ஷாப்பிங் பலருக்கும் பிடித்தமான வார்த்தை. தேவை இருக்கிறதோ இல்லையோ பொருட்களை வாங்கிக் குவிப்பது பலரின் பழக்கமாகிவிட்டது. ஒருவருக்கு ஷாப்பிங் அடிமை இருக்கிறதா என்பதை உணர்த்தும் எட்டு அறிகுறிகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
ஷாப்பிங் அடிக் ஷன்: தனக்கும், வீட்டிற்கும் தேவை இருக்கிறதோ இல்லையோ துணிமணிகள், பாத்திரங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி குவித்துக் கொண்டே இருப்பதுதான் ஷாப்பிங் அடிமைத்தனத்தின் அடையாளம். ஆங்கிலத்தில் இதை கம்பல்சிவ் பையிங் டிஸ்ஸார்டர் என்று சொல்வார்கள்.
8 அறிகுறிகள்:
1. ஷாப்பிங்கில் ஆர்வம்: ஷாப்பிங் அடிமைத்தனம் மிக்க நபர்கள் எப்போதும் பொருட்களை வாங்கத் திட்டமிடுவார்கள். அதற்காக கடைகள் அல்லது ஆன்லைன் கடைகளைப் பற்றி சிந்தித்துக்கொண்டு அதில் அதிக நேரம் செலவழிக்கவும் செய்வார்கள்.
2. மனநிலையை மோசமாக்குதல்: ஏதாவது பொருளை வாங்க முடியாவிட்டால் சம்பந்தப்பட்ட நபருக்கு எரிச்சல் மற்றும் பதற்றம் ஏற்படும். கடைசியாக ஒரு பொருள் வாங்கி சிறிது காலம் ஆகியிருந்தால் மன அழுத்தம் மோசம் அடையக் கூடும். அதனால் அவர்கள் கைகள் நடுங்கத் தொடங்கி எப்போது ஷாப்பிங் செல்வது என்று ஏங்கத் தொடங்கி விடுவார்கள்.
3. ஷாப்பிங்கில் சந்தோஷம்: ஷாப்பிங் பழக்கமுள்ள நபர்கள் பொருட்களை வாங்கும்போது உயர்ந்த அல்லது மிகுந்த சந்தோஷத்தை அனுபவிக்கின்றார்கள். அவர்களது மனப்பதற்றம் மற்றும் மனச்சோர்வை போக்க ஒரு வழியாக அதை உணர்கிறார்கள். தற்காலிக உணர்ச்சி நிவாரணம் அளிக்கிறது ஷாப்பிங்.
4. வரவுக்கு மேல் செலவும், நிதிச் சிக்கலும்: தேவையில்லாத பொருட்களை வாங்கி குவிப்பதால் அதிக பணம் செலவாகிறது. இதனால் நிதிச்சிக்கல் ஏற்படுகிறது. ஆனாலும், கடன் வாங்கக் கூட தயங்க மாட்டார்கள். செலுத்தப்படாத பில்கள் மற்றும் இஎம்ஐயில் பொருட்கள் வாங்குதல், டெபிட் கார்டு உபயோகித்தல் போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள். தங்கள் நிதி நிலைமையைப் பற்றி அறிந்திருந்தாலும் தேவையற்ற பொருட்களை வாங்குகிறார்கள்.
5. அன்றாட வேலைகளில் பாதிப்பு: ஷாப்பிங்கில் அதிக நேரத்தை செலவு செய்வதால் வீட்டு வேலை மற்றும் அலுவலகப் பணி போன்றவை பாதிக்கப்படுகின்றன. தனது அன்றாட பொறுப்புகள் மற்றும் பொழுதுபோக்குகளை கூட புறக்கணிப்பார்கள். மேலும், தங்களது குடும்பத்தினருடன் நேரம் செலவழித்தல் குறைந்து அவர்களுடைய உறவு பாதிக்கப்படும்.
6. குற்ற உணர்வு: பல சமயங்களில் தேவையில்லாத பொருட்களை வாங்கி விட்டோமே என்று வருந்துகிறார்கள். கையில் பணம் இல்லாதபோது குற்ற உணர்வை அனுபவிக்கிறார்கள். ஆனாலும், ஷாப்பிங் செய்வதை அவர்களால் நிறுத்த முடியவில்லை.
7. வாங்கியதை மறைத்தல்: வீட்டில் சண்டை சச்சரவு ஏற்படாமல் இருக்க வாங்கிய பொருள்களையும் பில்களையும் மறைக்கிறார்கள். மேலும், உண்மையான விலையை விட குறைவான விலையை சொல்கிறார்கள். பொய் சொல்லும் குணமும் மறைக்கும் குணமும் வளர்கிறது.
8. ஷாப்பிங்கை நிறுத்த இயலாமை: தொடர்ந்து ஷாப்பிங் செய்துகொண்டே இருந்தாலும் அதை நிறுத்த முடியாமல் தவிப்பார்கள். அவர்களுக்கு சாத்தியமற்ற செயலாகத் தோன்றுகிறது.
இதனால் ஏற்படும் பாதிப்புகள்: ஷாப்பிங்கில் அடிமையானவர்கள் பெரும்பாலும் தனிமை, சலிப்பு, சோகம் போன்ற எதிர்மறை உணர்ச்சிகளுக்கு ஆளாகிறார்கள். தங்கள் நடத்தை மீது கட்டுப்பாடு இல்லாத நிலைமை உருவாகிறது. இதனால் தனது குடும்பம் மற்றும் உறவுகளிடம் விவாதம் மற்றும் சண்டை சச்சரவு ஏற்பட்டு உறவுகளில் விரிசல் ஏற்படக் காரணமாக அமைகிறது. அதனால் தகுந்த நிதி ஆலோசனை பெற்று இந்தப் பழக்கத்தை குறைத்துக்கொள்வது அவர்களுக்கு நன்மை பயக்கும்.