வீடு / குடும்பம்

‘ஆல் இன் ஒன்’ பெற்றோராகத் திகழ்வது எப்படி தெரியுமா?

கே.எஸ்.கிருஷ்ணவேனி

முன்பெல்லாம் குழந்தைகளை வளர்ப்பது ரொம்பவும் சுலபமாக இருந்தது. வேளைக்கு சாப்பாடு, பள்ளிக்கு அனுப்புவது, பள்ளியில் இருந்து வந்ததும் விளையாடுவது, இரவு கொஞ்சமாக ஹோம் ஒர்க் செய்வது, நல்ல தூக்கம் இவைதான் முந்தைய காலத்து குழந்தைகளின் ரொட்டீனாக இருந்தது. ஆனால், இன்று குழந்தைகளை வளர்ப்பது பெரிய கலை. வெறும் சாப்பாடு, படிப்பு மட்டும் அவர்களுக்குக் கொடுத்தால் போதாது.

அவர்களை வார இறுதியில் ஸ்விம்மிங் கிளாஸ், டிராயிங் கிளாஸ், டான்ஸ் கிளாஸ், ஐகியூ கிளாஸ், கிரிக்கெட் கோச், ஷட்டில் கோச் என்று அனுப்புவதும், அழைத்துச் செல்வதும் பெற்றோர்களின் கடமைகளில் ஒன்றானது. இப்படி எல்லா நிலைகளிலும் அவர்களுடன் இருப்பது, அவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாகவும், சிறந்த வழிகாட்டியாகவும் செயல்படுவது என்று ‘ஆல் இன் ஒன்’னாக பம்பரமாக சுழல வேண்டியது இன்றைய பெற்றோரின் கடமையாகிப்போனது.

இன்றைய பிள்ளைகள் பெற்றோர்களிடம்  எதிர்பார்ப்பது: தன்னுடைய பெற்றோர் நிபந்தனையற்ற அன்பினைக் கொடுப்பவராக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். தங்களை நேசிப்பவராகவும், தங்களுடைய சாதனைகளை கொண்டாடுபவர்களாகவும் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள். தங்கள் மீது முழு நம்பிக்கை வைக்கும் பெற்றோர்களைத்தான் அவர்கள் விரும்புகிறார்கள்.

தங்களுடைய சிந்தனைகள், தேவைகள், உணர்வுகளை புரிந்தவர்களாக இருப்பது அவர்களுக்கு சகஜமான சூழலை வீட்டில் உருவாக்கும் என்று நம்புகிறார்கள். தங்களுடன் திறந்த மனதுடன் பேசுவதும், ஒளிவு மறைவின்றி பெற்றோர்கள் தங்களிடம் எதை எதிர்பார்க்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளவும் விரும்புகிறார்கள்.

சவாலான நேரங்களில் தங்களை பொறுமையுடனும் அமைதியுடனும் கையாள வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இக்கட்டான நேரங்களில் குத்திக்காட்டாமல் ஆதரவாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். தங்களிடம் அதிகமான எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொண்டு தங்களுக்கு அதிக நெருக்கடி கொடுக்க வேண்டாம் என்று எண்ணுகிறார்கள். தங்களை கண்ணுக்குள் வைத்து பொத்தி காப்பதாக எண்ணி அதிகமான பாதுகாப்பு கொடுப்பதும், அதிகளவில் கட்டுப்பாடுகளை விதிப்பதும் அவர்களை மூச்சு முட்ட செய்வதாகக் கூறுகிறார்கள்.

மகிழ்ச்சியான மற்றும் சோகமான தருணங்களில் அனுதாபம் தேவையற்றது என்றும், தங்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு பக்கபலமாக இருக்க வேண்டும் என்றும் நினைக்கிறார்கள். தங்களின் விருப்பங்களையும், ஆர்வங்களையும் செவிசாய்த்து கேட்க வேண்டும். ஊக்கமும் உற்சாகமும் கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். தங்களின் செயல்களுக்கு பாராட்டுகளை எதிர்பார்ப்பதாகவும் அவை கிடைக்கவில்லை எனில் ஏமாற்றம் அடைவதாகவும் கூறுகிறார்கள். பிள்ளைகளின் ஆதங்கங்களை புரிந்து கொண்டு சிறந்த பெற்றோராக செயல்படுவோமா?

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT