ஒரு தொழிற்சாலை அல்லது நிறுவனத்தில் வேலை செய்யும்போது ஊழியர்கள் மறந்தும் கூட செய்யக்கூடாத 10 தவறுகளை பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. பொருந்தாத டிரஸ் கோட்: நாம் எவ்வளவுதான் மாடனாக இருந்தாலும் பணிபுரியும் அலுவலகத்திற்கு ஏற்ப டிரஸ் செய்துகொள்வது அவசியம். வகிக்கும் பதவிக்கேற்ப உடை அணிந்து கொண்டால்தான் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். உடைகள் நேர்த்தியாகவும் பொருத்தமாகவும் இருப்பது அவசியம். பொருத்தம் இல்லாத கேஷுவல் ஆடைகளை ஒருபோதும் அலுவலகத்திற்கு அணிந்து செல்லக்கூடாது.
2. மோசமான நேர நிர்வாகம்: அலுவலகத்திற்கு அடிக்கடி தாமதமாக வருவது, செய்ய வேண்டிய வேலைகளை தள்ளிப்போடுவது, கொடுக்கப்பட்டுள்ள கால அளவுக்குள் செய்யாமல் சக ஊழியர்களை அலைக்கழிப்பது என மோசமான நேர நிர்வாகம் கூடாது. இது சம்பந்தப்பட்ட நபருக்கு மட்டுமில்லாமல், உடன் பணிபுரிபவர்கள் மற்றும் மேலதிகாரிகளுக்கும் மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும். மோசமான பெயரும் வந்து சேரும்.
3. நிறுவன கலாசாரத்தை புறக்கணித்தல்: ஒவ்வொரு நிறுவனத்திற்கென்றும் தனிப்பட்ட கலாசாரம் மற்றும் விதிமுறைகள் இருக்கும். அதற்கேற்ப நடந்துகொள்ள வேண்டும். நிறுவனத்தின் நிகழ்வுகள் மற்றும் சமூகக் கூட்டங்களில் பங்கேற்பது, நிறுவனத்தின் மதிப்புகள் மற்றும் கொள்கைகளுக்கு மதிப்பளித்தல் என்று நிறுவனம் சார்ந்து இயங்குவது அவசியம்.
4. சுத்தமற்ற பணியிடம்: தான் வேலை செய்யும் மேசை மேல் காகிதக் குப்பைகள், தேவையில்லாத பொருட்களை அடுக்கி வைத்திருப்பது கூடாது. பொருட்களை அழகாக அடுக்கி சுத்தமாக வைத்திருப்பது மிகவும் அவசியம். அப்போதுதான் ஏதாவது தேடினாலும் உடனே கிடைக்கும்.
5. எல்லைகளை மதிக்காமல் இருப்பது: உடன் பணிபுரியும் ஊழியர்களிடமும் மற்றும் மேலதிகாரிகளுடனும் குறிப்பிட்ட எல்லைக் கோட்டை மீறாமல் நடந்து கொள்வது மிகவும் அவசியம். தேவை இல்லாமல் பிறரின் அந்தரங்க விஷயத்தில் தலையிட்டு தனது மரியாதையை தானே குறைத்துக் கொள்ளக் கூடாது.
6. சச்சரவுகளை வளர்ப்பது: சக ஊழியர்களுடன் விவாதம், வாக்குவாதம் ஏற்படும்போது பொறுமையை கடைப்பிடிப்பது அவசியம். செய்யும் பணிக்கேற்ப பக்குவத்துடனும் நிதானத்துடனும் தனது கருத்துக்களை உறுதியான குரலில் அமைதியாக எடுத்துச் சொல்ல வேண்டும்.
7. அக்கறையின்றி இருப்பது: எந்த விஷயத்திலும் பொறுப்பில்லாமல் அக்கறையில்லாமல் இருப்பது மிகவும் தவறு. கொடுக்கப்பட்ட பணிகளுக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லாதது போல நடந்து கொள்ளக் கூடாது. சம்பளத்திற்காக வேலை செய்யாமல் உண்மையான அக்கறையுடன் வேலை செய்வது முக்கியம்.
8. உதவாமல் இருப்பது: சக பணியாளர்களுக்கு தேவைப்பட்ட உதவிகளை மனமுவந்து செய்ய வேண்டும். தெரியாததை சொல்லிக் கொடுக்கும் அதேநேரத்தில், தனக்கு ஏற்படும் சந்தேகங்களை தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெளிவு பெறுவது மிகவும் அவசியம். அலுவலகம் என்பது தனிநபர் சார்ந்த வேலையல்ல. அது ஒரு கூட்டு முயற்சி.
9. தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையை குழப்பிக்கொள்வது: அலுவலகத்தில் இருக்கும்போது வீட்டையும், வீட்டில் இருக்கும்போது அலுவலகத்தையும் நினைக்கக் கூடாது. அலுவலகத்தை அடைந்ததுமே மனதில் இருக்கும் கவலைகளை மூட்டை கட்டி வைத்துவிட்டு தனிப்பட்ட பிரச்னைகளை பற்றி அக்கறை கொள்ளாமல் நிறுவனத்தின் வேலைகளை முழுமனதோடு பார்க்க வேண்டும்.
10. சுய முன்னேற்றத்தை புறக்கணித்தல்: நவீன தொழில்நுட்பம் பெருகிவரும் இந்தக் காலத்தில் தினமுமே தன்னை தொடர்ந்து கற்றலில் ஈடுபடுத்திக் கொண்டு முன்னேற்றிக் கொள்வது மிக அவசியமாகும். தன்னுடைய சுய முன்னேற்றம் தனக்கு மட்டும் நன்மை செய்வதோடு அல்லாமல், பணிபுரியும் நிறுவனத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும். பயிற்சி மற்றும் மேம்பாட்டு வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.