declining joint families; Increasing crimes!
declining joint families; Increasing crimes! https://tamil.lifeberrys.com
வீடு / குடும்பம்

அருகி வரும் கூட்டுக் குடும்பங்களும்; பெருகி வரும் குற்றங்களும்!

சேலம் சுபா

காலை எழுந்ததும் செய்தித் தாள்கள் அல்லது தொலைக்காட்சி என எதைப் பார்த்தாலும் வன்முறை செய்திகளைக் கடக்காமல் இருக்க முடியாது. சமீபத்தில் ஒரு ஊரில் நிகழ்ந்த குடும்ப மரணம் எந்த உறவினருக்கும் தெரியவில்லை என்ற செய்தியைப் படிக்கும்போதே மனதில் பகீர் உணர்வு எழுகிறது.

எதனால் இந்த நிலை என சிந்தித்தால் வன்முறைகளுக்கான காரணங்கள் எதுவாக இருப்பினும், ஏதோ ஒரு வகையில் குடும்ப அமைப்பும் காரணமாவதைக் காண முடியும்.

அறிவியலும் கல்வியும் நவீன வசதிகளும் கொண்ட இந்தக் காலகட்டத்தில்தான் கட்டற்ற வன்முறைகளும் பெருகி வருகின்றன. நம் தாத்தா பாட்டி காலத்தில் வன்முறை என்பது பெயரளவில் வேண்டுமானால் இருந்திருக்கும். இதற்குக் காரணம் அன்று அத்தை, மாமா, சித்தி, சித்தப்பா, பெரியம்மா, பெரியப்பா என ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக மனிதர்கள் வாழ்ந்ததுதான்.

குற்றங்கள் நாளுக்கு நாள் பெருகி வரக் காரணம் ஒருவகையில் அருகி வரும் கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை என்று கூட கூறலாம். அன்று ஒன்றிணைந்து ஒரே வீட்டில் வாழ்ந்த உறவுக்காரர்களின் வாழ்க்கையில், ‘மன அழுத்தம்’ என்ற கவலையே  இல்லாமல் இருந்தது, வீட்டு நிர்வாகம் முதல் சமையல் பொறுப்பு வரை வேறு எந்த வேலையாக இருந்தாலும் சரி குடும்ப உறுப்பினர்கள் ஆளுக்கு ஆள் பிரித்துக் கொண்டு டென்ஷன் இல்லாமல் செய்வார்கள். அதேபோல் பொருளாதார பற்றாக்குறை ஏற்பட்டாலும், இதர பிரச்னைகள் ஆனாலும் சரி அனைவரும் ஒருங்கிணைந்தே அதனை எதிர்கொண்டனர்.

ஆனால், கல்வி, பணி நிமித்தம் கூட்டுக் குடும்பங்கள் சிதறி தனிக்குடித்தனத்தில் பெற்றோர், உற்றார் விட்டு, ‘நாமிருவர் நமக்கு ஒருவர்’ என வாழ்வதால் அனைத்துப் பிரச்னைகளையும் தீர்க்கும், சுமையைத் தாங்கும் வலிமையின்றி மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவோர் அதிகமாகி விட்டனர்.  இந்த மனப் பதற்றம் அல்லது மன அழுத்தம் தேவையற்ற பின்விளைவுகளை ஏற்படுத்துகிறது. மேலும் கண்டிக்கவோ பகிர்ந்து கொள்ளவோ ஆளின்றி குற்றச் செயல்களின் பக்கமும் கவனத்தை திருப்புகிறது.

உதாரணமாக, கணவன் குடிப்பது தெரிந்தால், அக்காலத்தில் வீட்டுப் பெரியவர்களிடம் சொல்லி அவனைத் திருத்தும் வாய்ப்பு இருந்தது. ஆனால், இன்றோ யாரிடம் சொல்வது? அவர்கள் இருவருக்கும் இதனால் எழும் பிரச்னைகள் ஒரு கட்டத்தில் கைகலப்பில் முடிந்து, உச்சகட்டமாக குற்றச்செயலையும் செய்யத் தூண்டுகிறது.

தற்போது உலகம் முழுவதும் வியாபித்து நிற்கின்றது இதுபோன்ற குடும்ப வன்முறைகள். இப்போதைய ஒழுங்கற்ற சூழலில் வன்முறையை ஒழித்து அமைதியைப் பெறுவது என்பது நடைமுறைக்கு சாத்தியமில்லாத காரியம் என்ற மனநிலையே நமக்கு உள்ளது. ஆனால், இதற்குத் தீர்வு நிச்சயம் உண்டு. உறவுகளைப் பிரிந்த தனி நபர்களும், குடும்பங்களும் இணைந்து ஒன்றாக வாழ முயற்சிக்க வேண்டும்.

குறைந்தபட்சம் அவ்வப்போது உறவுகளுடன் உரையாடி ஒருவர் வீட்டுக்கு ஒருவர் சென்று குழந்தைகளுடன் மனம் விட்டுப் பேசி வருவதையாவது செய்ய வேண்டும். தனித்தீவாக குடும்பத்தை மாற்றாமல் உறவுகள் வந்து செல்லும் வேடந்தாங்கலாக மாற்றுவது மட்டுமே வன்முறையற்ற எதிர்காலத்தைத் தரும்.

எனவே, கூட்டுக் குடும்பம் எனும் கூடுகளை மீண்டும் உருவாக்க நாம் அனைவரும் சிந்தித்துச் செயல்பட வேண்டும்.

தேனுடன் லவங்கப்பட்டை சேர்ந்து வழங்கும் 11 அற்புதப் பலன்கள்!

சிவபெருமானை எந்த மலர் கொண்டு வழிபட என்ன பலன் கிடைக்கும் தெரியுமா?

கனமழையின் போது ஏசி பயன்படுத்தலாமா? நன்மைகளும், தீமைகளும்! 

நதியின் நடுவில் ஈரக் கருவறை உள்ள கோயில் எது தெரியுமா?

ஒருவர் ஏன் கட்டாயம் மருத்துவக் காப்பீடு எடுக்க வேண்டும்? வாங்க தெரிஞ்சுக்கலாம்!

SCROLL FOR NEXT