வயலில் கடின வேலை பார்ப்பவர்கள் 
வீடு / குடும்பம்

ஆடிப்பாடி வேலை செஞ்சா அலுப்பிருக்காது; ஆனால் ஆரோக்கியம் இருக்கும்!

கோவீ.ராஜேந்திரன்

‘ஓடியாடி வேலை செய்தால் நோய் நொடியில்லாமல் வாழலாம்’ என்பது நம் முன்னோர்கள் கூறும் வாக்கு. அது உண்மைதான் என்கிறது அன்மையில் நடந்த பல மருத்துவ ஆய்வு முடிவுகள். நம் அன்றாட உடல் செயல்பாடு நோய்களை எதிர்த்து போராட உதவுகிறது என்கிறார்கள் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள். நம் அன்றாட உடல் செயல்பாடுகள் மூலம் சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், மனச்சோர்வு, மூட்டு வாதம், எலும்பு தேய்மானம் போன்றவற்றை சரிசெய்யலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்தாலும் கூட போதாது. ஒரு நாளில் நீங்கள் எவ்வளவு தூரம் இயங்குகிறீர்களோ அந்தளவுக்கு அது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது. சும்மாவே உட்கார்ந்து இருக்காமல், உங்கள் உடல் ‘பொசிஷனை’ அடிக்கடி மாற்றுங்கள். அது சின்னச் சின்ன அசைவுகள் என்றாலும் கூட பரவாயில்லை. உங்கள் கால்களுக்கும், பாதங்களுக்கு அடிக்கடி வேலை கொடுங்கள். இது நீங்கள் செய்யும் உடற்பயிற்சியை விட சிறந்தது என்கிறார்கள்.

நீங்கள் உடற்பயிற்சி அல்லது வீட்டில் செய்யும் வேலைகள், வெளியே ஷாப்பிங் போதல், உங்கள் செல்ல நாயுடன் உலாவுதல் போன்றவற்றின் மூலம் தினமும் 15 முதல் 50 சதவீதம் நம்முடைய கலோரிகளை செலவழிக்கிறோம் என்பதை அமெரிக்காவில் ஒரு ஆய்வில் கண்டறிந்தார்கள்.

உட்கார்ந்தே இருக்கும் வாழ்க்கை முறை வளர்சிதை மாற்றம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. இதற்கு மாற்றாக நிற்பது, வீட்டை சுத்தம் செய்வது, மாடிப்படி ஏறுவது, சமைப்பது போன்ற ஒவ்வொரு உடல் செயல்பாடுகளும் உடலின் கலோரிகளை எரிக்க உதவும். மேலும், சுறுசுறுப்பான வளர்சிதை மாற்றம், இரத்த சர்க்கரை, கொலஸ்ட்ரால், ட்ரை கிளிசரைடு மற்றும் இரத்த அழுத்த அளவை கவனித்து உடலில் அவற்றை சமநிலையில் பராமரிக்க உதவுகிறது.

உடற்பயிற்சி இல்லாத உடலியக்க செயல்பாடுகளை, ‘தொமோ ஜெனெசிஸ்’ என்று அழைக்கிறார்கள். NEAT (Non Exercise Activity Thermogenesis) இந்த வகை செயல்பாடுகளில் குழந்தைகளுடன் விளையாடுவது, தோட்டத்தில் வேலை பார்ப்பது, வீட்டில் சமையல் மற்றும் வீட்டை சுத்தம் செய்தல், மாடிப்படி ஏறி இறங்குவது, கடைகளுக்கு நடந்து சென்று பொருட்கள் வாங்குதல் போன்றவை இடம் பெற்றுள்ளன.

உடலுக்குத் தேவையான அளவு அசைவுகளைக் கொடுக்காததால் இரத்த குழாய்களில் கொழுப்பு படிகிறது. தொந்தி விழுகிறது, மூட்டுகளின் நெகிழ்வான தன்மையை குறைக்கிறது, உடல் உள்ளுறுப்புகளின் செயல் திறனை குறைக்கிறது. உடற்கழிவுகளை சரியான முறையில் வெளியேற்ற முடியாத நிலை ஏற்படுகிறது. இதன் காரணமாக மன அழுத்தம் உண்டாகிறது. அதன் காரணமாக இரவில் தூக்கமின்மை ஏற்படுகிறது.

நம்மில் பெரும்பாலானோர் அன்றாட வாழ்வில் அசைவற்ற நிலையில் பல மணி நேரங்களை செலவழிக்கிறோம். அதனால் வளர்சிதை மாற்றத்தில் தொய்வு ஏற்பட்டு பல்வேறு உடல் நலக்குறைவுகள் ஏற்படுகின்றன. இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடுவது, இரத்தத்தில் கொலஸ்ட்ரால் கூடுவது இதனால்தான். இதனைத் தவிர்க்க அரை மணி நேரத்திற்கு ஒருமுறை எழுந்து 3 நிமிடங்கள் உங்கள் உடலை அசைத்து நடக்கலாம் அல்லது வேறு ஏதேனும் வேலை செய்யலாம் என்கிறார்கள் ஓர் ஆய்வில்.

முடிந்தளவு வீட்டில் அதிகம் வேலை செய்யுங்கள். மின் சாதனங்களைப் பயன்படுத்தி வேலை செய்வதைத் தவிர்த்தாலே போதும். வீட்டில் வேலை செய்பவர்களுக்கு நினைவாற்றல், கவனம் செலுத்துதல் ஆகியவற்றின் திறன் அதிகரிக்கும், கால்களில் வலிமை அதிகரிக்கும், கீழே விழுவதில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும் என்று ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

ஆண்கள் சராசரியாக தினமும் 476 கலோரிகளும், பெண்கள் 376 கலோரிகளாவது செலவிட வேண்டும். ஆனால், இதில் 50 சதவீதத்திற்கும் குறைவாகவே செலவிடுகிறார்கள் என்கிறது ஓர் ஆய்வு. குறைவாக கலோரிகள் செலவிடுவதும், உடல் ரீதியாக செயல்பாடுகள் குறைவாக இருப்பதும் கவலைக்குரிய விஷயம். எனவே, தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். அது மட்டும் போதாது. ஓடியாடி வேலை செய்யுங்கள். இதனால் உங்கள் ஆரோக்கியம் மேம்படும்.

மணக்கும் சுக்குட்டிக் கீரை மசியலும் புடலங்காய் பொரியலும்!

உங்கள் வீட்டு நாய் ஆரோக்கியமாக இருக்க என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்? கால்நடை மருத்துவர் டாக்டர். பிரியா விளக்கம்!

சிறுநீரகக் கல் இவ்வளவு ஆபத்தானதா? அச்சச்சோ! 

குளிர் காலத்துக்கு ஏற்ற ஆரோக்கியமான மொறு மொறு பக்கோடா வகைகள்!

சின்ன விஷயங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தின் அவசியம் தெரியுமா?

SCROLL FOR NEXT