'Aanaikkoru Kaalam Vanthaal Poonaikkoru Kaalam varum' Pazhamozhiyin Porul Theriyumaa Ungalukku? https://twitter.com
வீடு / குடும்பம்

‘ஆனைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும்’ பழமொழியின் பொருள் தெரியுமா உங்களுக்கு?

கே.எஸ்.கிருஷ்ணவேனி

‘ஆனைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும்’ இந்தப் பழமொழிக்கு பொதுவாக ஒரு விளக்கம் கூறப்படும். ஆனை போல பெரியவர்களுக்கு ஒரு நல்ல காலம் வந்தால், பூனை போல சிறியவர்களுக்கும் அவர்களது வாழ்வில் ஒரு நல்ல காலம் வரும் என்று பொருள் கொள்ளப்பட்டது. இங்கே பெரியவர் என்பது உருவத்தால் மட்டுமல்லாமல், செல்வாக்கு, புகழ் ஆகியவற்றையும் குறிப்பதாகும். அதேபோல் சிறியவர் என்பது செல்வாக்கு, புகழ் எதுவுமே இல்லாத சாதாரண நிலையில் உள்ளவர்களைக் குறிப்பதாகும். இது ஓரளவுக்கு சரியாகத் தோன்றினாலும் வேறு ஒரு விளக்கமும் கூறப்படுகிறது.

அதாவது, ஆனை (ஆ + நெய்) அதாவது பசுவின் பாலிலிருந்து கிடைக்கும் நெய். இதை அதிகமாக சாப்பிட்டால் நோய் வரும். அப்போது வைத்தியர் கொடுக்கும் மருந்துப் பொடியை தேனில் குழைத்து சாப்பிட வேண்டும். பூனை என்பதை பிரித்து (பூ + நெய்) என்று பார்க்க வேண்டும். பூவிலிருந்து கிடைக்கும் தேன். அதாவது 40 வயதுக்கு மேல் நெய்யை சுருக்கி, தேனைக் கூடுதலாக சாப்பிட வேண்டும் என்பதன் அர்த்தமாகும்.

தேன் எளிதில் ஜீரணமாகக்கூடிய மருத்துவ குணம் நிறைந்த பொருளாகும். ஆனைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும் என்பதற்கு இப்படி ஒரு பொருள் இருக்க,  இன்னுமொரு பொருள் பொதிந்த ஒரு அர்த்தமும் சொல்லப்பட்டது.

உண்மையான விளக்கம்: மூன்றாவதாகக் கூறப்படும் இந்தப் பொருள்தான் மிகவும் பொருத்தமானதாக உள்ளது. இது வேளாண்மைத் தொழிலை அடிப்படையாகக் கொண்டு எழுந்த பழமொழியாகக் கூறப்படுகிறது. அதாவது, பழங்காலத்தில் அறுவடை செய்த நெல் கதிர்களை போரடித்து நெல் மணிகளாக மாற்றுவதற்கு ஆனை (யானை) தேவைப்பட்டது. யானைகளைக் கொண்டு கதிரடித்த பின்னர் பிரிந்த நெல்மணிகளை தானியக்கிடங்குகளில் சேமித்து வைப்பார்கள்.

இப்படி சேமித்து வைக்கப்படும் நெல்மணிகளை எலிகள் அள்ளிக்கொண்டு சென்று விடும். இவற்றை சரியாக கவனிக்கவில்லை என்றால் கிடங்கையேகூட எலிகள் காலி செய்துவிடும். எனவே, எலிகளை ஒழிக்க பூனைகளைக் கொண்டு வந்து தானியக் கிடங்குகளில் வைப்பார்கள். பூனைகளும் எலிகளை வேட்டையாடி தின்றுவிடும்.

இப்படி கதிரடிக்கும் காலத்தில் யானையின் உதவியும், தானியங்களை சேமிக்கும் காலத்தில் பூனையின் உதவியும் மனிதர்களுக்குத் தேவைப்பட்டது. இதனை குறிக்கும் வகையில் ஆனைக்கு (யானைக்கு) ஒரு காலம் வந்தால், பூனைக்கும் ஒரு காலம் வரும் என்று கூறிச் சென்றுள்ளனர் நமது முன்னோர்கள்.

Buddha Quotes: புத்தரின் 15 வாழ்வியல் கருத்துக்கள்!

இரவில் தாமதமாக சாப்பிடுபவரா நீங்க? அச்சச்சோ, அது ரொம்ப தப்பாச்சே!

காலம் காலமாக நின்று பேசும் மாமல்லபுரமும் மறக்கப்பட்ட மாமல்லனும்!

அந்தப் படத்தில் ரஜினியுடன் நடித்திருக்க கூடாது! – குஷ்பு வருத்தம்!

எலான் மஸ்க் தொழில்நுட்பத்திற்கு பச்சைக்கொடி… அடேங்கப்பா! 

SCROLL FOR NEXT