கொசு, கரப்பான் தொல்லை 
வீடு / குடும்பம்

கொசு, கரப்பான் பூச்சிகளின் தொல்லைகளிலிருந்து விடுபட 8 எளிய வழிகள்!

ஜெயகாந்தி மகாதேவன்

வெயில் காலம் முடிந்து பருவ மழை பெய்ய ஆரம்பித்ததும் நம் மனதுக்குள், ‘அப்பாடா, இந்த வெயிலின் எரிச்சலிலிருந்து விடுபட்டாச்சு’ன்னு ஒரு குதூகலம் தோன்றும். ஆனால், அந்த சந்தோஷத்தை நீடிக்க விடாமல் ஈ, எறும்பு, கொசு என பல வகையான பூச்சிகளும் வீட்டிற்குள் படையெடுக்க ஆரம்பிக்கும். பொதுவாக இவற்றை விரட்ட பூச்சி மருந்துகளை கடையிலிருந்து வாங்கி வந்து உபயோகிக்க ஆரம்பிப்போம். அதற்கு நம் வீட்டுக் கிச்சனில் இருக்கும் பொருட்கள் சிலவற்றைக் கொண்டு இப்பூச்சிகளின் தொல்லைகளிலிருந்து நம்மால் விடுபட முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? அப்பொருட்கள்  என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. ஆப்பிள் சிடார் வினிகர்: தண்ணீரையும் ஆப்பிள் சிடார் வினிகரையும் சம அளவில் கலந்து அந்தக் கரைசலை எறும்பு ஊர்ந்து செல்லும் பாதைகளிலும் அதன் நுழைவிடங்களிலும் தெளித்து விடலாம். இந்த வினிகரிலுள்ள அசிடிட்டி எறும்பு செல்லும் பாதைகளில் படிந்துள்ள பெரமோன்களில் (Pheromones) இடையூறு உண்டுபண்ணும். இதனால் எறும்புகள் வீட்டிற்குள் நுழைவதைத் தடுக்கலாம்.

நாம் பழங்கள் வைத்திருக்கும் கூடையை சுற்றி ஈக்கள் மொய்ப்பது வழக்கம். வினிகருக்கு ஈக்களைக் கவரும் குணமுண்டு. அக்கூடையின் அருகில் ஒரு சிறிய பாத்திரத்தில் வினிகரும் டிஷ் சோப்பும் கலந்து வைத்தால் அருகில் வரும் ஈ சோப்பினால் உண்டாகும் மேற்பரப்பு டென்ஷனால் வினிகர் கரைசலுக்குள் விழுந்து மூழ்கி விடும்.

2. உப்பு: உப்பு உணவுக்கு சுவையூட்டுவது மட்டுமின்றி, நல்ல பூச்சி விரட்டியாகவும் செயல்படும். நம் வீட்டைச் சுற்றியுள்ள வெளிப்பரப்பிலும் தோட்டத்திலும் உப்பைப் பரத்தி வைத்தால் அட்டை மற்றும் நத்தைகளின் நடமாட்டம் குறையும். வீட்டிற்குள்ளும் எறும்புகளின் நடமாட்டம் உள்ள பகுதிகள் மற்றும் அவற்றின் நுழைவாயில்களிலும் உப்பைத் தூவி வைத்தால் அவற்றின் இடையூறிலிருந்து விடுபடலாம்.

3. லெமன் ஜூஸ்: பூச்சிகளை விரட்டுவதில் இயற்கை முறையில் அதிக சக்தி வாய்ந்த ஒரு பொருள் லெமன் ஜூஸ். இதன் அதிகப்படியான சிட்ரஸ் வாசனை பூச்சிகளை அண்ட விடாமல் தடுப்பதிலும் தரையை சுத்தமாக வைக்க உதவி புரிவதிலும் வலிமையானது. லெமன் ஜூஸை சிறிதளவு நீருடன் கலந்து, நம் உடலின் வெளியே தெரியும் சருமப் பகுதிகளில் தடவிக்கொண்டால் கொசுக்கள் கடிப்பதை தவிர்க்கலாம். மேலும், எலுமிச்சம் பழ தோல்களை ஜன்னல் மற்றும் வாசல் கதவுகளின் அருகில் வைப்பதும் கொசுக்கள் உள்ளே வராமல் தடுக்க உதவும்.

4. பூண்டு: சக்தி வாய்ந்த ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி ஃபங்கல் குணமுடைய மூலிகையாகும்  பூண்டு. இதனுடையை வாசனையும் பூச்சிகளை நெருங்க விடாமல் செய்யக்கூடியது. சில பூண்டுப் பற்களை நசுக்கி தண்ணீரில் ஊற வைத்துப் பின் வடிகட்டிப் பின் அந்த நீரை வீட்டைச் சுற்றிலும் தெளிக்க கொசு வீட்டிற்குள் நுழைவது  குறையும். பூண்டுப் பற்களை நசுக்கி அவற்றை சாறுடன் எறும்புகள் நுழையும் இடத்தில் போட்டு வைத்தால் கூட்டம் கூட்டமாக அவை வீட்டிற்குள் நுழைவதைத் தடுக்க முடியும்.

5. துளசி: துளசியில் சீனித் துளசி என்றொரு வகை உண்டு. இது  இயற்கையாகவே பூச்சிகளை விரட்டும் குணம் கொண்டது. இதிலிருந்து வரும் ஒரு தனித்துவமான வாசனையானது அனைத்து வகைப் பூச்சிகளையும் விரட்டக் கூடியது. ஃபிரஷ் சீனித் துளசி இலைகளை ஒரு பவுலில் போட்டு கிச்சனிலும், ஈ மற்றும் கொசுத் தொல்லை நிறைந்த மற்ற இடங்களிலும் வைத்தால் பிரச்னை தீரும். இந்த இலைகளைக் காய வைத்து எறும்பு கொசு போன்றவை நுழையும் இடங்களில் போட்டும் வைக்கலாம்.

எட்டுக்கால் பூச்சிகளுக்கு துளசி வாசனை பிடிக்காது. எனவே, வீட்டில் துளசி செடி வளர்ப்பதும் துளசி இலைகளை அப்பூச்சிகள் வளரும், வீட்டின் மூலை போன்ற இடங்களில் போட்டு வைப்பதும் பிரச்னைகள் தீர உதவும்.

6. பட்டை: இது ஒரு சிறந்த ஸ்பைஸ் மட்டுமல்ல, ஒரு சிறந்த பூச்சி விரட்டியும் கூட! பட்டையைப் பவுடர் ஆக்கி அதை எறும்பு ஊரும் பாதைகளிலும் அவற்றின் நுழைவிடங்களிலும் தூவி வைக்க பட்டை பவுடரின் ஸ்ட்ராங் வாசனை அவற்றை நம் வீட்டுக்குள் நுழைய விடாமல் தடுத்துவிடும். இந்த பவுடரை எங்கெல்லாம் கரப்பான் பூச்சிகள் அடைந்துள்ளதோ அங்கெல்லாம் தூவி வைத்தால், அதன் வாசனையை சகிக்க இயலாத கரப்பான்கள் இடத்தைக் காலி செய்துவிடும் வாய்ப்பு உருவாகும். அதனால்  அவற்றின் எண்ணிக்கை குறையும்.

7. புதினா: புதினாவின் வாசனையும் பல வகையான பூச்சிகளுக்கு அலர்ஜி தருவதாகும். இதன் இலைகளை நசுக்கி அதன் சாறை நம் உடலில் வெளியே தெரியும் பகுதிகளில் பூசிக்கொண்டால் கொசுக் கடியிலிருந்து தப்பிக்கலாம். இந்த இலைகளை நசுக்கி வீட்டை சுற்றி அங்கங்கே போட்டு வைப்பதும் கொசுக்களை விரட்ட உதவும். மேலும் எறும்பு, எலி போன்றவற்றையும் வீட்டிற்குள் நுழையாமல் தடுக்க இது உதவும்.

8. வெள்ளரி: இதிலிருக்கும் இரசாயனப் பொருள் ஒன்று வெள்ளரியை ஆன்டி பெஸ்ட் (pest) குணம் கொண்டதாய் செய்துள்ளது. எறும்பு மற்றும் கரப்பான் இருக்கும் இடங்களில் சீவிய வெள்ளரி தோலைப் போட்டு வைத்தால் அவற்றை ஒழிப்பதற்கான வாய்ப்பு உண்டாகும். இந்தத் தோலை பழக் கூடையை சுற்றி தூவி வைத்தால் ஈக்கள் தலை காட்டாது.

மேற்கூறிய பொருட்களை உபயோகித்து நாமும் குளிர் நேரங்களில் பூச்சிகள் தரும் உபத்திரவத்திலிருந்து விடுதலை பெறலாமே!

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT