Are you over 40 plus? Then this post is for you Abinaya Narayanan
வீடு / குடும்பம்

நீங்கள் 40 ப்ளஸ் வயதிற்கு மேற்பட்டவரா? அப்ப இந்தப் பதிவு உங்களுக்குத்தான்!

கோவீ.ராஜேந்திரன்

நீங்கள் 40 வயதைத் தாண்டியவர் என்றால் உங்கள் வாழ்வில் நீங்கள் சில மாற்றங்களை செய்ய வேண்டியது அவசியம் என்கிறார்கள். 40 வயதை கடந்துவிட்ட உங்களுக்கு தாகம் இல்லாவிட்டாலும் அல்லது தேவைப்படாவிட்டாலும் எப்போதும் தண்ணீர் குடியுங்கள். உடலில் நீர்ச்சத்து குறைவதுதான் அனைத்து வியாதிகளுக்கும் காரணமாகிறது. மிகப்பெரிய உடல்நலப் பிரச்னைகள் மற்றும் அவற்றில் பெரும்பாலானவை உடலில் நீர் பற்றாக்குறையால் ஏற்படுகின்றன. ஒரு நாளைக்கு குறைந்தது 2 லிட்டர் நீரை குடியுங்கள் என்கிறார்கள் வெர்ஜினியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.

உடல் சருமத்தின் ஆரோக்கிய ரகசியம் நீர்ச்சத்தில்தான் உள்ளது என்கிறார்கள். தலைவலியிலிருந்து உடல் வலி, உடல் எரிச்சல், உலர்ந்த சருமம் வரை அனைத்திற்கும் நீர்ச்சத்து குறைவே காரணமாகிறது. வயதான காலத்தில் நீர் சத்துடன் இருப்பவர்கள் உடல் ஆரோக்கியத்துடனும் இதயம் மற்றும் நுரையீரல் நோய்களின் ஆபத்திலிருந்தும் விலகி இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

40 வயதிற்கு மேல் சுறுசுறுப்பாக இயங்கும் நபர்கள் கேன்சர், இதய நோய் மற்றும் மன அழுத்த நோய்களிடமிருந்து விடுபட்டு நீண்ட ஆயுளுடன் வாழ்வதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர். எனவே, உங்களால் முடிந்த அளவு வேலை செய்ய வேண்டும். நடைப்பயிற்சி, நீச்சல், உடற்பயிற்சி அல்லது எந்த வகையான விளையாட்டு போன்ற உடலின் இயக்கம் அவசியம் இருக்க வேண்டும்.

‘நீண்ட நாள் வாழ ஆசையா? குறைவாக சாப்பிடுங்கள்’ என்கிறார்கள் அமெரிக்காவின் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் ஆராய்ச்சியாளர்கள். குறைந்த அளவு கலோரி உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளும்போது நமது உடலின் மெட்டபாலிசம் குறைவாக இயங்க ஆரம்பிக்கிறது. இதனால் முதுமை தள்ளிப்போடப்படுகிறது. அதிகமாக சாப்பிட வேண்டும் என்ற ஆசையை விடுங்கள். ஏனென்றால், அது ஒருபோதும் நன்மை தராது. ஆனால், புரதம், கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை அதிகம் பயன்படுத்துங்கள்.

அவசியமானால் தவிர வாகனத்தைப் பயன்படுத்த வேண்டாம். மளிகைப் பொருட்களை வாங்க, யாரையாவது சந்திக்க அல்லது ஏதாவது வேலை செய்ய நீங்கள் எங்கு சென்றாலும், நீங்கள் நடந்து செல்ல முயற்சி செய்யுங்கள். லிஃப்ட், எஸ்கலேட்டர்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக படிக்கட்டுகளில் ஏறி, இறங்குங்கள்.

கோபத்தை விடுங்கள், கவலைப்படுவதை நிறுத்துங்கள், தேவையில்லாத விஷயங்களைப் புறக்கணிக்க முயற்சி செய்யுங்கள். தொந்தரவான சூழ்நிலைகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளாதீர்கள், அவை எல்லாம் ஆரோக்கியத்தையும் கெடுத்து விடும். கோபத்தை குறையுங்கள். அதிகப்படியான கோபம் கொள்பவர்கள் 70 வயதிற்குள் மரண ஆபத்தை சந்திக்கிறார்கள் என்பதை 30 ஆண்டுகளின் ஆய்விற்குப் பிறகு கண்டறிந்துள்ளனர்.

நேர்மறை நபர்களுடன் பேசுங்கள், அவர்கள் சொல்வதை கேளுங்கள். சமூக ஆதரவு நல்வாழ்விற்கு ஒரு சிறந்த மூலாதாரம். ஆன்மிக அனுபவங்கள் பலருக்கு மன அழுத்தத்திற்கு எதிரான பாதுகாப்பை அளிப்பதாக அமெரிக்க மிசௌரி பல்கலைக்கழக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

முதலில், பணத்தின் மீதான பற்றுதலைக் கைவிடுங்கள். உங்களைச் சுற்றியுள்ளவர்களுடன் இணைந்திருங்கள். சிரிக்கவும் பேசவும் நேரம் செலவிடுங்கள். பணம் பிழைப்பிற்காக உருவாக்கப்படுகிறது, பணத்திற்காக வாழ்க்கை அல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களால் சாதிக்க முடியாதது பற்றியோ அல்லது நீங்கள் நாட முடியாத ஒன்றை பற்றியோ வருத்தப்பட வேண்டாம். அதை புறக்கணித்து மறந்து விடுங்கள். பணம், பதவி, கௌரவம், அதிகாரம், அழகு, சாதி மற்றும் செல்வாக்கு இவை அனைத்தும் ஈகோவை அதிகரிக்கின்றன. பணிவு மக்களை அன்புடன் நெருக்கமாக்குகிறது.

நல்லதே நடக்கும் என நம்பும் மனிதனின் வாழ்நாள் கூடும் என்கிறார்கள் ஹாங்காங் பல்கலைக்கழக ஆய்வாளர்கள். நல்லெண்ணம் உடலின் உயிரியல் அமைப்புகளுடன் நேரடித் தாக்கத்தை உண்டாக்குகிறது என்கிறார்கள். சோர்வு வந்தால் சந்தோஷமாக யோசியுங்கள். அப்படி மனத்திற்குள் சந்தோஷப்பட்டுக்கொள்வது நம் உடலில் நலம் செய்யும் வேதி மாற்றங்களை சுரக்க வைக்கும். அதன் மூலம் நீண்ட நேரத்திற்கு உங்கள் மனம் நல்ல நிலைக்குத் திரும்பும்.

அடுத்தவர்களுக்கு உதவுங்கள். அது உங்களுக்கு புண்ணியம் சேர்க்கிறதோ இல்லையோ உங்களின் ஆரோக்கியம் காக்க உதவுகிறது என்கிறார்கள் ஹார்வர்டு பப்ளிக் ஹெல்த் ஸ்கூல் ஆராச்சியாளர்கள். அடுத்தவர்களுக்கு உதவும் தயாள குணம் உங்கள் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. அதோடு உங்கள் ஆயுளையும் கூட்டுகிறது என்கிறார்கள்.

நேர்மறை எண்ணங்களை நமக்கு நாமே வளர்த்து கொள்வதும் நம்மிடம் நாமே நேர்மறை கருத்துக்களை பேசிக்கொள்வதும் நமது வாழ்வில் நல்ல பலன்களை ஏற்படுத்தும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். தன்னைத்தானே நேர்மறை வார்த்தைகளால் உற்சாகப்படுத்திக்கொள்கிறவர்கள் வேலைகளில் அதிக ஈடுபாடு கொண்டவராக இருக்கிறார்கள். எனவே, அவர்களே தங்களது வாழ்க்கையிலும், வேலையிலும் நிறைவான திருப்தி அடைந்தவர்களாக உள்ளனர் என்கிறார்கள்.

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

நுண்கலை போற்றிய நல்லவர்!

“அற்ப மானிடனே, செத்துப் போ” -  பயனரை மோசமாகத் திட்டியதா Gemini AI?

என்னை துறந்து சென்றவனும் என்னால் துறக்கப்பட்டவனும்!

இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும் சமையல் எண்ணெய்கள்!

SCROLL FOR NEXT