மஞ்சள் குங்குமம் 
வீடு / குடும்பம்

சுத்தமான மஞ்சள் குங்குமத்தை எப்படி சுலபமாகத் தயாரிப்பது தெரியுமா?

ஆர்.வி.பதி

ஞ்சள் மற்றும் குங்குமம் இரண்டுமே மங்கலகரமானவை. குங்குமத்தைப் பற்றி எல்லோருக்கும் தெரியும். அதென்ன ‘மஞ்சள் குங்குமம்’ என்று யோசிப்பது புரிகிறது.   மஞ்சள் குங்குமம் என்றால் என்ன? மஞ்சள் குங்குமத்தை வீட்டிலேயே எப்படித் தயாரிப்பது? என்பதை பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மஞ்சள் என்பது இயற்கையில் கிடைப்பது. மஞ்சளில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று விரலி மஞ்சள், மற்றொன்று குண்டு மஞ்சள். குங்குமம் என்பது சில பொருட்களைச் சேர்த்து தயாரிக்கப்படுவதுதான். குங்குமம் தயாரிக்கத் தேவையான மிக முக்கியமான மூலப்பொருள் குண்டு மஞ்சள். எனவேதான் இது மஞ்சள் குங்குமம் என்று அழைக்கப்படுகிறது. சுத்தமான குங்குமத்தை நீங்களே சுலபமாகத் தயாரிக்கலாம்.

குங்குமம் தயாரிக்கத் தேவையான முக்கியமான பொருட்கள் குண்டு மஞ்சள், வெங்காரம் எனும் வெண்காரம், படிகாரம், நல்லெண்ணெய், எலுமிச்சை சாறு ஆகும். இவற்றை வைத்தே குங்குமம் தயாரிக்கப்படுகிறது.

வெங்காரம் எனப்படும் வெண்காரம் மற்றும் படிகாரம் இரண்டும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். இதில் வெங்காரம் பத்து கிராம், படிகாரம் பத்து கிராம் வாங்கிக்கொள்ள வேண்டும். மளிகைக் கடைகளில் கிடைக்கும் குண்டு மஞ்சள் நூறு கிராம் வாங்கிக்கொள்ளுங்கள். நல்லெண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறை சிறிதளவு எடுத்துக் கொள்ளுங்கள்.

முதலில் வெங்காரம் மற்றும் படிகாரத்தை பொடியாக உடைத்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் மஞ்சளை சிறு துண்டுகளாக உடைத்துக்கொள்ள வேண்டும்.   ஒரு பெரிய எலுமிச்சைப் பழத்தின் சாறைப் பிழிந்து கொள்ளவும்.

முதலில் சிறிதாக உடைத்த மஞ்சளில் எலுமிச்சைச் சாற்றைக் கலக்கவும். பின்பு வெங்காரத் துண்டுகளையும் படிகாரத் துண்டுகளையும் அதனோடு கலக்கவும்.  அனைத்தையும் ஒன்றாகக் கலந்து அதை நிழலில் காய வைக்கவும். அவ்வப்போது ஒரு சிறு கரண்டியால் அதைக் கலந்து விடவும். நன்றாகக் கலந்ததும் மஞ்சள் குங்குமம் நிறத்தை அடைந்திருக்கும். இப்போது சிறிதளவு நல்லெண்ணெயை இதில் சேர்த்து நன்கு கலந்து விடவும். குங்குமம் அடர் மெரூன் நிறத்தை அடையும். இந்த கலவையானது ஈரமின்றி நன்கு உலர்ந்ததும் அதை மிக்சியில் போட்டு அரைத்து திரும்பத் திரும்ப சலித்து எடுக்கவும். தூய்மையான மஞ்சள் குங்குமம் தயாராகி விட்டது. முற்காலத்தில் இந்தக் கலவையை உரலில் போட்டு நன்கு இடித்து திரும்பத் திரும்ப சலித்து எடுப்பார்கள்.

குங்குமத்தை காகிதத்தில் மடித்துப் பின்னர் திறந்து பார்த்தால் காகிதத்தில் மஞ்சள் நிறம் காணப்படும். இதுவே ஒரிஜினல் குங்குமம் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். சில மணி நேரம் செலவிட்டால் நீங்களே வீட்டில் தூய்மையான மங்கலகரமான மஞ்சள் குங்குமத்தைத் தயார் செய்து விடலாம்.

அதிகளவு புரதச் சத்து தரக்கூடிய 6 வகை மாவுப் பொருட்கள்!

ஐயப்பனின் சபரிமலை பதினெட்டு படிகள் உணர்த்தும் தத்துவம்!

கோதுமைப் புல்லின் ஆரோக்கிய நன்மைகள்!

கார்த்திகை மாத சோமவார விரதம் மற்றும் சங்காபிஷேகம் ஏன் சிவபெருமானுக்கு விசேஷம்?

ஓ! இப்படித்தான் நம்ம உடல் வெப்பத்தை கட்டுப்படுத்துதா? 

SCROLL FOR NEXT