வீடு / குடும்பம்

பயணத்தின்போது வாந்தி எடுப்பவரா நீங்கள்? உங்களுக்கு முத்தான பத்து யோசனைகள்!

எஸ்.விஜயலட்சுமி

சிலருக்கு பேருந்து, கார் போன்றவற்றில் பயணம் செய்யும்போது வாந்தி, தலைசுற்றல், மயக்கம் போன்றவை வரும். இது உற்சாகமான பயண மனநிலையைக் கெடுத்து, உடலையும் மனதையும் சோர்ந்து போகச் செய்யும். மலைப்பிரதேசத்துக்குச் செல்லும்போது இந்த நிலைமை இன்னும் மோசமாகும். இதனைத் தடுக்கும் சில எளிய வழிமுறைகளைக் காண்பதே இந்தப் பதிவின் நோக்கம்.

1. வெறும் வயிற்றோடு பயணம் செய்யக்கூடாது. எதுவும் சாப்பிடாமல் பயணம் செய்வது வாந்தி உணர்வைத் தவிர்க்க உதவும் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், அப்படிச் செய்வது அசிடிட்டியைக் கிளப்பி வாந்தியை வரவழைத்து விடும்.

2. வாகனப் பயணங்களின்போது, அதிக உணவு எடுத்துக்கொள்ளாமல் மிதமாக சாப்பிடுவது நல்லது. கண்டிப்பாக வறுத்த, பொறித்த உணவுகள், தின்பண்டங்களைத் தவிர்ப்பது நல்லது.

3.பயணத்தின்போது புத்தகங்களைப் படித்துக்கொண்டோ, மொபைலைப் பார்த்துக் கொண்டோ சென்றால் வாந்தி அல்லது குமட்டலை ஏற்படுத்தும். அதனால் அதைத் தவிர்ப்பது நல்லது.

4. ஒரு டம்ளர் எலுமிச்சை பழச்சாற்றில் சிறிது உப்பு, சர்க்கரை, மிளகுத்தூள் சேர்த்துக் குடிக்கலாம். பயணத்தின்போது புதினா இலைகளைச் சாப்பிடுவதும், எலுமிச்சையை அடிக்கடி நுகர்வதும் வாந்தி வருவதைத் தடுக்கும்.

5. பேருந்து அல்லது காரின் பின் இருக்கையில் உட்கார்ந்து பயணம் செய்வது தலை சுற்றலை ஏற்படுத்தும். எனவே, முன் இருக்கையில் அமர்ந்து பயணிப்பது நல்லது.

6. சிறிதளவு இஞ்சியை தோல் சீவி, மெல்லிய துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொண்டு, பயணத்தின்போது அதை அவ்வப்போது வாயில் போட்டு சுவைக்கவும்.

7. பயணத்தைத் துவக்கும் முன்னரே சிறிது சர்க்கரை அல்லது உப்புடன் வறுத்த கிராம்பு பொடியை ஒரு சிட்டிகை சாப்பிடுவது வாந்தியைத் தவிர்க்க உதவும்.

8. எலுமிச்சை, ஆரஞ்சு மற்றும் திராட்சைப்பழம் போன்ற சிட்ரஸ் பழங்களை சாப்பிடுவது நல்ல பலனைத் தரும். இவற்றில் உள்ள புளிப்புத் தன்மை பயணத்தின் போது வாந்தி வருவதைத் தடுக்கும்.

9. பயணத்தின்போது நன்றாக நிமிர்ந்து அமர்ந்து, நிதானமாக மூச்சை உள்ளிழுத்து விட வேண்டும். மனதையும், உடலையும் ரிலாக்ஸ் ஆக வைத்துக்கொள்ள வேண்டும். அவ்வப்போது காரை விட்டு கீழே இறங்கி சுத்தமான காற்றைச் சுவாசிப்பதும், இதற்கு நல்ல தீர்வைத் தரும்.

10. தினசரி ஒரு நெல்லிக்கனி என தொடர்ந்து ஒரு மாதம் சாப்பிட்டு வந்தால் இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வைக்கூடக் காணலாம்.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT