Cycling 
வீடு / குடும்பம்

ஆரோக்கியப் பாதையில் இட்டுச் செல்லும் சைக்கிள் ரைடிங்!

பொ.பாலாஜிகணேஷ்

சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பு வரை கூட மக்களிடையே ஆரோக்கியமான உணவும், அதிகமான உடல் உழைப்பும் இருந்து வந்தது. ஆனால், தற்போது அது நாளுக்கு நாள் குறைந்து, ஆரோக்கியமான உணவும் இல்லை, உடல் உழைப்பும் இல்லை. இதுவே விதவிதமான நோய்கள் பெருகக் காரணமாக அமைகிறது.

இதன் காரணமாகவே தற்போது மருத்துவர்கள், ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளுங்கள், உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள், நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள் என்று கூறிக்கொண்டே இருக்கிறார்கள். அந்த வகையில் நம் உடலை ஆரோக்கியமாக வைக்க உதவும் சைக்கிளிங் பயிற்சி குறித்து இப்பதிவில் பார்ப்போம்.

சைக்கிள் பயிற்சி, உச்சி முதல் உள்ளங்கால் வரை பயனளிக்கிறது. சைக்கிள் ஓட்டும்போது, கால் பாதங்கள் மட்டுமல்லாமல், உடலின் அத்தனை உறுப்புகளையும் அது இயங்க வைக்கிறது. இதனால் நாள் ஒன்றுக்கு அரை மணி நேரம் சைக்கிள் ஓட்டினால் 300 கலோரி கொழுப்பு எரிக்கப்படுகிறது. சைக்கிள் ஓட்டத் தொடங்கிய முதல் 10 நிமிடங்களில் உடலில் இருக்கும் கெட்ட நீர் வெளியேறுகிறது. அடுத்த 20 நிமிடங்கள் தொடரும்போது குளுக்கோஸ் எரிக்கப்படுகிறது. 30 நிமிடங்களில் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகள் குறையத்தொடங்குகிறது. எனவே, என்ன செய்தும் உடல் எடை மட்டும் குறையவில்லை என்று அலுத்துக் கொள்பவர்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம்தான் சைக்கிள் பயிற்சி.

வயது பேதமின்றி தற்போது வரத்தொடங்கியிருக்கும் மூட்டுவலியைத் தொடர்ச்சியான சைக்கிள் பயிற்சியின் வழியாக குறைக்கலாம். உடலில் உள்ள அனைத்து மூட்டுகளும் இறுகும் தன்மை மாறி வலுவான மூட்டாக மாறுகிறது. கை, தொடை, முதுகுதண்டுவடம், இடுப்புப் பகுதி, கால் தசைகள் வலுவாகிறது. மேலும் சைக்கிள் ஓட்டுவதனால், இதயத்துடிப்பு சீராகும். வயது முதிர்வு காரணமாக ஏற்படும் இதய வலுவிழப்பு, இதய அடைப்பு போன்ற பிரச்னைகள் தடுக்கப்படும்.

டைப் 1 மற்றும் டைப் 2 சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். தினமும் அரை மணி நேரம் சைக்கிள் ஓட்டினால், மூளையின் செயல்பாடுகள் அதிகரித்து சுறுசுறுப்பு உண்டாகும். சைக்கிள் ஓட்டுவதால் கால் தசைகள், தொடைப்பகுதி தசைகள், எலும்புப் பகுதிகள், முதுகுத் தண்டுவடம், இடுப்புப் பகுதி போன்றவை வலிமை பெறும். இரத்த அழுத்தம் தொடர்பான பிரச்னைகள் வராது. மன அழுத்தம், மனச்சோர்வு போன்ற பிரச்னை இருப்பவர்களுக்கு அவை நீங்கி மனதளவில் புத்துணர்ச்சி கிடைக்கும். அதிக வியர்வை வெளிப்படுவதால், உடலிலுள்ள கெட்ட கொழுப்புகள் குறையும். மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் போன்றுவற்றுக்கு முக்கியமான காரணி, உடல் பருமன் சைக்கிள் ஓட்டுவதன் மூலம் உடல் பருமன் தடுக்கப்படுவதால் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் குறைகிறது.

எவ்வளவு நேரம் சைக்கிள் பயிற்சி செய்யலாம்: குறைந்தது அரை மணி நேரமாவது தினசரி சைக்கிள் பயிற்சி செய்வது அவசியமாகும். அது வீட்டிலிருந்தபடியே செய்தாலும் சரி அல்லது வெளியில் சைக்கிள் பயிற்சி செய்தாலும் சரி, வெளியில் சைக்கிள் பயிற்சி செய்யும்போது முதல் நாளிலேயே வேகமாக ஓட்ட முயற்சிக்காமல், சிறிது சிறிதாக வேகத்தை அதிகரிக்கலாம். அதுபோன்று முதலில் 5 கி.மீ. தூரம் வரை பழகலாம். அதன் பிறகு படிப்படியாக தூரத்தை அதிகரிக்கலாம்.

குழந்தைகள் பள்ளி செல்லும்போது பள்ளிக்கூடம் 2 கிலோ மீட்டருக்குள் இருந்தால் முடிந்தவரை வாகனங்களைத் தவிர்த்துவிட்டு சைக்கிளில் செல்லப் பழக்கலாம். இதனால், சிறு வயதிலேயே குழந்தைகள் உடல் பருமன் என்னும் வலைக்குள் சிக்கி தவிக்காமல் இருக்க உதவுகிறது. அதேபோன்று பெரியவர்களும் வாரத்தில் ஒரு நாள் அலுவலகத்துக்கு சைக்கிளில் சென்று பழகலாம். இதனால் பெட்ரோல் செலவுடன் காற்று மாசு அடைவதும் தடுக்கப்படும். சைக்கிள் ஓட்டுபவர்கள் எடுத்தவுடன் வெகு தூரம் பயணம் செய்ய வேண்டாம். 15 நிமிடத்தில் தொடங்கி. கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தையும், தூரத்தையும் அதிகப்படுத்துங்கள்.

தாங்க முடியாத மூட்டு வலி, அதிக உடல் எடை, இதயக் கோளாறு போன்ற பிரச்னை உள்ளவர்கள் மருத்துவ ஆலோசனை பெற்று சைக்கிள் ஓட்டவும். வயது மற்றும் உடல்நிலையைப் பொறுத்தே சைக்கிள் ஓட்டும் நேரமும் வேகமும் அமைய வேண்டும். இன்சுலின் சுரப்பை அதிகரிப்பதிலும் மலச்சிக்கல் வராமல் குடல்களின் இயக்கம் சீராக இருக்கவும் முக்கியமாக உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கவும் அழகையும், ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் சைக்கிள் பயணம் உதவியாக இருக்கும்.

தோஷங்கள், பாவங்கள் போக்கும் பாப விமோசனப் பெருமாள்!

உலகின் எந்தப் பகுதிகளில் பறவைகளை அதிகம் பார்க்க முடியும்!

ஐஸ்கிரீமின் வரலாறு என்ன தெரியுமா? 

ஆயில் இல்லாமல் சமைப்பது ஆரோக்கியம் தருமா?

Janhvi kapoor beauty tips: ஜான்வி கபூரின் அழகின் ரகசியம் இதுதான்!

SCROLL FOR NEXT