பேரக்குழந்தை -
தூக்கிக்கொண்டால் கை வலிக்கிறது,
இறக்கிவிட்டால் மனசு வலிக்கிறது!
- ஒவ்வொரு தாத்தா - பாட்டிக்கும் ஏற்படக்கூடிய அனுபவம்தான் இது.
ஆனாலும் அந்த நாலு வயதுப் பேரக்குழந்தையைத் தன் வசப்படுத்துவதில் தாத்தா, பாட்டி இருவருக்குமே அந்த வயதிலும் போட்டி உண்டு. அல்லது இதன் மூலம் அந்தக் குழந்தையின் பெற்றோரை (மகன் / மருமகள் - மகள் / மருமகன்) இம்ப்ரெஸ் செய்யும் உத்தியாகவும் அது அமைவதுண்டு.
பாட்டிக்குப் பிரச்னை இல்லை. விதவிதமாக ஸ்நாக்ஸ் செய்து பேரக்குழந்தையை அசத்த முடியும். ஆனால் தாத்தா பாடுதான் திண்டாட்டம்.
குழந்தைக்குச் சமமாக ஓடியாடத் தெம்பிருப்பதில்லை. ‘தாத்தா, ஹைட் அண்ட் ஸீக் விளையாடலாம்,’ என்று கேட்கும் குழந்தைக்கு ஈடுகொடுக்க முடியாது. குழந்தையைவிட பருமனான, உயரமான உடல் என்பதாலேயே எதற்குப் பின்னாலும் ஒளியமுடியாத அவஸ்தையை, அந்தக் குழந்தை நம்மைக் கண்டுபிடித்துவிடுவதாகிய குதூகலத்தில் மறக்கவேண்டும்; குழந்தையுடன் சேர்ந்து சந்தோஷப்படவேண்டும். அல்லது, ‘உனக்கு ஒரு கதை சொல்றேன், வா,’ என்று வலுக்கட்டாயமாக இழுத்து வைத்துக் கதை சொல்லவேண்டும். ஆனால் அதற்கு முன்னாலேயே ‘பெப்பா பிக்’, ‘மிஸ்டர் பீன்’, ‘சுப்பண்டி’ என்றெல்லாம் கார்ட்டூனாக டிவியிலும், மொபைலிலும் பார்த்துவிடும் குழந்தைக்கு, தாத்தா சொல்லும் கதையில் சுவாரஸ்யம் இருப்பதில்லை. அப்படியே அன்புக்குக் கட்டுப்பட்டு, அல்லது நிர்ப்பந்தத்துக்கு உட்பட்டு, தாத்தா சொல்லும் புராணக் கதைகளைக் கேட்கும் குழந்தை, ஏடாகூடமாகக் கேள்விகள் கேட்டு தாத்தா திணறுவதைக் கொண்டாடும். ‘தாத்தாவுக்கு ஒண்ணுமே தெரியலே’ என்று நற்சான்றும் வழங்கும். (இப்போது மகன் / மருமகள் - மகள் / மருமகனுக்கும் தர்மசங்கடம்.)
பேரக் குழந்தையை முழுமையாக இம்ப்ரெஸ் செய்ய ஒரேவழி - குழந்தையை வெளியே அழைத்துச் செல்வதுதான். கூடவே கனமான பர்ஸ் அல்லது டெபிட் / கிரெடிட் கார்டுகளையும் எடுத்துச் செல்லவேண்டியது கட்டாயம்.
ஆனாலும் இரவில் அருகில் படுத்தபடி ‘செல்லத் தாத்தா’ என்று சொல்லிப் பிஞ்சுக் கரங்களால் கழுத்தைக் கட்டிக்கொள்ளும்போது அந்தப் பாசத்தில் தாத்தாவின் மனம் நெகிழும். வயது காரணமாகத் தூக்கமும் வராதா, பக்கத்திலேயே ஒரு மலர்போலத் தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தையை நெஞ்சு விம்ம, கண்களில் நீர்த் துளிர்க்க, கை தடவிக் கொடுக்க, மனசு ஆசிர்வதிக்கும். குழந்தை கைகளால் நெட்டியும், கால்களால் உதைத்தும், தாத்தாவை கட்டிலின் விளிம்புக்கே ஒதுக்கினாலும், அந்தத் தள்ளு முள்ளும் தாத்தாவின் உடம்புக்கு ஒத்தடம் கொடுத்தாற்போலதான் இருக்கும்.
விழித்தெழுந்தால் மறுநாள், மறுபடியும் தொடரும்……
என்ன தாத்தாக்களே நான் சொல்வது சரிதானே?