இந்தக் காலத்தில் சோஷியல் மீடியாக்களின் மோகம் மக்களிடையே எவ்வளவு அதிகமாக உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே! காலையில் எழுந்தது முதல் இரவு உறக்க செல்லும் வரை கையில் போனை வைத்துக்கொண்டிருப்போர் பலரை பார்த்திருப்போம். இரவில் சரியாக தூக்கம் வராமல்போவதற்கும் இது ஒரு காரணமாகும். இதனால் போகப் போக தூக்கம் குறைந்து, ‘இன்சோம்னியா’ போன்ற நோய்கள் வருவதற்குக் காரணமாகவும் அமைந்து விடுகிறது.
சமீபத்தில் ஒரு ஆங்கிலப் படம் பார்த்தேன். அந்தப் படத்தில் வரும் கதாநாயகி சோஷியல் மீடியா மோகம் அதிகம் கொண்டவர். அவருக்கென சில பின்தொடர்வோர் இருப்பார்கள். இதனால் தினமும் கதாநாயகி சோஷியல் மீடியாவில் தன்னைப் பற்றிய எல்லா விஷயங்களையும் வெளிப்படையாகக் கூறுவார்.
அவர் எங்கே செல்லப்போகிறார், எங்கே தங்கப்போகிறார், தனியாக இருக்கிறாரா அல்லது நண்பர்களுடன் இருக்கிறாரா? எத்தனை நாட்கள் தங்கப்போகிறார் போன்ற ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள் அனைத்தையும் வெளிப்படையாக எல்லோரிடமும் கூறுவார்.
இதனால் என்ன பெரிய பிரச்னை வந்துவிடப் போகிறது என்று நினைக்கிறீர்களா?
உங்களை சோஷியல் மீடியாவில் பின்தொடர்வோரில் எத்தனை பேர் நல்லவர்கள், எத்தனை பேர் கெட்டவர்கள், எத்தனை பேர் ஏமாற்று பேர்வழி போன்றவை உங்களுக்குத் தெரியாது. அப்படியிருக்கும்போது உங்களுடைய அன்றைக்கான கால அட்டவணையை எல்லோரிடமும் பகிர்ந்துகொள்வது மிகவும் ஆபத்தாகும். நான் இந்த ஹோட்டலில் இந்த குறிப்பிட்ட அறை எண்ணில் இருக்கிறேன் போன்ற தகவல்களைப் பார்த்துவிட்டு அதே ஊரில் இருக்கும் உங்களை சோஷியல் மீடியாவில் பின்தொடர்வோர் நிஜமாகவே உங்களைப் பின்தொடர்ந்து வர வாய்ப்புள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், அவர்களுக்கு நீங்கள் யார் என்பது நன்றாகத் தெரியும். ஆனால், உங்களுக்கு அவர்கள் யாரென்று தெரியாது.
இதுபோன்ற விஷயங்களை ஆண்கள் செய்வதே ஆபத்தாகும். ஆனால், பெண்களுமே விபரீதம் தெரியாமல் இதுபோன்ற விஷயங்களை பொதுவாக பகிர்ந்துகொள்வதுதான் வருத்தத்திற்கு உரிய விஷயமாக உள்ளது. உங்களைப் பற்றி முன்னதாகவே கொடுக்கப்படும் தகவல்கள் உங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். அதனால் எந்நேரமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.
சில லைக்ஸ்களுக்கு ஆசைப்பட்டு இதுபோன்ற விபரீத செயல்களை செய்து விட்டு பின்பு வருந்துவது வீணாகும். நீங்கள் ஒரு சுற்றுலா தலத்திற்கு சென்று வந்த பிறகு, நான் அந்த இடத்திற்குச் சென்றேன் என்று கூறுவதோ, அங்கே எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிடுவதோ தவறில்லை. அதனால் உங்களுக்கு எந்த பாதிப்பும் வரப் போவதில்லை.
நான் ஊருக்கு போகப்போகிறேன். இரண்டு நாட்கள் வீட்டிலேயிருக்க மாட்டேன் போன்ற தகவல்களை சோஷியல் மீடியாவில் போட்டால், நீங்கள் ஊருக்கு போய் விட்டு திரும்பி வீட்டிற்கு வந்து பார்க்கும்போது முழு வீட்டையும் கொள்ளை அடித்துவிட்டு போய் விடுவார்கள். இப்போது நான் சொல்ல வரும் வித்தியாசம் புரியும் என்று நம்புகிறேன்.
நாம் சோஷியல் மீடியாவில் பார்க்கும் மற்றவர்களின் மகிழ்ச்சியான, செவ்வ செழிப்பான, அழகான வாழ்க்கை வாழ்வது போல காட்டப்படுவதெல்லாம் வெறும் மாய பிம்பமே எண்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். அதைப் பார்த்து ஏமாந்து நாமும் சூடு போட்டுக்கொள்ளக் கூடாது. எப்போதும் நம்மிடம் இருப்பதை வைத்து வாழ்வதே சிறந்ததாகும்.
எனவே, சோஷியல் மீடியாக்களை நம் வாழ்வில் ஒரு அங்கமாக வைத்துக்கொள்ளலாம். அதையே வாழ்க்கையாக எடுத்துக்கொண்டு வாழக்கூடாது என்பதை உணர்ந்துகொள்வது நல்லதாகும்.