எந்த பெற்றோரும் தங்கள் குழந்தை, மற்ற குழந்தைகளை அடிப்பதை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டர்கள். ஒரு குழந்தை தனது உணர்ச்சிகளை வார்த்தைகள் மூலம் வெளிப்படுத்தத் தெரியாதபோதுதான் தனது உடல் உறுப்பை உபயோகித்து அடிக்கவோ அல்லது கடிக்கவோ செய்கிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண பெற்றோர்கள் செய்ய வேண்டிய 7 விஷயங்கள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. ஒரு குழந்தை மற்றொரு குழந்தையிடம் ஏமாறும்போது அல்லது கோபமாக இருக்கும்போது அல்லது அதிகமாக உணர்ச்சி வசப்பட்டிருக்கும்போது மற்ற குழந்தையை அடிக்க முற்படும். முதற்படியாக அதற்கு தனது உணர்ச்சியை சொல்லில் வெளிப்படுத்த கற்றுக்கொடுக்க வேண்டும். உதாரணமாக, 'உன் பொம்மையை அவன் எடுத்துக்கிட்டான்னு கோபமா இருக்கியா' என்று கேட்டு சமாதானப்படுத்த வேண்டும்.
2. அடிப்பதற்கு மாறாக வேறு என்ன செய்ய வேண்டும் என்பதை சொல்லித் தர வேண்டும். அதிகளவு உணர்ச்சிவசப்பட்டிருக்கையில் அவர்களின் நடத்தை எப்படி இருக்க வேண்டும் என பெற்றோர் நடித்துக் காட்டலாம். மூச்சை இழுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து விடவும், பெரியவர்களின் உதவியை நாடவும் கற்றுத் தரலாம்.
3. அடிக்க வேண்டும் என்ற உணர்வு வரும்போது அந்த சூழ்நிலையை எவ்வாறு கையாள வேண்டும் என்று சொல்லித்தர வேண்டும். பொம்மைகளை வைத்து விளையாடும்போது வாக்குவாதம் வந்தால் அவற்றைப் பிரித்து வைத்துக்கொண்டு விளையாட, கொஞ்ச நேரம் ஒருவரிடம், கொஞ்ச நேரம் மற்றவரிடம் என வைத்து விளையாட கற்றுத் தரலாம்.
4. குழந்தைகள் விளையாடும்போது கூர்ந்து கவனித்து எந்த சூழ்நிலை அவர்களை அடிக்கத் தூண்டுகிறது என்பதை கவனிக்க வேண்டும். சோர்வா? பசியா? ஏதாவது ஒரு செயலை முடிக்க முடியாத ஏமாற்றமா? எனக் கண்டறிந்து அவர்களுக்கு உதவ வேண்டும்.
5. ஒரு குழந்தை அடுத்த குழந்தையை அடிக்கும்போது நாம் அதை முதுகில் நாலு போடு போடுவது மிகத் தவறான செயலாகும். 'ஓ.. அடிப்பது என்பது ஒப்புக்கொள்ளக் கூடிய செயல்தான்' என்ற தவறான எண்ணம் அதன் மனதில் பதிந்துவிடும். 'அடிப்பது அநாகரிகம்' என்று அதற்குப் புரிய வைக்க வேண்டும்.
6. மற்ற குழந்தையை அடித்தால் விளைவுகள் எப்படியிருக்கும் என்று குழந்தைக்குப் புரிய வைக்க வேண்டும். அதாவது, சிறிது நேரம் அதனுடன் முகம் கொடுத்துப் பேசாமலிருப்பது அல்லது அதற்கு வழங்கப்படும் சிறு சிறு சலுகைகளைத் தர மறுப்பது போன்றவற்றை செய்வதால் அந்தக் குழந்தை தானாகவே தவறை உணர்ந்து திருந்த வாய்ப்பாகும்.
7. அடிப்பது என்பது குழந்தையின் வளர்ச்சியில் ஒரு முன்னேற்றம் எனவும் கூறலாம். அவர்கள் தங்கள் செயலின் எல்லைகளையும் விளைவுகளையும் பரிசோதித்து அறிய எடுத்துக் கொண்ட ஆயுதமாகவும் இது இருக்கலாம்.
எது எப்படி இருப்பினும் குழந்தைகளை சிறு வயது முதலே, அடிப்பது தவறு என்பதை மனதில் பதியுமாறு சொல்லிக்கொடுத்து நல்ல பிள்ளைகளாக வளர்ப்பது பெற்றவர்களின் கடமை.