சிலர் எதற்கெடுத்தாலும் உங்களைப் பார்த்தாலே திட்டுகிறார்களா? காரணமே இல்லாமல் உங்களை வசை பாடுபவர்களின் வாயை மூட வைத்து, அதற்கு மாறாக வாழ்த்து சொல்ல வைக்கும் 8 விஷயங்களை இந்தப் பதிவில் காண்போம்.
1. அமைதியாக இருங்கள்: உங்களை திட்டும்போது நீங்கள் பொறுமையாக, கோபப்படாமல் அமைதியைக் கடைபிடித்தால் திட்டுபவர் ஒரு கட்டத்தில் தானாக அடங்கி விடுவார். இதனால் சூழல் தணிந்து அவரிடம் சென்று நீங்கள் அது குறித்து விளக்கம் அளிக்கலாம்.
2. குரலின் தொனி: பெரும்பாலானோர், கோபமாக இருக்கும் போது தங்களின் குரலை உயர்த்தி பேசுவதால், தான் பேசுவது நியாயமாகிவிடும் என்று நினைத்துக் கொண்டு பேசுகிறார்கள். ஆனால், குரலை உயர்த்தாமல் அமைதியாக தன்னுடைய பாசிட்டிவ் பாய்ண்டுகளை பேசுபவரே மிகப்பெரிய வெற்றியாளர்.
3. நகைச்சுவை: சூழல் கடுமையாக இருக்கும் வேளையில் நகைச்சுவை செய்து இயல்பான நிலைக்கு மாற்ற முயற்சிக்கலாம்.
4. பிரேக்: சண்டை கையை மீறி போகும்போது, "இது பற்றி சிறிது நேரம் கழித்து பேசலாமா?" என்று கேட்டு பிரச்னைக்கு பிரேக் கொடுத்து கோபம் தணிந்த உடன் பேசினால் நிலைமை கைமீறி செல்வதற்கான வாய்ப்பு குறைவு.
5. உடல் மொழி: நாம் நினைப்பதை வெளிப்படுத்த உடல் மொழி மிகவும் அவசியம் என்பதால் எதிரில் இருப்பவர் கத்திக் கொண்டிருக்கும்போது நீங்கள் தலையசைத்துக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை அவர்களுக்கு பேசாமல் தெரியப்படுத்துங்கள்.
6. உங்கள் உணர்வுகளை பகிர்ந்துகொள்ள வேண்டும்: உங்களை எப்போதும் திட்டிக்கொண்டே இருப்பவர் உங்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் பெற்றோர், தோழி, மனைவி, கணவன் என யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். அவர்கள் இப்படி வார்த்தைகளால் சுட்டெரிப்பதால் நீங்கள் காயப்படுகிறீர்கள் என்பதை கண்டிப்பாக அவர்களுக்குத் தெரியப்படுத்தினால் சிறிய மாற்றமாவது ஏற்படும்.
7. உங்கள் தேவைகளைத் தெரிவிக்கவும்: உங்களை அன்புக்கும் பாசத்திற்கும் தகுதியுடையவராக உணர்ச்சி பெற வைக்கும் விஷயங்களை லிஸ்ட் போட்டு அதில், எவையெல்லாம் நீங்கள் பிறரிடம் இருந்து எதிர்பார்க்கிறீர்கள் என்ற விஷயங்களை உங்களை திட்டுபவர்களிடம் தெரியப்படுத்தினால் அவர்களிடம் கண்டிப்பாக மாற்றத்தை எதிர்பார்க்கலாம்
8. ஆதரவு: உங்களை பேசிப் பேசியே காலி செய்யும் நபரை தவிர, வேறு யாரெல்லாம், அதாவது நண்பர்கள், உடன் பிறந்தவர்கள், மனநல ஆலோசகர் என உங்களுக்கு ஆதரவு கொடுப்பவர்களை யோசித்து அவர்களிடம் பேசுவதால் உங்களுக்கு மன அமைதி கிடைப்பதோடு, மனதில் இருப்பதைக் கேட்க ஒருவர் இருக்கிறார் என்ற ஆறுதலும் கிடைக்கும்.
மேற்கண்ட எட்டு விஷயங்களை நீங்கள் பின்பற்றினால் உங்களை திட்டுபவர்களின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி நீங்களும் மன அளவல் நிம்மதியை உணர முடியும்.