் தாழ்வாக உணர்வதுண்டா?
மற்றவரோடு ஒப்பிட்டுப்பார்த்து உங்களை நீங்களே மட்டமாக நினைத்துக்கொண்டால், உங்களுக்குப் பெரிய துரோகம் செய்யும் நபராக நீங்களே ஆகிறீர்கள். ஜாக்கிரதை!
அனைவரும் உங்களை நலம் விரிக்க வேண்டுமென்று எப்போதும் எதிர்பார்க்கிறீர்களா?
உங்களை நீங்களே உலகத்தின் மையப் புள்ளி என்று நினைத்துக்கொண்டு அப்படியே அடுத்தவரும் நினைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது ஒரு லிட்டர் விஷத்தை எடுத்துக் கடகடவென குடிப்பதும் ஒன்றுதான். உங்களுக்கு நீங்கள் தான் முக்கியத்துவம் தர வேண்டுமே தவிர அடுத்தவர் தரவேண்டும் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றம் தான் மிஞ்சும்.
உங்களுக்கு மாற்றுக்கருத்து இருந்தாலும் மற்றவரோடு உடன்படுகிறீர்களா?
மாற்றுக் கருத்தைச் சொல்லத் தயங்கிக் கொண்டு உடன்பாடில்லாத ஒன்றை ஏற்பது மொத்த நிம்மதியையும் கெடுத்துவிட வல்லது. உங்களுக்கு உடன்பாடில்லை என்றால் தெளிவாகச் சொல்லிவிடுங்கள்.
வாழ்தலைத் தவிர்க்க அதிக நேரம் தூங்குகிறீர்களா?
கடைசியாக இருந்தாலும் முக்கியமானது இது. தப்பிக்க, தவிர்க்க, ஒளிய, இப்படி எந்த காரணத்தையாவது வைத்துக்கொண்டு அதிக நேரம் தூங்கும் பழக்கம் உங்களுக்கு உள்ளது என்றால் அது உங்களுக்கு நீங்களே தந்துகொள்ளும் தண்டனை.
நம்மை நாமே பார்த்துக்கொள்வோம். நமக்கு நாமே விஷமாவதைத் தவிர்ப்போம்.