Are you over fifty? Then this information is for you 
வீடு / குடும்பம்

நீங்கள் ஐம்பது வயதைக் கடந்தவரா? அப்படியென்றால் இந்தத் தகவல்கள் உங்களுக்குத்தான்!

சேலம் சுபா

கவை ஐம்பது என்பது பொறுப்புகள் கடந்து வயதாகி விட்டதோ எனும் எண்ணம் லேசாக மனதில் எழும் வயது. மன நலமும், உடல் நலமும் அவ்வப்போது முரண்டு பிடித்து, ‘உனக்கு வயதாகிவிட்டது’ என்று உணர்த்திக்கொண்டே இருக்கும் தருணம். இதிலிருந்து எப்படி மீண்டு வருவது? என்ன செய்தால் நம் மனதையும் உடலையும் இளமையாக வைத்துக் கொள்ளலாம் என்பதற்காக பதிவுதான் இது.

1. முதலில் உங்களது வயது ஐம்பது என்பதை நீங்கள் மறந்து விடுங்கள். உங்கள் வயதிலிருந்து பத்து வயதைக் குறைவாகவே எண்ணுங்கள். மனம் செய்யும் மாயம் உங்கள் இளமையை தக்க வைக்கும்.

2. உங்கள் உடலுக்குத் தேவையான பராமரிப்பை அவ்வப்போது அவசியம் வழங்குங்கள். அது உடற்பயிற்சியாக இருக்கலாம், நடைப்பயிற்சியாக இருக்கலாம் அல்லது உங்களுக்குப் பிடித்த நடனமாகக் கூட இருக்கலாம்.

3. பிடித்ததை செய்யவோ, மனம் விட்டுப் பேசவோ கூச்சப்படாதீர்கள். மனதை திறந்து வையுங்கள். உங்கள் அனுபவம் மேலும் நிறையப்போகிறது என்பதை நினைத்துப் பெருமைப்படுங்கள்.

4. தோற்றத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள். ஏனோதானோவென இருக்காமல் விரும்பும் நேர்த்தியான உடைகளும் அளவான மேக்கப்பும் அவசியம் தேவை.

5. உங்கள் தோற்றம், நடை, உடை, பாவனைகளில் சற்றே வித்தியாசப்படுத்துங்கள். (ஒரே மாதிரி வாழ்வது போர் என்று நினைத்தால்) இதற்கு விமர்சனங்கள் வந்தால் அவற்றைக் கண்டுகொள்ளாதீர்கள்.

6. நமது உடல் அங்கங்களுக்கு அவ்வப்போது கவனிப்பு என்பது அவசியம் தேவை. கால்களுக்கும் கைகளுக்கும் தேவையான வலிமையைத் தர வேண்டும். குளிக்கும்போது உடல் பொறுக்கும் சூட்டில் முழங்கால்கள், கணுக்கால்களை அழுத்தி மசாஜ் செய்து, சிறிது நேரம் கழித்து சுடு தண்ணீர் ஊற்றி நமது உடல் அங்கங்களுக்குத் தெம்பை கொடுங்கள்.

7. வயது ஏற ஏற ஹார்மோன் பிரச்னைகள் தலைதூக்கும். இதற்கு நல்ல அமைதியான மனமாற்றம் மற்றும் சமச்சீரான சத்தான காய்கறிகளை எடுத்துக்கொள்வது அவசியம்.

8. உங்கள் வயதுடையோரிடம் மனம் விட்டுப் பேசுங்கள். உங்கள் வயதுக்கு கீழ் உள்ளவர்களுடன் விளையாடி மகிழுங்கள். உற்சாகம் தானாக வரும். எதையும் எதிர்பார்க்காமல் அன்பைத் தாருங்கள். மனம் அமைதி பெறும். முக்கியமாக, உறவுகளுடன் அதிகம் நெருங்குதல் மற்றும் அதிகம் விலகுதல் இன்றி சமநிலையில் இருப்பது நல்லது.

9. வயது என்பது வெறும் எண்ணிக்கை மட்டுமே. மனம் மட்டுமே நமது வசத்தில். நரை திரை விழுவது இயற்கையின் செயல். அந்த இயற்கையை கட்டுக்குள் வைப்பது நமது கடமை. வாழ்வது ஒரு முறைதான். அதில் இறுதிவரை நலமுடனும் மகிழ்வுடன் வாழ்வோம்.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT